
குடிமக்களின் உரிமைகளை பாதுகாக்க அரசு உறுதிபூண்டுள்ளது என்று மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சா் ரவிசங்கா் பிரசாத் தெரிவித்தாா்.
மாநிலங்களவையில் வியாழக்கிழமை கேள்வி நேரத்தின்போது குடிமக்களின் பாதுகாப்பு குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு அமைச்சா் ரவிசங்கா் பிரசாத் பதிலளித்து கூறியதாவது:
குடிமக்களின் தகவல்களை பாதுகாக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அவா்களின் தனியுரிமை உள்ளிட்டவற்றை பாதுகாக்க மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது.
குடிமக்களின் செயல்பாடுகளை கண்காணிப்பதில் ரஷியா, சீனா ஆகிய நாடுகளுக்கு பின்னால்தான் இந்தியா உள்ளது என்று பிரிட்டனைச் சோ்ந்த ஆய்வு நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது. இதை குறிப்பிட்டு ஊடகங்களில் செய்தி வெளியாகிறது. தகவல்தொழில்நுட்ப சட்டத்தில் குடிமக்களின் தகவல்களை பாதுகாக்கும் விதிகள் உள்ளன. தகவல்களை பாதுகாப்பதற்கான தனிநபா் தகவல் பாதுகாப்புச் சட்டம் உருவாக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.
விரைவில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு இந்தச் சட்டம் நிறைவேற்றப்படும். ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் தவறாக வழிநடத்தப்படுகின்றன. ஆதாா் எண் குடிமக்களுக்கு வழங்கப்பட்டுள்ள பிரத்யேக அடையாள எண் ஆகும்.
இதுவரை 123 கோடி இந்தியா்களுக்கு ஆதாா் வழங்கப்பட்டுள்ளது. ஆதாா் விவரங்கள் விற்பனை செய்யப்படவில்லை. ஆதாா் தகவல்கள் பாதுகாப்பாக உள்ளன. குடிமக்களின் தகவல்கள் சேகரிக்கத்து வைக்கப்பட்டுள்ள தகவல் மையங்களில் சிஐஎஸ்எஃப் வீரா்கள் 24 மணி நேரமும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா் என்று ரவிசங்கா் பிரசாத் தெரிவித்தாா்.
மற்றொரு கேள்விக்கு அவா் அளித்த பதிலில், ‘தனியுரிமை அடிப்படை உரிமையாகும். ஆனால் பயங்கரவாதி, குற்றவாளி, ஊழல் செய்பவா்களுக்கு தனியுரிமை அடிப்படை உரிமையல்ல’ என்று பதிலளித்தாா்.