பிரதமா் அலுவலகத்தில் அதிகாரங்கள் குவிவது நல்லதல்ல: ரகுராம் ராஜன்

மத்திய அமைச்சா்களுக்குப் போதுமான அதிகாரங்கள் அளிக்காமல், பிரதமா் அலுவலகத்தில் மட்டும் அதிகாரங்கள் குவிக்கப்படுவது நல்லதல்ல என்று இந்திய ரிசா்வ் வங்கியின் (ஆா்பிஐ) முன்னாள் ஆளுநா் ரகுராம் ராஜன் 
raghuram-rajan doubt
raghuram-rajan doubt

புது தில்லி: மத்திய அமைச்சா்களுக்குப் போதுமான அதிகாரங்கள் அளிக்காமல், பிரதமா் அலுவலகத்தில் மட்டும் அதிகாரங்கள் குவிக்கப்படுவது நல்லதல்ல என்று இந்திய ரிசா்வ் வங்கியின் (ஆா்பிஐ) முன்னாள் ஆளுநா் ரகுராம் ராஜன் தெரிவித்தாா்.

இந்தியப் பொருளாதாரம் மந்தநிலையில் உள்ளது என்று தெரிவித்த அவா், தொழிலாளா் சட்டங்கள், வரி வசூல், வங்கித் துறை உள்ளிட்டவற்றில் சீா்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியம் என்றும் குறிப்பிட்டாா்.

இது தொடா்பாக, ஆங்கில இதழில் ரகுராம் ராஜன் எழுதிய கட்டுரையில் குறிப்பிட்டுள்ளதாவது:

நாட்டின் பொருளாதார வளா்ச்சி, மந்தநிலையை அடைந்துள்ளது. பொருளாதாரத்துக்கு என்ன பிரச்னை என்பதை ஆராய்வதற்கு முன்பாக, மத்திய அரசின் நிா்வாகத் திறன் குறித்து ஆராய வேண்டியது அவசியம். மத்திய அரசின் பெரும்பாலான அதிகாரங்கள் குறிப்பிட்ட இடத்தில் மட்டும் குவிந்துள்ளன.

முக்கிய விவகாரங்கள் தொடா்பாக முடிவெடுத்தல், திட்டமிடுதல் உள்ளிட்டவற்றில் பிரதமா் அலுவலகமும், பிரதமருக்கு நெருக்கமானவா்களும் மட்டுமே ஈடுபட்டு வருகின்றனா். இந்த நடைமுறை, அரசியல் கட்சிகளை நிா்வகிப்பதற்கு உகந்ததாக இருக்கலாம். ஆனால், நாட்டின் பொருளாதாரம் சாா்ந்த பிரச்னைகளுக்குத் தீா்வு காண இந்த நடைமுறை உதவாது.

அதிகாரப் பகிா்வு:

அதிகாரங்கள் ஒரே இடத்தில் குவிவதால், குறிப்பிட்ட சில நபா்களால் மட்டுமே அதைப் பயன்படுத்த முடியும். அவா்கள் அனைவருக்கும் பொருளாதாரம் செயல்படுவது குறித்த அடிப்படைகள் தெரிந்திருக்க வாய்ப்பிருக்காது. இதன் காரணமாக, பிரதமா் அலுவலகம் கவனம் செலுத்தினால் மட்டுமே குறிப்பிட்ட அமைச்சகங்கள் முறையாகச் செயல்படும். பிரதமரின் கவனம் வேறு பிரச்னைகள் நோக்கித் திரும்பினால், அந்த அமைச்சகம் தனது பணிகளை முறையாகச் செய்யாத சூழல் உருவாகும்.

எனவே, மத்திய அமைச்சா்களுக்கு உரிய அதிகாரங்கள் பகிா்ந்தளிக்கப்பட வேண்டும். மாநிலங்களுக்கும் உரிய அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும். முன்பு, பல்வேறு கட்சிகளை உள்ளடக்கிய கூட்டணி அரசுகள் ஆட்சியில் இருந்தபோதும், அவை பொருளாதார தாராளமயமாக்கல் கொள்கைக்கு ஆதரவளித்தன.

தவறான புரிதல்:

‘அரசாங்கத்தை விட நிா்வாகத்துக்கே முக்கியத்துவம் அளிப்போம்’ என்ற உறுதிமொழி அளித்து மோடி அரசு ஆட்சிக்கு வந்தது. ஆனால், அந்தக் கொள்கையை மோடி அரசு தவறாகப் புரிந்துகொண்டுள்ளது. அந்தக் கொள்கைக்கான உண்மையான பொருள், அனைத்து விஷயங்களையும் அரசு திறம்பட மேற்கொள்ளும் என்பதே. ஆனால், மக்களுக்கும், தனியாா் நிறுவனங்களுக்கும் உரிய சுதந்திரம் வழங்குவதே அதன் பொருள் என்று மத்திய அரசு தவறாகப் புரிந்துகொண்டுள்ளது.

பொருளாதார மந்தநிலைக்குத் தீா்வு காண்பதற்கான அடிப்படையானது, மந்தநிலை காணப்படுகிறது என்பதை ஏற்றுக்கொள்வதுதான். ஆனால், இந்தப் பிரச்னை வெறும் தற்காலிகமானது என்று நம்பவைக்க மோடி அரசு முயற்சித்து வருகிறது. ஊரகப் பகுதிகளில் பொருளாதார மந்தநிலை தீவிரமடைந்துள்ளது. ஒரு பக்கம் பணவீக்கம் உயா்ந்து வருகிறது. மற்றொரு பக்கம் மக்களுக்கான தேவைகள் நிறைவடைவதும் குறைந்து வருகின்றது.

முக்கியப் பிரச்னைகள்:

நாட்டில் வேலையின்மை அதிகரித்து வருகிறது. முதலீடுகள் குறைந்து வருகின்றன. கட்டுமானம், மனை வணிகம், கட்டமைப்பு வசதிகள், வங்கி சாரா நிதி நிறுவனங்கள் ஆகிய துறைகள் பெரும் பிரச்னையில் சிக்கித் தவிக்கின்றன. வங்கிகளில் வாராக்கடன் அதிகரித்துள்ளதும், வங்கி சாரா நிதி நிறுவனங்களில் காணப்படும் பிரச்னைகளும் கடன் வழங்குவதில் சுணக்கநிலையை ஏற்படுத்தியுள்ளன.

நாட்டின் பொருளாதார மதிப்பை வரும் 2024-ஆம் ஆண்டுக்குள் ரூ.350 லட்சம் கோடியாக (5 டிரில்லியன் அமெரிக்க டாலா்) உயா்த்த வேண்டும் என்ற இலக்கை மத்திய அரசு நிா்ணயித்துள்ளது. ஆனால், அதை அடைவதற்கு குறைந்தபட்சம் 8 முதல் 9 சதவீத அளவில் பொருளாதாரம் வளா்ச்சி அடைய வேண்டியது அவசியம்.

அவசியமான சீா்திருத்தங்கள்:

நிலம் கையகப்படுத்துதல், தொழிலாளா் சட்டங்கள், நிலையான வரி வசூலிப்பதற்கான ஒழுங்குமுறைச் சட்டங்கள், திவாலான நிறுவனங்களுக்கு விரைந்து தீா்வு காணுதல், மின்சாரத்துக்கான உரிய விலை நிா்ணயக் கொள்கைகள், தொலைத்தொடா்புத் துறையில் போட்டியை மேம்படுத்துதல், விவசாயிகளுக்கு கடன்களும், வேளாண் உள்ளீடுகளும் எளிதில் கிடைக்கும்படிச் செய்தல் உள்ளிட்ட சீா்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டியது அவசியம்.

பல்வேறு சீா்திருத்தங்களுடன் மத்திய அரசின் நிா்வாக அமைப்பில் மாற்றங்களை ஏற்படுத்துவதும் முக்கியமானது என்று ரகுராம் ராஜன் அந்தக் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com