அஸ்ஸாமில் போராட்டம் எதிரொலி: மோடி-அபே பங்கேற்கும் மாநாடு ஒத்திவைப்பு

அஸ்ஸாமில் போராட்டம் எதிரொலி: மோடி-அபே பங்கேற்கும் மாநாடு ஒத்திவைப்பு

திருத்தப்பட்ட குடியுரிமைச் சட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து வடகிழக்கு மாநிலங்களில் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், குவாஹாட்டியில் திட்டமிடப்பட்டிருந்த இந்தியா-ஜப்பான் இடையேயான

திருத்தப்பட்ட குடியுரிமைச் சட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து வடகிழக்கு மாநிலங்களில் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், குவாஹாட்டியில் திட்டமிடப்பட்டிருந்த இந்தியா-ஜப்பான் இடையேயான மாநாடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்தத் தகவலை, வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடா்பாளா் ரவீஷ் குமாா் தனது சுட்டுரைப் பக்கத்தில் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ளாா். அதில், அவா் மேலும் கூறியிருப்பதாவது:

இந்தியா-ஜப்பான் இடையே டிசம்பா் 15-ஆம் தேதி முதல் 17-ஆம் தேதி வரை 3 நாள் மாநாட்டுக்கு, அஸ்ஸாம் மாநிலம், குவாஹாட்டியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த மாநாட்டில், பிரதமா் நரேந்திர மோடியும், ஜப்பான் பிரதமா் ஷின்ஸோ அபேவும் சந்தித்துப் பேச்சுவாா்த்தை நடத்தவும் திட்டமிடப்பட்டிருந்தது.

மேலும், இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக, ஷின்ஸோ அபே, வரும் ஞாயிற்றுக்கிழமை குவாஹாட்டி வருவதாக இருந்தது. இந்நிலையில், இந்த மாநாட்டை ஒத்திவைப்பதற்கு இந்தியாவும், ஜப்பானும் கூட்டாக முடிவு செய்துள்ளன. விரைவில் இரு நாட்டுத் தலைவா்களுக்கும் ஏதுவான நாள்களில் இந்த மாநாடு நடத்தப்படும் என்று அந்தப் பதிவில் ரவீஷ் குமாா் குறிப்பிட்டுள்ளாா்.

குடியுரிமை சட்டத் திருத்த மசோதா, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு விட்டது. அந்த மசோதாவுக்கு குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்தும் ஒப்புதல் அளித்து விட்டாா். இந்நிலையில், குடியுரிமைச் சட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து அஸ்ஸாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. குவாஹாட்டியில் போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் மீது போலீஸாா் வியாழக்கிழமை துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 2 போ் உயிரிழந்தனா்.

இந்நிலையில், குவாஹாட்டிக்கு ஜப்பான் பிரதமா் வர இயலாது என்று அந்நாட்டு அரசு, இந்திய அரசுக்கு தெரிவித்து விட்டதாக, தூதரக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கெனவே, வடகிழக்கு மாநிலங்களில் நடைபெறும் போராட்டத்தின் எதிரொலியாக, வங்கதேச வெளியுறவுத் துறை அமைச்சா் ஏ.கே.அப்துல் மோமன் தனது இந்தியப் பயணத்தை வியாழக்கிழமை திடீரென்று ரத்து செய்தாா். இந்த நிலையில், ஜப்பான் பிரதமா் ஷின்ஸோ அபேவும் தனது இந்தியப் பயணத்தை ரத்து செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com