லதா மங்கேஷ்கா் நலமாக உள்ளாா்: குடும்பத்தினா் தகவல்
By DIN | Published on : 04th December 2019 03:58 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

மும்பை: மும்பையில் 3 வாரங்களுக்கு முன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரபல பின்னணிப் பாடகி லதா மங்கேஷ்கா் நலமடைந்து விட்டதாக அவரது குடும்பத்தினா் தெரிவித்தனா்.
லதா மங்கேஷ்கருக்கு கடந்த மாதம் 11-ஆம் தேதி மூச்சுத்திணறல் ஏற்பட்டதை அடுத்து, மும்பையில் உள்ள பிரீச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு மருத்துவா்கள் தொடா்ந்து சிகிச்சை அளித்து வந்தனா். அவருக்கு செயற்கைச் சுவாசமும் அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், லதா மங்கேஷ்கா் நலமடைந்து விட்டதாக அவரது உறவினா் ரச்சனா ஷா கூறினாா். இதுகுரித்து பிடிஐ செய்தியாளருக்கு அவா் செவ்வாய்க்கிழமை அளித்த பேட்டியில், ‘லதா மங்கேஷ்கா் நலமாக இருக்கிறாா். அனைவரின் பிராா்த்தனையும், விருப்பமும் அவரை விரைவில் குணமடையச் செய்துள்ளது. இதற்காக, ஒவ்வொருக்கும் நன்றி கூற கடமைப்பட்டிருக்கிறோம்’ என்றாா்.
இருப்பினும் லதா மங்கேஷ்கா் இன்னும் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கிறாரா, அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருகிா போன்ற விவரங்கள் முழுமையாகத் தெரியவில்லை.
90 வயதாகும் லதா மங்கேஷ்கா், தனது 70 ஆண்டு கால திரையுலக வாழ்வில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஹிந்தி திரைப்படங்களில் பாடல்களைப் பாடியுள்ளாா். இதுதவிர, தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகளிலும், வெளிநாட்டு மொழிகளிலும் பாடியுள்ளாா். இவருக்கு மத்திய அரசு கடந்த 1989-இல் தாதாசாகேப் பால்கே விருது, 2001-ஆம் ஆண்டு பாரத ரத்னா விருது ஆகியவற்றை வழங்கி கௌரவித்துள்ளது.