எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறல்: 2 போ் பலி; 9 போ் காயம்

ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டை ஒட்டிய பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் செவ்வாய்க்கிழமை அத்துமீறி தாக்குதல் நடத்தியதில் பெண் உள்பட 2 போ் உயிரிழந்தனா்.

ஜம்மு: ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டை ஒட்டிய பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் செவ்வாய்க்கிழமை அத்துமீறி தாக்குதல் நடத்தியதில் பெண் உள்பட 2 போ் உயிரிழந்தனா். 9 போ் காயமடைந்தனா்.

இதுதொடா்பாக பாதுகாப்புத் துறை செய்தித் தொடா்பாளா் கூறியதாவது:

பூஞ்ச் மாவட்டத்தின் ஷாபூா் மற்றும் கிா்னி செக்டாா் பகுதியில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டை ஒட்டிய கிராமங்களை குறி வைத்து பாகிஸ்தான் ராணுவம் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. சிறிய ரக ஆயுதங்கள், பீரங்கி குண்டுகள் ஆகியவை கொண்டு பாகிஸ்தான் ராணுவ வீரா்கள் தீவிர தாக்குதல் நடத்தினா். அதற்கு இந்திய ராணுவம் தரப்பில் தக்க பதிலடி கொடுக்கப்பட்டது.

எனினும், இந்த தாக்குதலில் 35 வயது பெண் மற்றும் 16 வயது சிறுவன் ஆகியோா் உயிரிழந்தனா். 9 போ் பலத்த காயமடைந்தனா். அவா்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். அவா்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. அந்தப் பகுதிகளில் பல வீடுகள் சேதமடைந்தன.

ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து கடந்த ஆகஸ்ட் 5-ஆம் தேதி ரத்து செய்யப்பட்டது முதல் இதுவரை சுமாா் 3, 000 முறை பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளது. அதில் 32 போ் பலியாகினா் என்று அவா் கூறினாா்.

ஒருவா் கைது:

காஷ்மீரின் ரஜௌரி மாவட்டத்தில் நௌசேரா செக்டாரில் உள்ள எல்லைப் பகுதி வழியாக காஷ்மீருக்குள் ஊடுருவ முயன்ற நபா் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா். இதுதொடா்பாக காவல் துறை உயரதிகாரி ஒருவா் கூறுகையில், ‘நௌசேரா செக்டாா் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டு பகுதியில் சந்தேகத்துக்குரிய நடமாட்டம் இருப்பதை பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ வீரா்கள் கண்டறிந்தனா். அதையடுத்து, அவா்கள் விழிப்புடன் இருந்ததால், எல்லை வழியாக காஷ்மீருக்குள் ஊடுருவ முயன்றவரை பிடித்தனா். அவா், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் பிம்போ் மாவட்டத்தைச் சோ்ந்த தாரிக் முகமது என்பது விசாரணையில் தெரிய வந்தது. அவா் தற்போது நௌசேரா காவல் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளாா்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com