நாட்டின் பொருளாதார நிலை மிக மோசமான சூழ்நிலையில் உள்ளது: சிதம்பரம் பேட்டி

நாட்டின் பொருளாதார நிலை மிக மோசமான சூழ்நிலையில் உள்ளது என்று காங்கிரஸ் மூத்தத் தலைவர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
நாட்டின் பொருளாதார நிலை மிக மோசமான சூழ்நிலையில் உள்ளது: சிதம்பரம் பேட்டி


புது தில்லி: நாட்டின் பொருளாதார நிலை மிக மோசமான சூழ்நிலையில் உள்ளது என்று காங்கிரஸ் மூத்தத் தலைவர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கைது செய்யப்பட்டு 105 நாட்களுக்குப் பிறகு ஜாமீனில் வெளியே வந்த காங்கிரஸ் மூத்தத் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சிதம்பரம் இன்று நாடாளுமன்றத்துக்கு வந்திருந்தார்.

பிறகு புது தில்லியில் செய்தியாளர்களை சந்தித்த ப. சிதம்பரம், நாட்டின் பொருளாதார நிலை மிக மோசமான சூழ்நிலையில் உள்ளது. நாட்டின் பொருளாதாரம் எதிர்கொண்டிருக்கும் பிரச்னையை பாஜக அரசால் இன்னும் யூகிக்கக் கூட முடியவில்லை. பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி. எனும் வரி பயங்கரவாதம் ஆகிய  மோசமான முடிவுகளால் நாட்டின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

பொருளாதார விவகாரங்களில் ஒன்றன் பின் ஒன்றாக  பாஜக தவறு செய்து வருகிறது. பிரதமர் மோடி நாட்டின் பொருளாதார நிலைமை குறித்து பேசுவதே இல்லை. நல்ல நாள் வரும் என்று பாஜக வாக்குறுதியின் முடிவு இந்த நிலையை ஏற்படுத்தியிருக்கிறது.

அமைச்சராக எனது நடவடிக்கையும், எனது மனசாட்சியும் முற்றிலும் தெளிவாக இருந்தன. என்னுடன் பணியாற்றிய அதிகாரிகள், என்னுடன் உரையாடிய தொழிலதிபர்கள் மற்றும் என்னைக் கவனித்த பத்திரிகையாளர்கள் உள்ளிட்டோர் அதை நன்கு அறிவார்கள்.

நமது நாட்டின் பொருளாதார வளர்ச்சி நடப்பாண்டில் 5 சதவீதத்துடன் நிறைவடைந்தால், நாம் அதிர்ஷ்டசாலிகள் தான். இதில், அரவிந்த் சுப்பிரமணியனின் எச்சரிக்கையை நாம் அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும். ஏனென்றால், இந்த அரசாங்கத்தின் கீழ் 5 சதவீத பொருளாதார வளர்ச்சி என்பது சந்தேகத்திற்கிடமானது. உண்மையில் 5 சதவீதத்தை விட சுமார் 1.5% குறைவாக தான் ஜிடிபி வளர்ச்சி உள்ளது.

பொருளாதாரம் தொடர்பான நடவடிக்கைகளில் வழக்கத்துக்கு மாறாக பிரதமர் மோடி தொடர்ந்து மௌனம் காத்து வருகிறார். நிதித்துறை நடவடிக்கைகளின் அனைத்து ஏற்ற, இறக்கங்களையும் சந்திக்க தனது அமைச்சர்களிடம் அதை விட்டுவிட்டார். பொருளாதார நிபுணர்கள் கூறியது போல், நமது அரசாங்கம் பொருளாதாரத்தை திறமையற்ற முறையில் வழிநடத்தி வருகிறது.

புதன்கிழமை இரவு 8 மணியளவில் நான் சிறையில் இருந்து வெளியேறி சுதந்திரக் காற்றை சுவாசித்தபோது, ​​எனது முதல் எண்ணமும் பிரார்த்தனையும் ஆகஸ்ட் மாதம் 04-ஆம் தேதி முதல் அடிப்படை சுதந்திரம் மறுக்கப்பட்டு வரும் காஷ்மீர் பள்ளத்தாக்கின் 75 லட்சம் மக்கள் மீது தான் இருந்தது.

எவ்வித குற்றச்சாட்டுகளும் இன்றி கைது செய்யப்படும் அரசியல் தலைவர்கள் குறித்து நான் மிகவும் கவலைப்படுகிறேன். சுதந்திரம் பிரிக்க முடியாதது, நமது சுதந்திரத்தை நாம் பாதுகாக்க வேண்டும் என்றால், அதற்காக போராட வேண்டும் என்று தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com