ஹைதராபாத் என்கவுன்டர்: பலியான 4 பேரின் குடும்பத்தினர் என்ன சொல்கிறார்கள்?

விசாரணை நடைபெற்று முடிவதற்குள்ளாகவே, வழக்கில் கைது செய்யப்பட்ட நால்வரையும் என்கவுன்டரில் சுட்டுக் கொன்றிருப்பதற்கு, அவர்களது குடும்பத்தினர் கடும் அதிர்ச்சி தெரிவித்துள்ளனர்.
ஹைதராபாத் என்கவுன்டர்: பலியான 4 பேரின் குடும்பத்தினர் என்ன சொல்கிறார்கள்?

ஹைதராபாத்: விசாரணை நடைபெற்று முடிவதற்குள்ளாகவே, வழக்கில் கைது செய்யப்பட்ட நால்வரையும் என்கவுன்டரில் சுட்டுக் கொன்றிருப்பதற்கு, அவர்களது குடும்பத்தினர் கடும் அதிர்ச்சி தெரிவித்துள்ளனர்.

தெலங்கானாவில் கால்நடை பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் இரண்டு லாரி ஓட்டுநர்கள், இரண்டு க்ளீனர்கள் கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் நால்வரும் இன்று சம்பவ இடத்தில் என்கவுன்டர் செய்யப்பட்டனர். இது குறித்து அவர்களது குடும்பத்தினர் கூறுகையில், விசாரணை நடத்தப்பட்டு, மரண தண்டனை அளிக்கப்பட்டிருந்தால் கூட நாங்கள் இந்த அளவுக்கு கவலைப்பட்டிருக்க மாட்டோம்.

குற்றம்சாட்டப்பட்டவர்களின் குடும்பத்தினர் தங்கியிருக்கும் நாராயண்பெட் மாவட்டத்தில், தொலைக்காட்சிகள் மூலம் செய்தி பரவியபோது ஒட்டுமொத்த குடும்பத்தினரும் அதிர்ச்சியில் உறைந்தனர்.

ஊடகங்கள், சம்பந்தப்பட்ட கிராமத்துக்குச் சென்று, என்கவுன்டர் செய்யப்பட்ட ஆரிஃப்பின் தாயிடம் பேசியபோது, அவர் கதறி அழுதார். நான் எனது மகனை இழந்துவிட்டேன். என்னை என்ன சொல்லச் சொல்கிறீர்கள்? என்று கேட்டார்.

சென்னகேசலுவின் கர்பிணி மனைவி ரேணுகா பேசுகையில், என் கணவர் இல்லாமல் என்னால் வாழ முடியாது, என்னையும் கொன்றுவிடுங்கள் என்று கூறி கதறி அழுதார்.

என் கணவரை காவல்துறையினர் அழைத்துச் சென்ற போது, உடனடியாக அனுப்பிவிடுவோம் என்று சொல்லித்தான் கொண்டு சென்றனர். ஆனால் தற்போது அவர்களே அவரை சுட்டுக் கொன்றுள்ளனர் என்று கூறினார்.

ஜொல்லு சிவாவின் தந்தை ராஜப்பா பேசுகையில், எத்தனையோ பலாத்காரக் குற்றங்கள் நடக்கிறது. ஆனால், ஏன் எனது மகன் மற்றும் இதர 3 பேரை மட்டும் போலீஸ் கொல்ல வேண்டும் என்று கேள்வி எழுப்பினார்.

சுட்டுக் கொல்லப்பட்ட சொல்லு நவீனின் தந்தை எல்லப்பா கூறுகையில், எங்களது பிள்ளையை சந்திக்கவோ, பேசவோ கூட எங்களை போலீஸ் அனுமதிக்கவில்லை. குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீதான ஆதாரங்களைத் திரட்டி, குற்றத்தை நிரூபித்து நீதிமன்றத்தில் தண்டனை வாங்கிக் கொடுத்திருக்க வேண்டுமே தவிர இப்படி செய்திருக்கக் கூடாது என்று கூறுகிறார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com