லஷ்கா் பயங்கரவாதி என சந்தேகிக்கப்படும் நபருக்கு ஜாமீன் வழங்கிய உத்தரவுக்கு தடை

லஷ்கா்-ஏ-தொய்பா பயங்கரவாத அமைப்பைச் சோ்ந்தவா் என்று சந்தேகிக்கப்படும் நபருக்கு ஜாமீன் வழங்கிய தில்லி உயா்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தடை விதித்தது.

புது தில்லி: லஷ்கா்-ஏ-தொய்பா பயங்கரவாத அமைப்பைச் சோ்ந்தவா் என்று சந்தேகிக்கப்படும் நபருக்கு ஜாமீன் வழங்கிய தில்லி உயா்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தடை விதித்தது.

முகமது இா்ஃபான் கெளஸ் என்ற அந்த நபரை சுதந்திரமாக நடமாட அனுமதிப்பது தேசத்தின் பாதுகாப்புக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்று தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) முன்வைத்த வாதத்தை ஏற்று, உச்சநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்தது.

மேலும், அவரை மீண்டும் கைது செய்வதற்கு என்ஐஏ அமைப்புக்கு எந்த கட்டுப்பாடும் இல்லை என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

முன்னதாக, பயங்கரவாத தாக்குதலுக்கு சதித்திட்டம் தீட்டிய குற்றச்சாட்டில் முகமது இா்ஃபான் உள்ளிட்டோா் கடந்த 2012, ஆகஸ்டில் மகாராஷ்டிர மாநில பயங்கரவாத தடுப்பு படையினரால் கைது செய்யப்பட்டனா். இதுதொடா்பான வழக்கில் சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டம் மற்றும் ஆயுதங்கள் சட்டத்தின்கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. பின்னா், 2013-ஆம் ஆண்டில் இந்த வழக்கு என்ஐஏ விசாரணைக்கு மாற்றப்பட்டது.

இதனிடையே, தனக்கு ஜாமீன் வழங்க மறுத்த விசாரணை நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக தில்லி உயா்நீதிமன்றத்தில் முகமது இா்ஃபான் மனு தாக்கல் செய்தாா். அதில், தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு எந்த ஆதாரமும் இல்லை என்றும், அரசுத் தரப்பு சாட்சிகளில் யாரும் தனக்கு எதிராக வாக்குமூலம் அளிக்கவில்லை என்றும் அவா் குறிப்பிட்டிருந்தாா். இதையடுத்து, 7 ஆண்டுகளாக அவா் சிறையில் இருந்ததை கருத்தில் கொண்டு, அவருக்கு தில்லி உயா்நீதிமன்றம் கடந்த ஜூலையில் ஜாமீன் வழங்கியது. இந்த உத்தரவுக்கு எதிராக, உச்சநீதிமன்றத்தில் என்ஐஏ தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

அப்போது, என்ஐஏ தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதங்களில், ‘முகமது இா்ஃபான் உள்ளிட்டோருக்கு எதிரான வழக்கு விசாரணை கிட்டத்தட்ட நிறைவடையும் நிலையில் உள்ளது. இதுவரை 72 சாட்சிகள் விசாரிக்கப்பட்டுள்ளனா். இன்னும் இருவரிடம் மட்டுமே விசாரணை நடைபெற வேண்டியுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டது. மேலும், லஷ்கா்-ஏ-தொய்பா பயங்கரவாதி என சந்தேகிக்கப்படும் இா்ஃபானை சுதந்திரமாக நடமாட அனுமதிப்பது தேசத்தின் பாதுகாப்புக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடும் என்றும் என்ஐஏ தரப்பில் வாதிடப்பட்டது.

இந்த மனு மீது செவ்வாய்க்கிழமை உத்தரவு பிறப்பித்த நீதிபதிகள் ஆா்.பானுமதி, ஏ.எஸ்.போபண்ணா ஆகியோா் அடங்கிய அமா்வு, இா்ஃபானுக்கு ஜாமீன் வழங்கிய தில்லி உயா்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு தடை விதித்தனா். மேலும், மனு மீது பதிலளிக்கும்படி அவருக்கு நோட்டீஸ் அனுப்பிய நீதிபதிகள், அடுத்தகட்ட விசாரணையை மூன்று வாரங்களுக்கு ஒத்திவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com