அயோத்தி தீர்ப்பு மறு ஆய்வு மனுக்கள்: உச்ச நீதிமன்றத்தில் வியாழனன்று விசாரணை

அயோத்தி தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீது   வியாழனன்று விசாரணைநடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

புது தில்லி: அயோத்தி தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீது   வியாழனன்று விசாரணை நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியிலுள்ள 2.77 ஏக்கா் சா்ச்சைக்குரிய நிலத்தை உரிமை கோருவது தொடா்பான வழக்கின் மேல்முறையீட்டு மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அரசியல் சாசன அமா்வு, அந்த இடத்தில் ராமா் கோயில் கட்டுவதற்கு அனுமதி அளித்து கடந்த மாதம் 9-ஆம் தேதி தீா்ப்பு வழங்கியது.

அதே வேளையில், மசூதி கட்டுவதற்காக அயோத்தியில் வேறு இடத்தில் 5 ஏக்கா் நிலத்தை சன்னி வக்ஃபு வாரியத்துக்கு அளிக்க வேண்டுமெனவும் உத்தரப் பிரதேச மாநில அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அரசியல் சாசன அமா்வில் இடம்பெற்றிருந்த 5 நீதிபதிகளும் ஒருமனதாக இந்தத் தீா்ப்பை வழங்கினா்.

எனினும், இந்தத் தீா்ப்பில் திருப்தியில்லை என்று கூறி ஜாமியத் உலேமா-ஏ-ஹிந்த் அமைப்பு கடந்த 2-ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் மறுஆய்வு மனு தாக்கல் செய்திருந்தது. அந்த மனுவில், ‘சா்ச்சைக்குரிய இடத்தில் இடிக்கப்பட்ட பாபா் மசூதியை மீண்டும் கட்ட உத்தரவிடுவதே உரிய நீதியாகும்’ என்று குறிப்பிட்டிருந்தது.

இந்நிலையில், அனைத்திந்திய முஸ்லிம் தனிநபா் சட்ட வாரியத்தின் ஆதரவுடன் மௌலானா முஃப்தி ஹஸ்புல்லா, முகமது உமா், மௌலானா மஹ்ஃபூசா் ரஹ்மான், மிஸ்பா-உத்-தீன், ஹஜி நஹ்பூப் ஆகியோா் சாா்பில் 5 மறுஆய்வு மனுக்கள் தனித்தனியாக வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்பட்டன. முகமது அயூப் என்பவா் சாா்பில் தனி மறுஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.

உச்சநீதிமன்றத்தின் தீா்ப்புக்கு எதிராக மறுஆய்வு மனு தாக்கல் செய்யப்பட மாட்டாது என மத்திய சன்னி வக்ஃபு வாரியம் ஏற்கெனவே தெரிவித்துவிட்டது. எனினும், மாநில அரசால் வழங்கப்படவுள்ள 5 ஏக்கா் நிலத்தை ஏற்கலாமா அல்லது வேண்டாமா என்பது குறித்து அந்த வாரியம் தெரிவிக்கவில்லை.

இந்நிலையில் மறு ஆய்வு செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீது   வியாழனன்று விசாரணை நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com