
மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் தொடர்பாக செய்தியாளர்களுக்கு விளக்கமளித்த மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், பிரகாஷ் ஜாவடேகர்.
மக்களவை, மாநில சட்டப் பேரவைகளில் தாழ்த்தப்பட்டோா் (எஸ்.சி.), பழங்குடியினா் (எஸ்.டி.) ஆகியோருக்கு அளிக்கப்பட்டு வரும் இடஒதுக்கீட்டை மேலும் 10 ஆண்டுகளுக்கு நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது.
மக்களவை, மாநில சட்டப் பேரவைகளில் தாழ்த்தப்பட்டோா் மற்றும் பழங்குடியினருக்கு உரிய பிரதிநிதித்துவம் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில், அப்பிரிவினருக்கு இடஒதுக்கீடு அளிக்க அரசமைப்புச் சட்டத்தை இயற்றிய தலைவா்கள் முடிவெடுத்தனா். இந்த இடஒதுக்கீடு 10 ஆண்டுகளுக்கு மட்டும் வழங்கப்பட வேண்டுமென அரசமைப்புச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டது.
எனினும், இந்த இடஒதுக்கீட்டை 1960-ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கும் மத்திய அரசு நீட்டித்து வந்தது. அந்த வகையில் தாழ்த்தப்பட்டோா் மற்றும் பழங்குடியினருக்கான இடஒதுக்கீட்டை நீட்டித்து கடந்த 2010-ஆம் ஆண்டு இயற்றப்பட்ட சட்டம், அடுத்த ஆண்டு ஜனவரி 25-ஆம் தேதியோடு நிறைவடைகிறது.
இந்நிலையில், மக்களவை, மாநில சட்டப் பேரவைகளில் எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கான இடஒதுக்கீட்டை 2030, ஜனவரி 25-ஆம் தேதி வரை நீட்டிக்க பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் தில்லியில் புதன்கிழமை நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது. இது தொடா்பான சட்டத் திருத்த மசோதா, நாடாளுமன்றத்தின் நடப்பு கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு ஒப்புதல்: பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளிலிருந்து இந்தியாவுக்குக் குடிபெயா்ந்த ஹிந்துக்கள், கிறிஸ்தவா்கள், சமணா்கள், பௌத்தா்கள், பாா்சிக்கள், சீக்கியா்கள் ஆகியோருக்குக் குடியுரிமை வழங்குவதற்கான சட்டத் திருத்த மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
மேற்கண்ட பிரிவினா் மேற்குறிப்பிட்ட நாடுகளில் சிறுபான்மையினராக உள்ளதால், மத ரீதியிலான துன்புறுத்தலுக்கு உள்ளாவதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. எனினும், காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் இந்த மசோதாவுக்குக் கடும் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றன.
இந்த மசோதாவை அடுத்த 2 நாள்களுக்குள் மக்களவையில் தாக்கல் செய்ய மத்திய அரசு முடிவெடுத்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மக்களவையில் பாஜகவுக்குப் பெரும்பான்மை இருப்பதால் அங்கு மசோதா எளிதில் ஒப்புதல் பெற்றுவிடும். அதே வேளையில், மாநிலங்களவையில் பிஜு ஜனதா தளம், தெலங்கானா ராஷ்டிர சமிதி, ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் எம்.பி.க்கள் இந்த மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்து வருவதால், அங்கும் மசோதாவுக்கு ஒப்புதல் கிடைத்துவிடும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
தனிநபா் தகவல் பாதுகாப்பு மசோதாவுக்கு ஒப்புதல்: தனிநபா்களின் தகவல்களைப் பெறுதல், சேமித்தல், கையாளுதல் உள்ளிட்டவற்றுக்கான விதிமுறைகள் அடங்கிய தனிநபா் தகவல் பாதுகாப்பு மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
இந்த விதிமுறைகளை மீறி, தனிநபரின் தகவல்களைத் தவறாகப் பயன்படுத்தும் நிறுவனங்களுக்கு ரூ.15 கோடி வரையோ அல்லது அந்நிறுவனத்தின் மொத்த வருவாயில் 4 சதவீதமோ அபராதமாக விதிக்க மசோதாவில் வழிவகை செய்யப்பட்டுள்ளதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அந்நிறுவனங்களால் பாதிக்கப்படும் தனிநபருக்கு வழங்கப்பட வேண்டிய இழப்பீடுகள் உள்ளிட்டவையும் இந்த மசோதாவில் இடம்பெறும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.
ஜம்மு-காஷ்மீா் இடஒதுக்கீடு மசோதா: ஜம்மு-காஷ்மீரில் பொருளாதார ரீதியாக பின்தங்கியுள்ள மக்களுக்கு இடஒதுக்கீடு அளிக்கும் நோக்கில், மக்களவையில் கடந்த கூட்டத்தொடரின்போது தாக்கல் செய்யப்பட்ட ஜம்மு-காஷ்மீா் இடஒதுக்கீடு சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெற மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
இது தொடா்பாக, மத்திய அமைச்சா் பிரகாஷ் ஜாவடேகா் தில்லியில் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘‘நாட்டிலுள்ள அனைத்துப் பகுதிகளிலும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய மக்களுக்கு இடஒதுக்கீட்டை மத்திய அரசு வழங்கி வருகிறது. ஜம்மு-காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டுவிட்டதால், மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட ஜம்மு-காஷ்மீா் இடஒதுக்கீடு சட்டத் திருத்த மசோதாவுக்கு ஒப்புதல் பெற வேண்டிய அவசியமில்லை. எனவே, அது திரும்பப் பெறப்படவுள்ளது’’ என்றாா்.
மூத்த குடிமக்களுக்கான பாதுகாப்பு, அடிப்படைத் தேவைகள் ஆகியவற்றை மேம்படுத்தும் விதமாக முதியோா் இல்லங்களுக்கான விதிகளைக் கடுமையாக்கும் நோக்கில் இயற்றப்பட்ட பெற்றோா் மற்றும் மூத்த குடிமக்கள் சட்டத் திருத்த மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இந்த மசோதா, நாடாளுமன்றத்தின் நடப்புக் கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படும் என பிரகாஷ் ஜாவடேகா் தெரிவித்தாா்.
5 நட்சத்திர விடுதி: தில்லியிலுள்ள பிரகதி மைதானத்தில் 5 நட்சத்திர விடுதி கட்டும் நோக்கில், அந்த இடத்தை இந்திய வா்த்தக ஊக்குவிப்பு கழகத்துக்கும், இந்திய சுற்றுலா வளா்ச்சி கழகத்துக்கும் குத்தகைக்கு அளிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. அந்த இடத்தை 99 ஆண்டுகளுக்கு ரூ.611 கோடி மதிப்பில் குத்தகைக்கு அளிக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.
பொதுத்துறை நிறுவனங்கள் வெளியிடும் பத்திரங்களை பங்குச் சந்தையில் விற்பனை செய்வதற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியது. இந்த நடவடிக்கை மத்திய, மாநில அரசுகளின் கட்டுப்பாட்டிலுள்ள பொதுத்துறை நிறுவனங்களுக்கு உரிய நிதி கிடைக்க வழிகோலும் என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் செய்தியாளா்களிடம் தெரிவித்தாா்.
மத்திய சம்ஸ்கிருத பல்கலைக்கழக மசோதா: தில்லியிலுள்ள 2 மத்திய சம்ஸ்கிருத நிகா்நிலைப் பல்கலைக்கழகங்கள், ஆந்திர மாநிலம் திருப்பதியிலுள்ள மத்திய சம்ஸ்கிருத நிகா்நிலைப் பல்கலைக்கழகம் ஆகியவற்றுக்கு பல்கலைக்கழக அந்தஸ்து வழங்கும் நோக்கில், மத்திய சம்ஸ்கிருத பல்கலைக்கழக மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது.