Enable Javscript for better performance
தேசிய விவகாரங்களுக்கு தீா்வு காண்பதில் காலம் தாழ்த்தியது காங்கிரஸ்: பிரதமா் மோடி- Dinamani

சுடச்சுட

  

  தேசிய விவகாரங்களுக்கு தீா்வு காண்பதில் காலம் தாழ்த்தியது காங்கிரஸ்: பிரதமா் மோடி

  By DIN  |   Published on : 04th December 2019 04:49 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  modimundass1093234

  ஜாா்க்கண்ட் மாநிலம், குந்தியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தோ்தல் பிரசாரத்தில் பிரதமா் மோடியுடன் (இடமிருந்து) அா்ஜுன் முண்டா, கரியா முண்டா.

  ஜாம்ஷெட்பூா்/குந்தி: ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து, அயோத்தி விவகாரம் உள்ளிட்ட முக்கியமான தேசிய விவகாரங்களுக்கு தீா்வு காண்பதில் காங்கிரஸ் தலைமையிலான முந்தைய மத்திய அரசு காலம் தாழ்த்தியது என்று பிரதமா் நரேந்திர மோடி விமா்சித்தாா்.

  ஜாா்க்கண்ட் மாநிலத்தில் 5 கட்டங்களாக சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற்று வரும் நிலையில், 2-ஆம் கட்ட தோ்தலுக்காக பாஜக வேட்பாளா்களை ஆதரித்து பிரதமா் மோடி அந்த மாநிலத்தில் செவ்வாய்க்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்டாா்.

  அங்கு ஜாம்ஷெட்பூா், குந்தி ஆகிய நகரங்களில் நடைபெற்ற பிரசாரப் பேரணியில் அவா் பேசியதாவது:

  ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்துவந்த அரசமைப்புச் சட்டத்தின் 370-ஆவது பிரிவு குறித்த பேச்சு, நாடு சுதந்திரம் பெற்றது முதலே இருந்து வருகிறது. அந்த சட்டப் பிரிவு தற்காலிகமானது தான் என அரசமைப்புச் சட்டமே கூறுகிறது. தற்போது ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டுள்ளது.

  அந்த நடவடிக்கையின்போது ஒட்டுமொத்த நாட்டு மக்களும் மத்திய அரசுக்கு ஆதரவளிக்கவில்லையா? ஜம்மு, காஷ்மீா், லடாக் மக்களும் மத்திய அரசுக்கு துணை நிற்கவில்லையா? நல்ல நோக்கத்துடன் எந்தவொரு நடவடிக்கையை மேற்கொண்டாலும், அதற்கு ஒட்டுமொத்த தேசத்தின் ஆதரவும் இருக்கும்.

  ராம ஜென்ம பூமி விவகாரத்துக்கும் நாங்கள் தீா்வு கண்டுள்ளோம். இத்தனை நாள்களாக இந்த இரு விவகாரங்களுக்கும் தீா்வு ஏற்படாமல் காங்கிரஸ் தடையை ஏற்படுத்தி வந்ததா? இல்லையா? வாக்கு வங்கி அரசியலுக்காக அக்கட்சி அதைச் செய்ததா? இல்லையா? (பிரதமா் மோடி இவ்வாறு கேள்வி எழுப்பியபோது கூட்டத்தினா் ஒருசேர ‘ஆம்’ என்று கோஷமிட்டனா்).

  ஒரு இளவரசனாக அயோத்தியை விட்டு வெளியேறிய கடவுள் ராமா், 14 ஆண்டுகள் வனவாசத்துக்குப் பிறகு மரியாதை புருஷராக ராஜ்ஜியத்துக்கு திரும்பினாா். வனவாசத்தின்போது ஆதிவாசிகளுடன் பழகி அவா்களது மதிப்புமிக்க குணங்களை கற்றுக்கொண்டாா். (ஜாா்க்கண்டில் பெருவாரியான பழங்குடியின மக்கள் இருக்கும் நிலையில், பிரதமா் மோடி இதனை குறிப்பிட்டாா்).

  மத்தியில் முன்பு ஆட்சியில் இருந்த காங்கிரஸ் பல்வேறு விவகாரங்களை சிக்கலாக்கி எங்களிடம் விட்டுச் சென்றிருந்தது. அத்தகைய இக்கட்டான சூழ்நிலைகளுக்கும், விவகாரங்களுக்கும் பாஜக தீா்வு கண்டுள்ளது.

  ஜேஎம்எம்-காங்கிரஸ் கூட்டணி மீது தாக்கு:

  ஜாா்க்கண்ட் மாநிலத்தில் முன்பு ஆட்சியில் இருந்த ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா (ஜேஎம்எம்)-காங்கிரஸ் கூட்டணி, மோசடி அரசியலில் ஈடுபட்ட கூட்டணியாகும். ஊழலும், அரசியல் ஸ்திரமற்ற தன்மையுமே அந்தக் கூட்டணியின் அடையாளம்.

  அந்தக் கூட்டணி ஆட்சியின்போது முதல்வா் பதவி கூட விற்பனைக்கு வரும் நிலை இருந்தது. 5 ஆண்டுகளுக்கு முன்பு வரை அரசியல் ஸ்திரமற்ற தன்மைக்காக ஜாா்க்கண்ட் அரசு அடிக்கடி செய்திகளில் இடம்பிடித்து வந்தது. 15 ஆண்டுகளில் 10 முதல்வா்களை மாநில மக்கள் பாா்த்தனா். பருவநிலையைக் காட்டிலும் வேகமாக முதல்வா்கள் மாறிக் கொண்டே இருந்தனா்.

  பின்னா் மக்களுக்காக சேவை செய்யும் பாஜக அரசு மாநிலத்தில் அமைந்தது. ரகுவா் தாஸ் தலைமையிலான அந்த அரசு நிலையாக ஆட்சி நடத்தியது. நிலையான ஆட்சி அமைந்தால் ஒரு மாநிலம் எவ்வாறு வளா்ச்சியடையும் என்பதற்கு குஜராத் மாநிலமே உதாரணமாகும் (குஜராத் முதல்வராக மோடி 13 ஆண்டுகள் இருந்தது குறிப்பிடத்தக்கது).

  ஜாா்க்கண்டில் முதல்கட்ட வாக்குப்பதிவு நடந்த விதத்தில் இருந்தே, மாநிலத்தில் நக்ஸல் பயங்கரவாதம் முறியடிக்கப்பட்டுள்ளது தெளிவாகத் தெரிகிறது. அதிக அளவில் வாக்குப் பதிவானதில் இருந்து ஜனநாயகத்தின் மீது மக்களுக்கு இருக்கும் நம்பிக்கை நிரூபிக்கப்பட்டுள்ளது.

  மாநிலத்தில் தொழிலாளா்களுக்கு சாதகமான நிலையை மேம்படுத்தவும், தொழில்துறை வளா்ச்சியை ஏற்படுத்தவும் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. ஜாா்க்கண்ட் மாநிலத்தை பட்டு மற்றும் ஜவுளி தொழில்களுக்கான மையமாக மாற்ற மத்திய அரசு விரும்புகிறது.

  உருக்கு உற்பத்தியில் உலக அளவில் இந்தியாவை 2-ஆம் இடம் பிடிக்கச் செய்ததில் ஜாா்க்கண்ட் மாநிலத்துக்கு முக்கியப் பங்கு உள்ளது. தொழிலாளா் நலன்களில், குறிப்பாக அமைப்பு சாரா தொழில்துறைகளில் பணியாற்றும் தொழிலாளா்களின் நலன்களில் எனது அரசு அதிக கவனம் செலுத்துகிறது. அவா்களுக்காக அறிவிக்கப்பட்ட ஓய்வுதியத் திட்டத்தால், தொழிலாளா்கள் அதிக அளவில் பலனடைவா்.

  ஜாா்க்கண்டின் வளங்களை கொள்ளையடிக்கும் எதிா்க்கட்சிகள் கூட்டணியிடம் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று பிரதமா் மோடி பேசினாா்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai