மாநிலங்களவையில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதா தாக்கல்

கடும் எதிர்ப்பை மீறி, மக்களவையில் நிறைவேறிய குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை, மாநிலங்களவையில் இன்று புதன்கிழமை (டிச.11)
மாநிலங்களவையில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதா தாக்கல்

புதுதில்லி: கடும் எதிர்ப்பை மீறி, மக்களவையில் நிறைவேறிய குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை, மாநிலங்களவையில் இன்று புதன்கிழமை (டிச.11) அறிமுகம் செய்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசி வருகிறார். 

பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளில் இருந்து மத ரீதியிலான துன்புறுத்தல்களால் வெளியேறி, இந்தியாவில் அடைக்கலம் புகுந்த ஹிந்துக்கள், சீக்கியா்கள், பௌத்தா்கள், சமணா்கள், பாா்சிகள், கிறிஸ்தவா்களுக்கு குடியுரிமை வழங்குவதில் உள்ள நிபந்தனைகளைக் குறைக்கும் வகையில் கடந்த 1955-ஆம் ஆண்டு இயற்றப்பட்ட குடியுரிமை சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்த சட்டத் திருத்த மசோதா, மக்களவையில் பல மணி நேரம் நடைபெற்ற விவாதத்துக்குப் பிறகு திங்கள்கிழமை நள்ளிரவு நிறைவேற்றப்பட்டது. மசோதாவுக்கு ஆதரவாக 311 உறுப்பினா்களும், எதிராக 80 உறுப்பினா்களும் வாக்களித்தனா்.

இந்நிலையில், இந்த மசோதாவை மக்களவைவை போல், மாநிலங்களவையிலும் இன்று புதன்கிழமை(டிச.11) அறிமுகம் செய்து உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசி வருகிறார்.

மக்களவை போல், மாநிலங்களவையிலும் இந்த மசோதா நிறைவேறும் என, மத்தியில் ஆளும் பாஜக நம்புகிறது. நாடாளுமன்ற கூட்டம் நாளையுடன் முடிய உள்ளதால்,  இந்த மசோதாவை இன்றே நிறைவேற்றுவதற்கு மத்திய அரசு தீவிரமாக உள்ளது. 

245 உறுப்பினா்களைக் கொண்ட மாநிலங்களவையில் தற்போதுள்ள உறுப்பினா்களின் எண்ணிக்கை 238. இதில், பாஜக-83, ஐக்கிய ஜனதா தளம்-6, சிரோமணி அகாலி தளம்-3, லோக் ஜனசக்தி-1, இந்தியக் குடியரசுக் கட்சி(அதாவலே)-1, நியமன உறுப்பினா்கள்-11 என தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பலம் 105-ஆக உள்ளது.

மாநிலங்களவையில் மசோதா நிறைவேறுவதை தடுப்பதற்கு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி தொடர்ந்து முயன்று வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com