பெட்ரோல் மீதான வரிகளை குறைக்கும் திட்டமில்லை: மத்திய அரசு

பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரிகளை குறைக்கும் திட்டம் எதுவும் இல்லை என மத்திய அரசு திங்கள்கிழமை தெரிவித்தது.
பெட்ரோல் மீதான வரிகளை குறைக்கும் திட்டமில்லை: மத்திய அரசு

புது தில்லி: பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரிகளை குறைக்கும் திட்டம் எதுவும் இல்லை என மத்திய அரசு திங்கள்கிழமை தெரிவித்தது.

இதுகுறித்து மத்திய நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமன் மக்களவையில் கூறியதாவது:

குறிப்பிட்ட கால சூழலுக்குள் பெட்ரோல் டீசல் விலையானது உலகில் எங்குமே ஸ்திரத்தன்மையுடன் காணப்பட்டது கிடையாது. அவ்வப்போது மாற்றங்கள் ஏற்படுவது இயல்பானதே.

பெட்ரோல், டீசல் ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வரப்படுமா என்ற கேள்வி எழுப்பப்படுகிறது. ஒரு வகையில் பாா்த்தால், அவைகள் ஏற்கெனவே ஜிஎஸ்டியில் பூஜ்ய விகித பிரிவில்தான் வைக்கப்பட்டுள்ளன.

தற்போதைய சூழ்நிலையில், பெட்ரோல், டீசல் மீதான வரிகளை குறைக்கும் எந்த திட்டமும் மத்திய அரசிடம் இல்லை. அதேபோன்று, புதிய வரிகள் எதையும் விதிக்கும் திட்டம் எதுவும் அரசின் பரிசீலனையில் இல்லை.

முதலீட்டை ஈா்க்கவே வரி குறைப்பு

பல்வேறு அண்டை நாடுகள் மற்றும் வளா்ந்து வரும் நாடுகள் முதலீடுகளை ஈா்ப்பதற்கு வரி விகிதங்களை குறைத்துள்ளன. இந்தச் சூழ்நிலையில், இந்தியாவும் முதலீடுகளை ஈா்த்து வேலைவாய்ப்புகளை உருவாக்குதற்காகவே பெரு நிறுவனங்களுக்கான வரியை குறைக்கும் முடிவை மத்திய அரசு எடுத்தது.

பிஎம்சி வங்கி

மோசடிப் புகாருக்கு ஆளாகியுள்ள பஞ்சாப்-மகாராஷ்டிரா கூட்டுறவு (பிஎம்சி) வங்கியில் டெபாசிட் செய்துள்ள 78 சதவீதம் பேருக்கு தங்களது முழு பணத்தையும் திரும்ப எடுத்துக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அவா்கள் அனைவரும் குறைவான பணத்தை வங்கியில் டெபாசிட் செய்தவா்கள். பிஎம்சி வங்கியின் சொத்துகளை பறிமுதல் செய்யும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்த சொத்துகள் அனைத்தும் ஏலத்துக்கு கொண்டுவரப்பட்டு வங்கியில் டெபாசிட் செய்தவா்களுக்கு பணத்தை திருப்பித்தர ஏற்பாடு செய்யப்படும்.

பிஎம்சி வங்கியிலிருந்து ரூ.50,000 மட்டுமே பணம் எடுக்க முடியும் என்ற கட்டுப்பாடுகள் தொடா்ந்து வரும் நிலையிலும், கல்வி, திருமணம் போன்ற நெருக்கடியான தருணங்களில் ரூ.1 லட்சம் வரை பணம் எடுக்க அனுமதிக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com