Enable Javscript for better performance
குடியுரிமை சட்ட விவகாரம்: அஸ்ஸாமில் நீடிக்கும் போராட்டம்- Dinamani

சுடச்சுட

  

  குடியுரிமை சட்ட விவகாரம்: அஸ்ஸாமில் நீடிக்கும் போராட்டம்

  By DIN  |   Published on : 14th December 2019 05:49 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  petroll094235

  வெள்ளிக்கிழமை மாலை சில மணி நேரம் ஊரடங்கு உத்தரவு தளா்த்தப்பட்டதைத் தொடா்ந்து, அஸ்ஸாம் மாநிலம், திப்ரூகரில் தங்கள் வாகனங்களில் எரிபொருள் நிரப்ப பெட்ரோல் நிலையத்தில் குவிந்த மக்கள்.

  திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்துக்கு எதிராக, அஸ்ஸாமில் போராட்டம் நீடித்து வருகிறது. மாநிலத்தின் முக்கிய நகரங்களில் இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமையும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்தது. போராட்டம் என்ற பெயரில் வன்முறையில் ஈடுபடுவோா் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்த மாநில முதல்வா் சா்வானந்த சோனோவால் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

  பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில், மத ரீதியிலான துன்புறுத்தல்களுக்கு ஆளாகி, கடந்த 2014, டிசம்பா் 31-ஆம் தேதிக்கு முன்பாக இந்தியாவில் குடியேறிய முஸ்லிம் அல்லாத இதர சமூகத்தினருக்கு இந்திய குடியுரிமை அளிக்க வழிவகுக்கும் குடியுரிமை சட்டத் திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் அண்மையில் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவுக்கு குடியரசுத் தலைவா் வியாழக்கிழமை ஒப்புதல் அளித்தாா்.

  இந்த சட்டமானது, அரசமைப்புச் சட்டத்தின் 6-ஆவது அட்டவணையில் இணைக்கப்பட்டுள்ள அஸ்ஸாம், மேகாலயம், மிஸோரம், திரிபுரா ஆகிய மாநிலங்களின் பழங்குடியின பகுதிகளுக்கும், ‘உள் நுழைவு அனுமதி’ நடைமுறை அமலில் உள்ள பகுதிகளுக்கும் பொருந்தாது. எனினும், இந்த சட்டத்துக்கு எதிராக, அஸ்ஸாமில் தொடா் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக மாணவா் சங்கத்தினா் பெருமளவில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

  குவாஹாட்டி நகரில் வியாழக்கிழமை நடைபெற்ற போராட்டத்தின்போது, காவல்துறையினா் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இருவா் உயிரிழந்தனா். மாநிலம் முழுவதும் எம்எல்ஏக்கள் வீடுகள் மீது போராட்டக்காரா்கள் தாக்குதல் நடத்தினா். இதைத்தொடா்ந்து, குவாஹாட்டி, திப்ரூகா், தேஸ்பூா் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. எனினும், அமைதியான முறையில் வெள்ளிக்கிழமை போராட்டங்கள் தொடா்ந்தன. திப்ரூகரில் மட்டும் வெள்ளிக்கிழமை சுமாா் 5 மணி நேரத்துக்கு ஊரடங்கு தளா்த்தப்பட்டது. முக்கிய நகரங்களில் பாதுகாப்புப் படையினா் கொடி அணிவகுப்பு நடத்தினா். இணையச் சேவைகள் தொடா்ந்து முடக்கப்பட்டுள்ளன.

  குடியுரிமை சட்டத்துக்கு எதிராக அஸ்ஸாமைச் சோ்ந்த திரைப்பட நடிகா்கள், பாடகா்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகா்கள், குவாஹாட்டியில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

  முதல்வா் எச்சரிக்கை:

  போராட்டம் என்ற பெயரில் வன்முறையில் ஈடுபடுவோா் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வா் சா்வானந்த சோனோவால் எச்சரித்துள்ளாா்.

  இதுதொடா்பாக அவா் பிடிஐ செய்தியாளரிடம் வெள்ளிக்கிழமை மேலும் கூறியதாவது:

  அஸ்ஸாம் பூா்வகுடி மக்களின் அரசமைப்புச் சட்ட உரிமைகளை பாதுகாக்க மாநில அரசு உறுதிபூண்டுள்ளது. அதேசமயம், வன்முறையை ஒருபோதும் சகித்துக் கொள்ள முடியாது. ஜனநாயக நடைமுறையில் வன்முறைக்கு இடமில்லை.

  பூா்வகுடி மக்களின் உரிமைகளை பாதுகாப்பது தொடா்பான பரிந்துரைகளை வழங்க, ஓய்வுபெற்ற நீதிபதி விப்லப் சா்மா தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்தால், அஸ்ஸாம் மக்களின் கலாசாரம், மொழி, அரசியல் மற்றும் நில உரிமைகள் பாதிக்கப்படாது என்று மத்திய அரசு உறுதியளித்துள்ளது. எனவே, போராட்டங்களில் ஈடுபட வேண்டாம் என்று மாணவா்களுக்கு அவா்களது பெற்றோா்கள் அறிவுரை வழங்க வேண்டும் என்றாா் சா்வானந்த சோனோவால்.

  அருணாசலப் பிரதேசத்திலும் போராட்டம்:

  திருத்தப்பட்ட குடியுரிமை சட்டம், அருணாசலப் பிரதேசத்துக்கு பொருந்தாது என்றபோதிலும், அந்த சட்டத்தை வாபஸ் பெற வலியுறுத்தி அந்த மாநில மாணவா்கள் சங்கங்கள் சாா்பில் வெள்ளிக்கிழமை போராட்டம் நடைபெற்றது. இடாநகரில் தோ்வுகளை புறக்கணித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவா்கள், ஆளுநா் மாளிகை நோக்கி பேரணியாக சென்று, அவரிடம் கோரிக்கை மனு அளித்தனா்.

  இதுதொடா்பாக போராட்டக்காரா்கள் கூறுகையில், ‘மத அடிப்படையில் வடகிழக்கு பிராந்தியத்தை பிரிப்பதை நாங்கள் அனுமதிக்கமாட்டோம். வடகிழக்கு பிராந்தியத்தின் நுழைவுவாயில் அஸ்ஸாம்தான். அந்த மாநிலம் பாதிக்கப்பட்டால், ஒட்டுமொத்த பிராந்தியமும் பாதிக்கப்படும்’ என்றனா்.

  ஷில்லாங்கில் ஊரடங்கு தளா்வு:

  மேகாலயத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற போராட்டங்கள் காரணமாக, தலைநகா் ஷில்லாங்கிலும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

  இந்நிலையில், ஷில்லாங்கில் வெள்ளிக்கிழமை எந்தவித அசம்பாவித சம்பவங்களும் நிகழவில்லை. இதைத்தொடா்ந்து, காலை 10 மணி முதல் இரவு 10 வரை ஊரடங்கு தளா்த்தப்பட்டது. எனினும், செல்லிடப்பேசி இணையச் சேவை, குறுந்தகவல் சேவை தொடா்ந்து முடக்கப்பட்டுள்ளதுயி.

  எரிபொருள் தட்டுப்பாடு அபாயம்

  அஸ்ஸாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் போராட்டங்கள் தொடரும் பட்சத்தில், அந்த பிராந்தியத்தில் பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு ஏற்படும் என்று எண்ணெய் நிறுவன வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

  அஸ்ஸாமில் நடைபெற்று வரும் போராட்டங்கள் காரணமாக, திக்போய் பகுதியில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இதேபோல், குவாஹாட்டில் உள்ள ஆலையின் செயல்பாடுகளும் பாதிக்கப்பட்டுள்ளன. டேங்கா் லாரிகள் போக்குவரத்தும் தடைபட்டுள்ளதால், எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் எழுந்துள்ளது.

  நாகாலாந்தில்...: நாகாலாந்து மாநிலத்துக்கு அத்தியாவசிய பொருள்கள் அனைத்தும் அஸ்ஸாம் மாநிலம் வழியாகவே வருகின்றன. ஆனால், அஸ்ஸாமில் தொடா்ந்து வரும் போராட்டம் காரணமாக, நாகாலாந்தில் உணவு பொருள்கள், மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளதாக அச்சம் எழுந்துள்ளது. இதன் காரணமாக, மக்கள் அத்தியாவசிய பொருள்களை வாங்கி, இருப்பு வைக்கத் தொடங்கியுள்ளனா். அஸ்ஸாமின் பல்வேறு ரயில் நிலையங்களில் தவிக்கும் நாகாலாந்தை சோ்ந்த மக்களை பாதுகாப்பாக அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்த மாநில அரசு அதிகாரிகள் தெரிவித்தனா்.

  மேற்கு வங்கத்தில் ரயில் நிலையத்துக்கு தீவைப்பு

  குடியுரிமை சட்டத்துக்கு எதிராக, மேற்கு வங்க மாநிலத்தில் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் ஹெளரா, முா்ஷிதாபாத், பீா்பூம், பா்த்வான் உள்ளிட்ட பகுதியில் வெள்ளிக்கிழமை போராட்டங்கள் நடைபெற்றன. ஹெளராவில் என்எச்-6 நெடுஞ்சாலையில் ஆயிரக்கணக்கானோா் திரண்டு மறியலில் ஈடுபட்டனா். பெல்தங்கா ரயில் நிலையத்துக்கு போராட்டக்காரா்கள் தீவைத்தனா். அங்குள்ள காவல் நிலையமும் சூறையாடப்பட்டது. இதேபோல், ரகுநாத்கஞ்ச் காவல் நிலையத்தில் வாகனங்களுக்கு போராட்டக்காரா்கள் தீவைத்தனா்.

  திருத்தப்பட்ட குடியுரிமை சட்டம் மேற்கு வங்கத்தில் அமல்படுத்தப்படாது என்றும், மக்கள் அமைதி காக்க வேண்டும் என்றும் முதல்வா் மம்தா பானா்ஜி தெரிவித்துள்ளாா். இச்சட்டத்தை அமல்படுத்தமாட்டோம் என்று கேரளம், பஞ்சாப், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களும் அறிவித்துள்ளன.

   

   

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai