மாநிலங்களவையிலும் குடியுரிமை சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றம்

சர்ச்சைக்குரிய குடியுரிமை சட்டத்திருத்த மசோதா புதனன்று மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டது.
அமித்ஷா
அமித்ஷா

புது தில்லி: சர்ச்சைக்குரிய குடியுரிமை சட்டத்திருத்த மசோதா புதனன்று மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டது.

குடியுரிமை சட்டத் திருத்த மசோதா கடந்த திங்கள்கிழமை மக்களவையில் நிறைவேறியது. இதையடுத்து புதனன்று மாநிலங்களவையில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. உள்துறை அமைச்சர் அமித்ஷா இந்த மசோதாவை அறிமுகம் செய்து பேசினார்.

அவர் தனது பேச்சின்போது, 'குடியுரிமை சட்டத் திருத்த மசோதா முஸ்லிம்களுக்கு எதிரானதல்ல. இந்தியாவில் பிரிவினை ஏற்படாமல் இருந்திருந்தால், குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவைக் கொண்டு வரவேண்டிய தேவை ஏற்பட்டிருக்காது. இந்த மசோதாவை 50 ஆண்டுகளுக்கு முன்பு கொண்டு வந்திருந்தால், இன்றைக்கு நிலைமை மோசமாக இருந்திருக்காது. இந்த மசோதாவில் 6 மதங்களை உள்ளடக்கியதற்கு எந்தவித பாராட்டும் கிடையாது. ஆனால், முஸ்லிம்கள் ஏன் சேர்க்கப்படவில்லை என்பதில் மட்டுமே முழு கவனமும் இருக்கிறது' என்று தெரிவித்தார்.

பின்னர் இதுதொடர்பாக மாநிலங்களவையில் காரசாரமான விவாதம் நடந்தது. இந்த மசோதாவை தேர்வுக் குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்று காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகள் மாநிலங்களவையில் கோரிக்கை வைத்தன.  பின்னர் இதுதொடர்பாக வாக்கெடுப்பு நடத்துவது என்று முடிவானது. ஆனால் வாக்கெடுப்பை புறக்கணித்து மாநிலங்களவையில் இருந்து சிவசேனா வெளிநடப்பு செய்தது.

பின்னர் நடந்த வாக்கெடுப்பின் முடிவில் தீர்மானத்திற்கு எதிராக 124 உறுப்பினர்களும், ஆதரவாக 99 உறுப்பினர்களும்  வாக்களித்தனர்.  இதன் காரணமாக குடியுரிமை மசோதாவை தேர்வுக் குழுவுக்கு அனுப்பி, அதனை நிறைவேறாமல் தடுக்கலாம் என்ற எதிர்க்கட்சிகளின் தீர்மானம் தோல்வி அடைந்தது.

அதையடுத்து குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை நிறைவற்றுவது தொடர்பாக மாநிலங்களவையில் இறுதி வாக்கெடுப்பு நடைபெற்றது.

அதில் மசோதாவிற்கு ஆதரவாக 125 வாக்குகளும் எதிராக 105 வாக்குகள் பதிவாகின.  இதையடுத்து மக்களவையைத் தொடர்ந்து மாநிலங்களவையிலும் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டதையடுத்து  குடியுரிமை மசோதா குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com