இரவில் பெண்களுக்கு இலவச போலீஸ் வாகன வசதி: பஞ்சாப் முதல்வர் அறிவிப்பு
By DIN | Published on : 04th December 2019 04:21 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
அமிருதசரஸ்: பஞ்சாபில் இரவு நேரத்தில் பெண்கள் பாதுகாப்பாக வீடு திரும்புவதற்காக போலீஸ் வாகனத்தில் இலவசமாக அழைத்துச் செல்லும் திட்டத்தை அந்த மாநில முதல்வர் அமரீந்தர் சிங் செவ்வாய்க்கிழமை அறிவித்தார்.
இத்திட்டத்தின்படி, இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை பெண்களுக்கான இலவச வாகன வசதி அளிக்கப்பட உள்ளது. இரவு நேரத்தில் வீடு திரும்ப பாதுகாப்பான வாகனம் எதுவும் கிடைக்காத பட்சத்தில், இச்சேவையை பெண்கள் பயன்படுத்தலாம் என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக அவர்கள் கூறுகையில், "100, 112, 181 ஆகிய அவசர உதவி எண்களில் தொடர்புகொண்டு, காவல்துறையிடம் பாதுகாப்பான பயண வசதியை பெண்கள் கோரலாம். பெண் காவலர் ஒருவருடன் போலீஸ் வாகனம் அனுப்பிவைக்கப்பட்டு, சம்பந்தப்பட்ட பெண் பாதுகாப்பாக வீட்டுக்கு அழைத்து செல்லப்படுவார்.
இச்சேவையை மாநிலம் முழுவதும் அமல்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு, முதல்வர் அமரீந்தர் சிங் அறிவுறுத்தியுள்ளார்' என்று தெரிவித்தனர்.
ஹைதராபாதில் சில தினங்களுக்கு முன் பெண் கால்நடை மருத்துவர் ஒருவர் கும்பலால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, எரித்து கொல்லப்பட்டார். நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இச்சம்பவத்தைத் தொடர்ந்து, மேற்கண்ட திட்டத்தை பஞ்சாப் அரசு அறிவித்துள்ளது.