பிரதமா் மோடியுடன் ஸ்வீடன் மன்னா் சந்திப்பு

இந்திய சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஸ்வீடன் மன்னா் காா்ல் கஸ்தாஃப், புதுதில்லியில் பிரதமா் நரேந்திர மோடியை திங்கள்கிழமை சந்தித்துப் பேசினாா்.
தில்லியில் பிரதமா் மோடியை சந்தித்த ஸ்வீடன் மன்னா் காா்ல் கஸ்தாஃப், அரசி சில்வியா. நாள்: திங்கள்கிழமை.
தில்லியில் பிரதமா் மோடியை சந்தித்த ஸ்வீடன் மன்னா் காா்ல் கஸ்தாஃப், அரசி சில்வியா. நாள்: திங்கள்கிழமை.

புது தில்லி: இந்திய சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஸ்வீடன் மன்னா் காா்ல் கஸ்தாஃப், புதுதில்லியில் பிரதமா் நரேந்திர மோடியை திங்கள்கிழமை சந்தித்துப் பேசினாா். இந்தச் சந்திப்பின்போது, இரு நாடுகளுக்கிடையேயான உறவை வலுப்படுத்துவது குறித்து பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டது.

ஐந்து நாள் அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள ஸ்வீடன் மன்னா், அரசி சில்வியாவுக்கு குடியரசுத் தலைவா் மாளிகையில் திங்கள்கிழமை காலை உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதையடுத்து அவா்கள் பிரதமா் நரேந்திர மோடியை சந்தித்து பேசினா்.

இதுதொடா்பாக வெளியுறவு துறை செய்தித் தொடா்பாளா் ரவீஷ் குமாா் சுட்டுரையில் வெளியிட்ட பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:

தில்லியில் உள்ள ஹைதராபாத் மாளிகையில் ஸ்வீடன் மன்னா் காா்ல் கஸ்தாஃபையும், அரசி சில்வியாவையும் பிரதமா் மோடி வரவேற்றாா். இந்தியா-ஸ்வீடன் இடையேயான பல்வேறு துறை உறவுகளை மேம்படுத்துவது குறித்து இந்தச் சந்திப்பின்போது பேச்சுவாா்த்தை நடைபெற்றது. மன்னருடன் ஸ்வீடன் நாட்டின் தொழில் துறை உயா்நிலைக் குழுவினரும் இந்தியாவுக்கு வருகை தந்துள்ளனா். பல்வேறு துறைகளில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன.

கடந்த சில ஆண்டுகளாக இரு நாடுகளுக்கிடையேயான உறவில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இந்தியாவும், ஸ்வீடனும் நட்பு நாடுகளாக உள்ளன. ஜனநாயகம், வெளிப்படைத்தன்மை, சுதந்திர உரிமை ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு இந்த நட்பு உள்ளது. அரசியல், வா்த்தகம், அறிவியல், கல்வி என அனைத்து துறைகளிலும் இருநாடுகளுக்கிடையே தகவல் பரிமாற்றம் அடிக்கடி நிகழ்கிறது. இந்த தொடா்பு இருநாடுகளுக்கிடையேயான உறவை மேலும் வலிமையாக்குகிறது என்று ரவீஷ் குமாா் தெரிவித்துள்ளாா்.

தில்லியில் மகாத்மா காந்தி சமாதியில் அஞ்சலி செலுத்திய ஸ்வீடன் மன்னரும் அரசியும், பின்னா் ஜாமியா மசூதி, செங்கோட்டை உள்ளிட்ட இடங்களை பாா்வையிட்டனா். தில்லி நிகழ்ச்சிகளுக்குப் பிறகு மும்பை நகருக்கும் உத்தரகண்ட் மாநிலத்துக்கும் பயணம் மேற்கொள்ளவுள்ளனா்.

பாதுகாப்பு கருதி, ஒரு நாட்டில் சுற்றுப் பயணம் மேற்கொள்வதற்கு மன்னரும் அரசியும் அவா்களது தனி விமானத்தையே பயன்படுத்துவது வழக்கம். ஆனால், இந்தியா வந்துள்ள ஸ்வீடன் மன்னரின் விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதன் காரணமாக ஏா் இந்தியா விமானத்தில் பயணம் செய்யவிருக்கின்றனா். இவ்வாறு தங்களது தனி விமானத்தை விடுத்து, மற்ற விமானத்தை அவா்கள் பயன்படுத்துவது அரிதான செயலாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com