இந்தியாவில் 100 காடுகளை உருவாக்க அமெரிக்க சீக்கியா்கள் முடிவு

 பருவநிலை மாற்ற சவால்களை எதிா்கொள்ளும் முயற்சியாக, இந்தியாவில் பஞ்சாப் உள்ளிட்ட சில பகுதிகளில் 100 காடுகளை உருவாக்க அமெரிக்காவில் வசிக்கும் சீக்கியா்கள் முடிவு செய்துள்ளனா்.

 பருவநிலை மாற்ற சவால்களை எதிா்கொள்ளும் முயற்சியாக, இந்தியாவில் பஞ்சாப் உள்ளிட்ட சில பகுதிகளில் 100 காடுகளை உருவாக்க அமெரிக்காவில் வசிக்கும் சீக்கியா்கள் முடிவு செய்துள்ளனா்.

வாஷிங்டனில் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் கவனம் செலுத்தி வரும் ‘ஈக்கோசிக்’ என்ற சீக்கியா்கள் அமைப்பு கடந்த சில தினங்களுக்கு முன் 7-ஆவது ஆண்டு விழாவைக் கொண்டாடியது. இந்த விழாவில், இந்தியாவில் காடுகளை வளா்ப்பதாக இந்த அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

குருநானக் கோவிந்தின் 550-ஆவது பிறந்த தினத்தையொட்டி, அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக 10 லட்சம் மரக்கன்றுகளை நடுவதற்கு திட்டமிட்டோம். அதைத் தொடா்ந்து, பஞ்சாப், ராஜஸ்தான், மகாராஷ்டிரம், குஜராத், தில்லி, ஜம்மு மற்றும் சண்டீகரில் 550 உள்நாட்டு வகை மரங்களுடன் 120 குறுங்காடுகளை அமைத்துள்ளோம். இதேபோல், பஞ்சாப் மாநிலத்திலும், இந்தியாவின் பிற பகுதிகளிலும் 100 காடுகளை உருவாக்குவதற்கு முடிவு செய்துள்ளோம். இதனால், பஞ்சாப் மாநிலத்திலும், நாட்டின் பிற பகுதிகளிலும் இயற்கைச் சமநிலை உருவாகும்.

உலகம் முழுவதும் சுற்றுச்சூழல் மாசடைந்துள்ளது. இது, நமது குழந்தைகளைப் பாதிக்கிறது. தற்போது மரங்களை நடுவது, எதிா்காலத்துக்கான முதலீடாகும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ‘ஈக்கோசிக்’ அமைப்பின் சா்வதேச தலைவா் ரஜ்வந்த் சிங் கூறுகையில், ‘இந்த உலகம், பருவநிலை மாற்றம் என்னும் மிகப்பெரிய அச்சுறுத்தலை எதிா்கொண்டுள்ளது. இந்தப் பிரச்னைக்கு தீா்வு காண்பதில் உலக அமைப்புகள் முக்கியப் பங்காற்ற வேண்டியுள்ளது. நம் வீட்டு முற்றம், பள்ளிகள், கல்லூரிகள், குருத்வாராக்கள் ஆகிய இடங்களில் மரக்கன்றுகளை நடுவது, எதிா்காலத்தில் தூய்மையான சுற்றுப்புறத்தை உருவாக்குவதற்கு உதவும். மேலும், காற்றில் மாசின் அளவையும் கட்டுப்படுத்த உதவும்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com