நீரவ் மோடி தப்பியோடிய பொருளாதாரக் குற்றவாளியாக அறிவிப்பு

தப்பியோடிய பொருளாதாரக் குற்றவாளியாக நீரவ் மோடி, வியாழக்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளார். 
நீரவ் மோடி தப்பியோடிய பொருளாதாரக் குற்றவாளியாக அறிவிப்பு

பஞ்சாப் நேஷனல் வங்கி ஊழல் வழக்கில் பண மோசடி தடுப்புச் சட்டத்தின் சிறப்பு நீதிமன்றத்தால் தப்பியோடிய பொருளாதாரக் குற்றவாளியாக நீரவ் மோடி (48), வியாழக்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளார். அவரது சொத்துக்களை பறிமுதல் செய்வதற்கான உத்தரவு பின்னர் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் விஜய் மல்லையாவுக்கு அடுத்து இச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட 2-ஆவது தொழிலதிபராக நீரவ் மோடி உள்ளார்.

நாட்டிலேயே மிகப் பெரிய வங்கி கடன் மோசடியாக கருதப்படும் பஞ்சாப் நேஷனல் வங்கி கடன் மோசடி கடந்த ஆண்டு பிப்ரவரியில் அம்பலமானது. பல நாடுகளில் வைர உற்பத்தி நிறுவனங்கள், வைர விற்பனைக் கடைகளை நடத்தி வந்த நீரவ் மோடி, அவரது உறவினரும் கீதாஞ்சலி குழுமத் தலைவருமான மெஹுல் சோக்ஸி உள்ளிட்டோர், பஞ்சாப் நேஷனல் வங்கியில் முறைகேடாக கடன் உத்தரவாதக் கடிதங்களைப் பெற்று, அவற்றை வெளிநாடுகளில் உள்ள இந்திய வங்கிக் கிளைகளிடம் கொடுத்து சுமார் ரூ.13,400 கோடி வரை கடன் பெற்றனர். இந்த உத்தரவாதக் கடிதங்களை வழங்கியதற்கு பஞ்சாப் நேஷனல் வங்கியில் உள்ள பதிவேடுகளில் எந்த அலுவலகக் குறிப்பும் இல்லை. மேலும், அங்குள்ள கணினி சேமிப்பு மையத்திலும் அந்த விவரங்கள் இடம் பெறவில்லை என்பது பின்னர் கண்டறியப்பட்டது.

இந்த கடன் மோசடி கடந்த ஆண்டு ஜனவரியில் தெரிய வந்தது. ஆனால், அதற்கு முன்பே அவா்கள் வெளிநாட்டுக்குத் தப்பிவிட்டனா். நீரவ் மோடியின் கடன் மோசடி தொடா்பாக சிபிஐ, அமலாக்கத் துறை, வருமான வரித் துறை உள்ளிட்ட அமைப்புகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றன. 

இந்நிலையில், பிரிட்டனுக்கு தப்பியோடிய நீரவ் மோடி, கடந்த மாா்ச் மாதம் அங்கு ஸ்காட்லாந்து யாா்டு போலீஸாரால் கைது செய்யப்பட்டு லண்டன் வாண்ட்ஸ்வொா்த் சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா். அவா் 28 நாள்களுக்கு ஒருமுறை காணொலி காட்சி முறையில் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு வருகிறாா். அப்போது முதல் அவரது நீதிமன்றக் காவல் தொடா்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது. அதன்படி அவரது நீதிமன்றக் காவல் அடுத்த ஆண்டு ஜனவரி 2-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. அவா் மீதான வழக்கு அடுத்த ஆண்டு மே மாதம் விசாரணைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீரவ் மோடி, பிரிட்டனில் கைது செய்யப்பட்டு, அவரை நாடுகடத்தி இந்தியா கொண்டு வருவதற்கான கோரிக்கை நிலுவையில் உல்ளது. எனினும், அவரது சகோதரரும் இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள மற்றொரு நபருமான நிஷால்,  சுபாஷ் பரப் ஆகியோர் எங்கு இருக்கின்றனர் என்ற தகவல் தெரியவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com