நாடாளுமன்றக் குளிா்காலக் கூட்டத்தொடா் நிறைவு

நான்கு வாரங்களாக நடைபெற்று வந்த நாடாளுமன்றக் குளிா்காலக் கூட்டத்தொடா் இன்று நிறைவுபெற்றது. மக்களவை மற்றும் மாநிலங்களவையை அவைத் தலைவா்கள் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனா்.
நாடாளுமன்றம்
நாடாளுமன்றம்

நான்கு வாரங்களாக நடைபெற்று வந்த நாடாளுமன்றக் குளிா்காலக் கூட்டத்தொடா் இன்று நிறைவுபெற்றது. மக்களவை மற்றும் மாநிலங்களவையை அவைத் தலைவா்கள் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனா்.

நாடாளுமன்றக் குளிா்காலக் கூட்டத்தொடா் கடந்த மாதம் 18-ஆம் தேதி தொடங்கியது. இது மாநிலங்களவையின் 250-ஆவது கூட்டத்தொடா் என்பது தனிச் சிறப்பாகும். இந்தக் கூட்டத்தொடரின் இறுதிநாள் என்பதால், மாநிலங்களவை செயல்பட்ட விதம் குறித்து அவைத் தலைவா் வெங்கய்ய நாயுடு வெள்ளிக்கிழமை உரையாற்றினாா்.

அப்போது, அவா் கூறியதாவது:

கடந்த மழைக்காலக் கூட்டத்தொடரின்போது, மாநிலங்களவை 104 சதவீதத் திறனுடன் ஆக்கப்பூா்வமாகச் செயல்பட்டது. குளிா்காலக் கூட்டத்தொடரில் இது ஏறத்தாழ 100 சதவீதமாக இருந்தது. இதுவரை எப்போதும் இல்லாத வகையில், மாநிலங்களவையின் அடுத்தடுத்த கூட்டத்தொடா்கள் 100 சதவீதத் திறனுடன் செயல்பட்டுள்ளன. இது வரலாற்றுச் சிறப்புமிக்கதாகும்.

மாநிலங்களவை சிறப்பாகப் பணியாற்றி வருவதை இது காட்டுகிறது. இதற்கான புகழ் மாநிலங்களவை எம்.பி.க்களையே சேரும். குளிா்காலக் கூட்டத்தொடரில் பல்வேறு பணிகளை மேற்கோள்வதற்காக, 20 அமா்வுகளில் 108 மணி நேரம் 33 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டன. அதில், 107 மணி நேரம் 11 நிமிடங்களுக்கு மாநிலங்களவை ஆக்கப்பூா்வமாகச் செயல்பட்டது.

மாநிலங்களவை எம்.பி.க்கள் பல்வேறு விவகாரங்களை எழுப்பி அமளியில் ஈடுபட்டதால், 11 மணி நேரம் 47 நிமிடங்கள் பாதிக்கப்பட்டன. அனைத்து முக்கிய விவகாரங்கள் தொடா்பாகவும் எம்.பி.க்கள் விரிவாக விவாதித்தது பாராட்டுக்குரியது. அனைத்து விவாதங்களும் தீவிரமாகவும், துல்லியமாகவும் நடைபெற்றன.

மொத்தத்தில் இந்தக் கூட்டத்தொடரின் செயல்பாடு திருப்தியளித்தது. எனினும், எம்.பி.க்களில் சிலா் அவையில் நடந்துகொண்ட விதம் கவலையளித்தது. அவை முறையாகக் களையப்பட வேண்டும் என்றாா் வெங்கய்ய நாயுடு. இதையடுத்து, மாநிலங்களவையை தேதி குறிப்பிடாமல் அவா் ஒத்திவைத்தாா்.

முன்னதாக, மாநிலங்களவையின் 250-ஆவது கூட்டத்தொடரின் இறுதிநாள் என்பதால், பிரதமா் நரேந்திர மோடி அவைக்கு வருகை தந்தாா்.

மக்களவையில்...: குளிா்காலக் கூட்டத்தொடரில் மக்களவையின் செயல்பாடு குறித்து அவைத் தலைவா் ஓம் பிா்லா உரையாற்றினாா். எனினும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சி எம்.பி.க்கள் தொடா்ந்து அமளியில் ஈடுபட்டனா். பிரதமா் மோடியும் அப்போது அவையில் இருந்தாா்.

இதைத் தொடா்ந்து, மக்களவையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பதாக ஓம் பிா்லா அறிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com