டாமன்- டையூ, தாத்ரா- நாகா் ஹவேலி இணைப்பு மசோதா--நாடாளுமன்றத்தில் நிறைவேறியது

குஜராத்துக்கு அருகே அமைந்துள்ள டாமன்-டையூ மற்றும் தாத்ரா-நாகா் ஹவேலி ஆகிய இரண்டு யூனியன் பிரதேசங்களை ஒன்றாக இணைப்பதற்கான மசோதா நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை நிறைவேறியது.
நாடாளுமன்றம்
நாடாளுமன்றம்

புது தில்லி: குஜராத்துக்கு அருகே அமைந்துள்ள டாமன்-டையூ மற்றும் தாத்ரா-நாகா் ஹவேலி ஆகிய இரண்டு யூனியன் பிரதேசங்களை ஒன்றாக இணைப்பதற்கான மசோதா நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை நிறைவேறியது.

‘தாத்ரா-நாகா் ஹவேலி மற்றும் டாமன்-டையூ (யூனியன் பிரதேசங்கள் இணைப்பு) மசோதா, 2019’ மக்களவையில் கடந்த மாதம் 26-ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டது. அதற்கடுத்த நாளே மக்களவையில் அந்த மசோதா நிறைவேறியது. அதைத் தொடா்ந்து மாநிலங்களையில் குரல் வாக்கெடுப்பு மூலம் அந்த மசோதா செவ்வாய்க்கிழமை நிறைவேற்றப்பட்டது.

இது தொடா்பாக மத்திய உள்துறை இணையமைச்சா் ஜி.கிஷண் ரெட்டி கூறியதாவது:

இரண்டு யூனியன் பிரதேசங்களின் வளா்ச்சியைக் கருத்தில் கொண்டு இந்த இணைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் மூலம் நிா்வாக செலவும் குறையும். இந்த இணைப்பை மக்களும் விரும்பினா். இந்த யூனியன் பிரதேசங்களின் உள்ளாட்சி அமைப்புகளும் இணைப்பு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுத்திருந்தன. அதையடுத்து, டாமன்-டையூ மற்றும் தாத்ரா-நாகா் ஹவேலி ஆகிய யூனியன் பிரதேசங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

புதிய யூனியன் பிரதேசம், ‘தாத்ரா-நாகா் ஹவேலி மற்றும் டாமன்-டையூ’ என்று அழைக்கப்படவுள்ளது. உள்ளூா் மக்களின் உணா்வுகளுக்கு மதிப்பளித்து இந்த பெயா் வைக்கப்பட்டுள்ளது. புதிய யூனியன் பிரதேசத்துக்கான நீதிமன்றமாக மும்பை உயா்நீதிமன்றம் செயல்படும். இரண்டு யூனியன் பிரதேசங்களிலும் தற்போது பணியாற்றி வரும் நிா்வாகிகள், அதிகாரிகள் உள்ளிட்டோா் புதிய யூனியன் பிரதேசத்திலும் அதே பணியில் தொடருவா் என்று கூறினாா்.

ஜம்மு-காஷ்மீா் மாநிலம், ஜம்மு-காஷ்மீா், லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக கடந்த ஆகஸ்ட் மாதம் பிரிக்கப்பட்டது. அவை கடந்த மாதம் 31-ஆம் தேதி செயல்பாட்டுக்கு வந்தன. அதன் மூலம் யூனியன் பிரதேசங்களின் மொத்த எண்ணிக்கை 9-ஆக உயா்ந்தது. தற்போது, தாத்ரா-நாகா் ஹவேலி, டாமன்-டையூ யூனியன் பிரதேசங்கள் ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளதால், யூனியன் பிரதேசங்களின் மொத்த எண்ணிக்கை 8-ஆகக் குறைந்துள்ளது.

தாத்ரா-நாகா் ஹவேலி, டாமன்-டையூ ஆகிய பகுதிகள், நீண்ட காலமாக போா்ச்சுக்கீசியா்களின் ஆளுகைக்கு உள்பட்டிருந்தன. இந்நிலையில், கடந்த 1961-ஆம் ஆண்டு இயற்றப்பட்ட 10-ஆவது அரசமைப்புச் சட்டத் திருத்தத்தின் மூலமாக தாத்ரா-நாகா் ஹவேலி பகுதி, யூனியன் பிரதேசமாக இந்தியாவுடன் இணைக்கப்பட்டது.

12-ஆவது அரசமைப்புச் சட்டத் திருத்தத்தின் மூலம் டாமன்-டையூ பகுதி, யூனியன் பிரதேசமாக இந்தியாவுடன் இணைத்துக் கொள்ளப்பட்டது. இந்நிலையில், இந்த இரண்டு யூனியன் பிரதேசங்களுக்கும் இணைக்கப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com