வலிமையற்ற நிதியமைச்சரா? நிர்மலா சீதாராமன் பதிலடி

தன்னை வலிமையற்றவர் என்று விமர்சித்த காங்கிரஸ் கட்சிக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் பதிலடி கொடுத்தார்.தான் உள்பட பாஜக பெண் எம்.பி.க்கள்அனைவரும்
nirmala sitharaman
nirmala sitharaman

புது தில்லி: தன்னை வலிமையற்றவர் என்று விமர்சித்த காங்கிரஸ் கட்சிக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் பதிலடி கொடுத்தார்.
தான் உள்பட பாஜக பெண் எம்.பி.க்கள்அனைவரும் அதிகாரமளிக்கப்பட்டவர்கள் என்றும், சமூகத்தில் வலுவிழந்த நிலையில் உள்ளவர்களின் நலனுக்காக பாஜக அரசு பாடுபட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

மக்களவையில் வரி விதிப்பு சட்டங்கள் (திருத்தம்) மசோதா மீது திங்கள்கிழமை நடைபெற்ற விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய காங்கிரஸ் மக்களவை குழு தலைவர் அதீர் ரஞ்சன் சௌதரி, நிர்மலா சீதாராமன் பெயர் நிர்பலா (வலிமையற்றவர்) சீதாராமன் என்று குறிப்பிட்டார். இதற்கு பாஜக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மத்திய நிதியமைச்சருக்கு எதிரான விமர்சனத்துக்காக சௌதரி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நிதித்துறை இணையமைச்சர் அனுராக் தாக்குர் வலியுறுத்தினார்.

அவர் கூறுகையில், "நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் திறமை குறித்து நீங்கள் (சௌதரி) கேள்வியெழுப்புகிறீர்கள். அவர், தனது தகுதியால் இந்த இடத்துக்கு வந்துள்ளார்' என்றார்.

எனினும், தனது கருத்தை திரும்பப் பெற மறுத்துவிட்ட சௌதரி, "நீங்கள் விரும்பினால், அவைக் குறிப்பிலிருந்து அதனை நீக்கிக் கொள்ளுங்கள்' என்றார். நிதியமைச்சர் சுதந்திரமாக செயல்பட முடியாத நிலையில் உள்ளதை சுட்டிக் காட்டும் வகையில்தான் அவரை நிர்பலா என்று தாம் குறிப்பிட்டதாக சௌதரி கூறினார். 

பின்னர், விவாதத்துக்கு பதிலளித்து நிர்மலா சீதாராமன் பேசியதாவது: நான் நிர்மலாதான். நான் உள்பட பாஜக பெண் எம்.பி.க்கள் அனைவரும் அதிகாரமளிக்கப்பட்டவர்களாக திகழ்கிறோம். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக ஆட்சியில் அனைத்து பெண்களும் அதிகாரமளிக்கப்பட்டவர்களாக உள்ளனர். 

நிதியமைச்சராக எனது பதவிக்காலம் நிறைவடையும் வரை காத்திருக்காமல், இப்போதே என்னை எதிர்க்கட்சியினர் விமர்சிப்பது வியப்பளிக்கிறது.

சாதகமான அறிகுறிகள்: பல்வேறு அண்டை  நாடுகள் மற்றும் வளர்ந்து வரும் நாடுகள் முதலீடுகளை ஈர்ப்பதற்கு  வரி விகிதங்களை குறைத்துள்ளன. இந்தச் சூழ்நிலையில், இந்தியாவும் முதலீடுகளை ஈர்த்து வேலைவாய்ப்புகளை உருவாக்குதற்காகவே பெரு நிறுவனங்களுக்கான வரியை குறைக்கும் முடிவை மத்திய அரசு எடுத்தது. இதனால், பல்வேறு வெளிநாட்டு, உள்நாட்டு நிறுவனங்கள் முதலீட்டுக்கான ஆர்வத்தை வெளியிட்டுள்ளன. நாட்டின் பொருளாதாரத்தில் சாதகமான அறிகுறிகள் தென்பட்டு வருகின்றன.

பெட்ரோல், டீசல் மீதான வரி விவகாரம்: பெட்ரோல், டீசல்  ஏற்கெனவே ஜிஎஸ்டியில் பூஜ்ய விகித பிரிவில்தான் வைக்கப்பட்டுள்ளன. 

தற்போதைய சூழ்நிலையில், பெட்ரோல், டீசல் மீதான வரிகளை குறைக்கும் எந்த திட்டமும் மத்திய அரசிடம் இல்லை. அதேபோன்று, புதிய வரிகள் எதையும் விதிக்கும் திட்டம் எதுவும் அரசின் பரிசீலனையில் இல்லை என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com