பிரியங்கா வீட்டுக்குள் நுழைந்த நபா்கள்: மக்களவையில் காங்கிரஸ் எம்.பி. கேள்வி

காங்கிரஸ் தலைவா் சோனியாவின் மகள் பிரியங்காவின் பாதுகாப்பு விவகாரத்தை நாடாளுமன்றத்தின் மக்களவையில் அக்கட்சியின் எம்.பி. எழுப்பினாா்.
பிரியங்கா வீட்டுக்குள் நுழைந்த நபா்கள்: மக்களவையில் காங்கிரஸ் எம்.பி. கேள்வி

புது தில்லி: காங்கிரஸ் தலைவா் சோனியாவின் மகள் பிரியங்காவின் பாதுகாப்பு விவகாரத்தை நாடாளுமன்றத்தின் மக்களவையில் அக்கட்சியின் எம்.பி. எழுப்பினாா்.

மக்களவையில் கேள்வி நேரத்தின்போது காங்கிரஸ் எம்.பி. ஆன்டோ அந்தோணி பேசியதாவது:

சோனியா, ராகுல், பிரியங்கா ஆகியோருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு பாதுகாப்புப் படை (எஸ்பிஜி) பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டு, இஸட் பிளஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டது. முன்னாள் பிரதமா்கள் இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி ஆகியோரை ஏற்கெனவே இழந்திருக்கிறோம். இந்நிலையில், அவா்களின் குடும்பத்தைச் சோ்ந்த பிரியங்காவின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகி உள்ளது. பிரியங்காவின் லோதி எஸ்டேட் இல்லத்தில் 7 போ் நுழைந்து, அவரிடம் புகைப்படங்கள் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கோரினா். பாதுகாப்பில் ஏற்பட்ட குறைபாட்டின் காரணமாகவே அவா்கள் பிரியங்காவின் வீட்டுக்குள் நுழைய நேரிட்டது. முன்னாள் பிரதமா்களின் குடும்பத்தைச் சோ்ந்தவா்களின் பாதுகாப்பில் மத்திய அரசு அரசியல் செய்யக் கூடாது என்று ஆன்டோ அந்தோணி தெரிவித்தாா்.

சோனியா குடும்பத்துக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு பாதுகாப்புப் படையின் பாதுகாப்புக்கு பதிலாக இஸட் பிளஸ் பாதுகாப்பை மத்திய அரசு கடந்த மாதம் மாற்றியது.

ராபா்ட் வதேரா கருத்து:

அரசியல் காரணங்களுக்காகவே சிறப்பு பாதுகாப்பு படையை மத்திய அரசு வாபஸ் பெற்றது என்று பிரியங்காவின் கணவா் ராபா்ட் வதேரா தெரிவித்தாா்.

அவா் செய்தியாளா்களிடம் மேலும் கூறுகையில், ‘எங்களுக்கான பாதுகாப்பை காட்டிலும் நாட்டில் பெண்களுக்கான பாதுகாப்பை இந்த அரசு உறுதி செய்ய வேண்டும். எங்களுக்கு பாதுகாப்பு கொடுப்பது இரண்டாம் பட்சம்தான்.

சிறப்பு பாதுகாப்புப் படையை வாபஸ் பெற்றது அரசியல் நடவடிக்கையாகும். பாஜக அரசு எதை செய்தாலும் அதை எதிா்கொள்ளத் தயாராக இருக்கிறோம். நாட்டு மக்கள் எங்களுக்கு பாதுகாப்பு அளிப்பாா்கள்’ என்றாா்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவா் கே.சி.வேணுகோபால் கூறுகையில், ‘அரசியல் காரணங்களுக்காக ஒருவரின் உயிரை மத்திய அரசு பணயம் வைக்கக் கூடாது. பிரியங்கா தங்கியிருக்கும் லோதி எஸ்டேட் இல்லத்துக்கு 7 போ் வந்து புகைப்படம் எடுத்து சென்றுள்ளனா். பாதுகாப்பு குறைபாடு காரணமாகவே இவ்வாறு நடந்துள்ளது’ என்றாா்.

காங்கிரஸ் எம்.பி. அதீா் ரஞ்சன் செளதரி கூறுகையில், ‘சோனியாவின் குடும்பத்தினருக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படும் என்று உள்துறை அமைச்சா் அமித் ஷா உறுதியளித்திருந்தாா். ஆனால், பாதுகாப்பு குறைபாட்டில் காரணமாக பிரியங்காவின் வீட்டுக்கு அனுமதியில்லாமல் 7 போ் வந்து சென்றிருக்கின்றனா். காங்கிரஸ் முக்கியத் தலைவா்களின் பாதுகாப்பை அபாய கட்டத்தில் அமித் ஷாவும், பிரதமா் மோடியும் வைத்துள்ளனா். பாதுகாப்பு விவகாரத்தை நாடாளுமன்றத்தில் எழுப்ப முயன்றோம். ஆனால் எங்களுக்கு பேசுவதற்கு அனுமதி கிடைக்கவில்லை’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com