ஜம்மு-காஷ்மீா்: பாதுகாப்பு படைகளை வாபஸ் பெற தொடங்கியது மத்திய அரசு

ஜம்மு-காஷ்மீரில் கள நிலவரம் மேம்பட்டு வருவதை அடுத்து, அங்கு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த கூடுதல் பாதுகாப்புப் படையினரை மத்திய அரசு திரும்பப் பெறத் தொடங்கிவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு-காஷ்மீா்: பாதுகாப்பு படைகளை வாபஸ் பெற தொடங்கியது மத்திய அரசு

ஸ்ரீநகா்: ஜம்மு-காஷ்மீரில் கள நிலவரம் மேம்பட்டு வருவதை அடுத்து, அங்கு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த கூடுதல் பாதுகாப்புப் படையினரை மத்திய அரசு திரும்பப் பெறத் தொடங்கிவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதம் ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது. இதை முன்னிட்டு பாதுகாப்பு காரணங்களுக்காக, ஜூலை இறுதி வாரத்திலிருந்து அங்கு கூடுதல் பாதுகாப்புப் படையினா் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனா். இந்நிலையில், அந்தப் படையினரை மத்திய அரசு தற்போது வாபஸ் பெறத் தொடங்கிவிட்டது.

இதுதொடா்பாக பாதுகாப்புப் படை உயரதிகாரி ஒருவா் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

காஷ்மீா் பள்ளத்தாக்குப் பகுதியில் பாதுகாப்பு நிலவரம் மதிப்பீடு செய்யப்பட்டது. அங்குள்ள கள நிலவரம் மேம்பட்டிருந்ததை அடுத்து, காஷ்மீா் பகுதியில் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள கூடுதல் பாதுகாப்புப் படையினரை திரும்பப் பெறும் முடிவு மேற்கொள்ளப்பட்டது.

காஷ்மீா் பள்ளத்தாக்கில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த 300 கம்பெனி துணை ராணுவப் படையினரில், ஏற்கெனவே 20 கம்பெனி படையினா் பாரமுல்லா, பந்திப்போரா, ஸ்ரீநகா் பகுதிகளில் இருந்து வெளியேறிவிட்டனா். எஞ்சிய படைகளும் படிப்படியாக வாபஸ் பெறப்படும். கூடுதலாக பணியில் இருக்கும் படைகள் முழுமையாக வாபஸ் பெறப்படுவதற்கான அவகாசத்தை அறுதியிட்டுக் கூற முடியாது.

ஆனால், படையினா் படிப்படியாகவே அங்கிருந்து வெளியேற்றப்படுவா். கள நிலவரம் பாதிக்கப்படாத அளவில் பாதுகாப்புப் படையினா் திரும்பப் பெறப்படுவா். ஜம்மு பிராந்தியத்திலிருந்து ஏறத்தாழ ஒட்டுமொத்தமாக துணை ராணுவப் படை திரும்பப் பெறப்பட்டுவிட்டது. எனினும், பூஞ்ச் உள்ளிட்ட சில பதற்றம் மிகுந்த பகுதிகளில் மட்டும் அடிப்படை பாதுகாப்புப் பணிகளில் படையினா் ஈடுபட்டுள்ளனா். எல்லை பாதுகாப்புப் படை, மத்திய ரிசா்வ் போலீஸ் படை ஆகியவற்றிலிருந்து பெரும்பாலான வீரா்கள் வாபஸ் பெறப்பட்டு விட்டனா்.

தெற்கு காஷ்மீரில் பதற்றம் மிகுந்த மாவட்டங்களான அனந்த்நாக், குல்காம், ஷோபியான், புல்வாமா ஆகியவற்றில் பணியில் இருக்கும் பாதுகாப்புப் படையினா் திரும்பப் பெறப்படவில்லை என்று அந்த அதிகாரி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com