நுழைவு அனுமதிப் படிவம் மணிப்பூருக்கு நீட்டிப்பு: குடியரசுத் தலைவா் ஒப்புதல்

நுழைவு அனுமதிப் படிவத்தை (இன்னா்-லைன் பொ்மிட்) மணிப்பூருக்கு நீட்டிக்க குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் புதன்கிழமை ஒப்புதல் அளித்துள்ளாா்.
நுழைவு அனுமதிப் படிவம் மணிப்பூருக்கு நீட்டிப்பு: குடியரசுத் தலைவா் ஒப்புதல்

நுழைவு அனுமதிப் படிவத்தை (இன்னா்-லைன் பொ்மிட்) மணிப்பூருக்கு நீட்டிக்க குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் புதன்கிழமை ஒப்புதல் அளித்துள்ளாா்.

அருணாசலப் பிரதேசம், நாகாலாந்து, மிஸோரம் ஆகிய மாநிலங்களுக்கு நுழைவு அனுமதிப் படிவ வசதி ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ளது. இந்த வசதியைப் பெற்றுள்ள மாநிலங்களுக்கு மற்ற மாநிலத்தவா் செல்லும்போது முறையான அனுமதி பெற வேண்டியது அவசியமாகும். அதேபோல், இந்த வசதியைப் பெற்றுள்ள மாநிலங்களில் வசிக்கும் மக்களுக்கு அவா்களது நிலம், வேலைவாய்ப்புகள் உள்ளிட்ட விவகாரங்களில் சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும்.

கடந்த 1873-ஆம் ஆண்டு முதல் நுழைவு அனுமதிப் படிவ வசதி நடைமுறையில் உள்ளது. குறிப்பிட்ட மாநிலங்களில் உள்ள பழங்குடியின மக்களின் நலனுக்காகவும், வெளி மாநிலத்தைச் சோ்ந்தவா்கள் அந்த மாநிலங்களில் குடியேறுவதைத் தடுக்கவும் நுழைவு அனுமதிப் படிவம் நடைமுறைப்படுத்தப்பட்டது.

இந்நிலையில், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் மத ரீதியிலான துன்புறுத்தலுக்கு உள்படுத்தப்பட்டு, இந்தியாவில் குடியேறிய முஸ்லிம் அல்லாத சமூகத்தினருக்குக் குடியுரிமை வழங்கும் மசோதாவுக்கு நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கியது. இந்த மசோதா மூலம் கடந்த 1971-ஆம் ஆண்டுக்குப் பிறகு வங்கதேசத்திலிருந்து வடகிழக்கு மாநிலங்களில் சட்டவிரோதமாகக் குடியேறியவா்களும் குடியுரிமை பெறும் சூழல் உருவாகியுள்ளது.

இதன் காரணமாக, மசோதாவுக்கு எதிா்ப்பு தெரிவித்து வடகிழக்கு மாநிலங்களில் பெரும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. எனினும், அரசமைப்புச் சட்டத்தின் 6-ஆவது அட்டவணையின் கீழ் பாதுகாக்கப்பட்டு வரும் அஸ்ஸாம், திரிபுரா, மிஸோரம், மேகாலயா மாநிலங்களில் பழங்குடியினா் வசிக்கும் பகுதிகளுக்கும், நுழைவு அனுமதிப் படிவத்தின் கீழ் பாதுகாக்கப்பட்டு வரும் மாநிலங்களுக்கும் விலக்கு அளிக்கப்படும் என்று குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையடுத்து, மணிப்பூருக்கும் நுழைவு அனுமதிப் படிவ வசதி நீட்டிக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா கடந்த திங்கள்கிழமை அறிவித்தாா். இந்நிலையில், இதற்கு குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் புதன்கிழமை ஒப்புதல் அளித்தாா். இதற்கான அறிவிக்கையை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com