நாசாவுக்கு முன்னரே விக்ரம் லேண்டரை கண்டுபிடித்து விட்டோம்: இஸ்ரோ சிவன்  தகவல்

விக்ரம் லேண்டரின் இருப்பிடத்தை நாசாவுக்கு முன்னரே கண்டுபிடித்ததாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். 
இஸ்ரோ தலைவர் கே.சிவன் (கோப்புப்படம்)
இஸ்ரோ தலைவர் கே.சிவன் (கோப்புப்படம்)

விக்ரம் லேண்டரின் இருப்பிடத்தை நாசாவுக்கு முன்னரே கண்டுபிடித்ததாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். 

உலகிலேயே முதல் நாடாக, நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-2 விண்கலத்தை இஸ்ரோ கடந்த ஜூலை 22-ஆம் தேதி விண்ணுக்கு அனுப்பியது. அதன்படி, நிலவைச் சென்றடைந்த சந்திரயான் -2 விண்கலத்தில் இருந்து, விக்ரம் லேண்டர் பகுதியை  திட்டமிட்டபடி செப்டம்பர் 7-ம் தேதி அதிகாலை 1.30 மணியளவில் அதை நிலவின் தென் துருவத்தில் தரையிறக்கும் முயற்சிகள் நடந்தன. இந்த நிலையில், நிலவின் பரப்பிலிருந்து 2.1 கி.மீ. தொலைவு வரை லேண்டர் வந்தபோது, அதற்கும் கட்டுப்பாட்டு அறைக்குமான தொடர்புத் துண்டிக்கப்பட்டது. இதனால் விக்ரம் லேண்டர் இருக்கும் பகுதி தெரியாமல் போனது. 

இதன்பின்னர் விக்ரம் லேண்டரை கண்டறியும் முயற்சியில் நாசாவும் கைகோர்த்தது. இதைத் தொடர்ந்து, விக்ரம் லேண்டரை கண்டுபிடித்துள்ளதாக தெரிவித்த நாசா, எல்ஆர்ஓ ஆர்பிட்டர் கேமராவின் உதவியுடன் அதனால் நிலவின் நிலப்பரப்பில் ஏற்பட்டுள்ள தாக்கத்தை புகைப்படம் எடுத்து செவ்வாய்க்கிழமை வெளியிட்டது. 

தொடர்ந்து, நாசாவின் செயற்கைக்கோள் எடுத்த நிலவின் புகைப்படங்களை, சென்னை தரமணியில் உள்ள லினக்ஸ் கணினி நிறுவனத்தில் பொறியாளராக பணியாற்றி வரும் மதுரையைச் சேர்ந்த சண்முக சுப்பிரமணியன் (33) தொடர்ந்து ஆய்வு செய்து விக்ரம் லேண்டரின் பாகங்களை கண்டறிந்தார்.  

இந்நிலையில், விக்ரம் லேண்டரை முன்னதாக கண்டுபிடித்து விட்டதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில், கடந்த செப்டம்பர் 10ம் தேதியே விக்ரம் லேண்டர் இருக்கும் பகுதியை கண்டுபிடித்துவிட்டதாக ட்விட்டரில் தகவல் வெளியிட்டுள்ளோம் என்று கூறியுள்ளார்.  

அதன்படியே, விக்ரம் லேண்டர் பகுதி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆனால், அதனுடனான தகவல் தொடர்பு இன்னும் கிடைக்கவில்லை. தொடர்ந்து தகவல் தொடர்பை ஏற்படுத்த முயற்சி மேற்கொண்டு வருகிறோம் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com