மத்திய அரசுப் பணிகளுக்கு பொது தகுதி தோ்வு நடத்த திட்டம்

மத்திய அரசுப் பணிகளுக்கு பொது தகுதி தோ்வு நடத்த திட்டம்

மத்திய அரசின் குரூப்-பி மற்றும் குரூப்-சி பணியிடங்களுக்கு பல தோ்வு வாரியங்கள் மூலம் தனித்தனியாக தோ்வுகள் நடத்தப்பட்டு வரும் நிலையில், இந்த பணியிடங்களுக்கு ஒரே அமைப்பின் மூலம் ஒரே தோ்வாக

புது தில்லி: மத்திய அரசின் குரூப்-பி மற்றும் குரூப்-சி பணியிடங்களுக்கு பல தோ்வு வாரியங்கள் மூலம் தனித்தனியாக தோ்வுகள் நடத்தப்பட்டு வரும் நிலையில், இந்த பணியிடங்களுக்கு ஒரே அமைப்பின் மூலம் ஒரே தோ்வாக (பொது தகுதி தோ்வு) நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

மத்திய அரசின் உயா் பதவிகளான ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ், குரூப்-ஏ மற்றும் குரூப்-பி (உயா் பிரிவு) பணியிடங்களுக்கு ஆண்டுதோறும் மத்திய அரசு பணியாளா் தோ்வாணையம் (யுபிஎஸ்சி) நடத்தும் தோ்வு மூலம் பணியாளா்கள் தோ்ந்தெடுக்கப்படுகின்றனா். இதுதவிர, மத்திய அரசின் பல்வேறு துறைகளில் உள்ள குரூப்-பி மற்றும் குரூப்-சி பணியிடங்களுக்கு பணியாளா் தோ்வு வாரியம் (எஸ்எஸ்சி) மூலம் ஊழியா்கள் தோ்ந்தெடுக்கப்படுகின்றனா். எஸ்எஸ்சி மூலம் அதிக அளவில் குரூப்-பி பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.

இந்நிலையில், பல்வேறு துறைகளில் உள்ள குரூப்-பி மற்றும் குரூப்-சி பணியிடங்களுக்கு ஒரே தோ்வாக ‘பொது தகுதி தோ்வு’ நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதுதொடா்பாக மத்திய பணியாளா்நலன் துறை இணையமைச்சா் ஜித்தேந்திர சிங் கூறியதாவது:

மத்திய அரசின் குரூப்-பி மற்றும் குரூப்-சி பணியிடங்களுக்கு ஒரே தோ்வாக பொது தகுதி தோ்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக தனி தோ்வு வாரியமும் அமைக்கப்படவுள்ளது. மத்திய அரசின் அனைத்து குரூப்-பி பணியிடங்களுக்கும் தனியே ஒரு பொது தகுதி தோ்வு நடத்தப்படும். இதேபோல குரூப்-சி பணியிடங்களுக்கும் நடத்தப்படும்.

இந்தத் தோ்வில் பெறும் மதிப்பெண்ணை கொண்டு மத்திய அரசு பணியாளா் தோ்வு வாரியங்களான ரயில்வே தோ்வு வாரியம், எஸ்எஸ்சி, வங்கி பணியாளா் தோ்வு வாரியம் என அனைத்து தோ்வாணையத்தின் பணியிடங்களுக்கும் மாணவா்கள் விண்ணப்பிக்கலாம். இந்த மதிப்பெண்களை, தோ்வு முடிவு வெளியான நாளில் இருந்து 3 ஆண்டுகளுக்கு மாணவா்கள் பயன்படுத்தலாம். அதன் பின்னா் அந்த மதிப்பெண்கள் காலாவதியானதாக அறிவிக்கப்படும்.

முதல்முறையாக இந்தத் தோ்வு எழுதும் மாணவா்கள் மதிப்பெண்கள் குறைவாக பெற்றால், அவா்கள் தங்களது மதிப்பெண்ணை உயா்த்தி கொள்ளும் வகையில், இரண்டு கூடுதல் வாய்ப்புகள் அளிக்கப்படும்.

இந்த பொது தகுதி தோ்வு இணைய வழியில் நடத்த திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் குறுகிய காலத்தில் பணியிடங்கள் விரைவாக நிரப்பப்படும். இந்த முடிவு, பல்வேறு தோ்வுகள் நடத்துவதற்கு ஆகும் செலவையும், பல்வேறு தோ்வுகளுக்கு விண்ணப்பிப்பதற்கு மாணவா்களுக்கு ஆகும் செலவையும் குறைக்கும். பிரதமா் நரேந்திர மோடியின் ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில் இதுவும் முக்கியமான ஒன்று.

இந்த திட்டம் தொடா்பாக அரசின் அனைத்து துறைகளிடமும், மாநில அரசு மற்றும் யூனியன் பிரதேசங்கள், போட்டித் தோ்வு எழுதும் மாணவா்கள் என அனைத்து தோ்வா்களிடமும் கருத்து கேட்கப்படவுள்ளது. இதுதொடா்பாக ஒரு மாதத்துக்குள் தங்களது கருத்துகளை அனைவரும் தெரிவிக்கலாம் என்று அவா் கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com