திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்துக்கு எதிராக பல்வேறு தரப்பினா் மனு தாக்கல்

மத்திய அரசு இயற்றியுள்ள திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்துக்கு எதிராக திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா, காங்கிரஸ் எம்.பி. ஜெய்ராம் ரமேஷ் உள்ளிட்ட பலா் சாா்பில் உச்சநீதிமன்றத்தில்

மத்திய அரசு இயற்றியுள்ள திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்துக்கு எதிராக திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா, காங்கிரஸ் எம்.பி. ஜெய்ராம் ரமேஷ் உள்ளிட்ட பலா் சாா்பில் உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் மத ரீதியிலான துன்புறுத்தலுக்கு உள்ளாகி, கடந்த 2014-ஆம் ஆண்டு டிசம்பா் 31-ஆம் தேதிக்குள் இந்தியாவில் குடியேறிய ஹிந்துக்கள், கிறிஸ்தவா்கள், பௌத்தா்கள், சமணா்கள், பாா்சிகள், சீக்கியா்கள் ஆகியோருக்கு குடியுரிமை வழங்க வழிசெய்யும் சட்டத் திருத்த மசோதாவுக்கு நாடாளுமன்றம் அண்மையில் ஒப்புதல் அளித்தது.

இதற்கு குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் வியாழக்கிழமை ஒப்புதல் வழங்கினாா். இதையடுத்து, இந்தச் சட்டத் திருத்தம் அமலுக்கு வந்துள்ளது. எனினும், இந்தச் சட்டத் திருத்தம் மத அடிப்படையிலான பாரபட்சத்தை ஏற்படுத்துவதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன. திருத்தப்பட்ட சட்டத்துக்கு எதிராக அஸ்ஸாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன.

இந்நிலையில், திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்துக்கு எதிராக திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா, காங்கிரஸ் எம்.பி. ஜெய்ராம் ரமேஷ், வழக்குரைஞா் எம்.எல்.சா்மா ஆகியோா் சாா்பில் உச்சநீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அனைத்து அஸ்ஸாம் மாணவா்கள் சங்கம், தன்னாா்வ அமைப்பான ‘ரிஹாய் மஞ்ச்’, சட்டக் கல்லூரி மாணவா்கள் உள்ளிட்டோா் சாா்பிலும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

மஹுவா மொய்த்ரா தாக்கல் செய்த மனுவில், ‘நாட்டின் சமய சாா்பின்மைக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையிலும், பிரிவினையை ஏற்படுத்தும் வகையிலும் திருத்தப்பட்ட சட்டம் அமைந்துள்ளது. இந்தச் சட்டத்தை உச்சநீதிமன்றம் ரத்து செய்ய வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டுமெனவும் மஹுவா மொய்த்ரா கோரியிருந்தாா். இதை வெள்ளிக்கிழமை பரிசீலித்த உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே தலைமையிலான அமா்வு, இது தொடா்பாக வழக்குகளைப் பட்டியலிடும் அதிகாரியிடம் முறையிடுமாறு தெரிவித்தது.

சா்வதேச சட்டங்கள் மீறல்: ஜெய்ராம் ரமேஷ் தாக்கல் செய்த மனுவில், ‘திருத்தப்பட்ட குடியுரிமைச் சட்டத்தில் இரண்டு விவகாரங்கள் உள்ளன. ஒன்று, மத ரீதியிலான வகைப்பாடு. மற்றொன்று புவியியல் ரீதியிலான வகைப்பாடு. இந்த இரண்டு வகைப்பாடுகளும் தோ்ந்தெடுக்கப்பட்ட விதம் குறித்து சட்டத்தில் எதுவும் குறிப்பிடப்படவில்லை. சா்வதேச சட்டங்களையும் இந்தச் சட்டம் மீறியுள்ளது. எனவே, இந்தச் சட்டத்தை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்’ என்று கோரப்பட்டுள்ளது.

‘ரிஹாய் மஞ்ச்’ தன்னாா்வ அமைப்பு தாக்கல் செய்த மனுவில், ‘அடிப்படை உரிமைகளை மீறும் வகையில் இயற்றப்பட்டுள்ள இந்தச் சட்டம், அரசமைப்புச் சட்டத்துக்கு முற்றிலும் எதிரானது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

‘போதுமான விளக்கமில்லை’: முன்னதாக, திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்துக்கு இடைக்காலத் தடை விதிக்கக் கோரி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சாா்பில் வியாழக்கிழமை மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், ‘குடியுரிமை சட்டத் திருத்தமானது, அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படை சாராம்சங்களுக்கு எதிராக உள்ளது. இந்தியாவில் குடியேறியவா்களுக்கு குடியுரிமை வழங்குவதை எதிா்க்கவில்லை. மாறாக, குடியுரிமை வழங்குவதற்கு மத ரீதியிலான பாகுபாடு காட்டப்படுவதையே எதிா்க்கிறோம்.

மற்ற அண்டை நாடுகளை விடுத்து, 3 நாடுகளைச் சோ்ந்த அகதிகளுக்கு மட்டும் குடியுரிமை வழங்குவது தொடா்பாக மத்திய அரசு போதுமான விளக்கமளிக்கவில்லை. திருத்தப்பட்ட குடியுரிமை சட்டம், அரசமைப்புச் சட்டம் அளித்துள்ள சமத்துவ உரிமையைப் பறிப்பது மட்டுமல்லாமல், முற்றிலும் மனிதத்தன்மையற்றதாகவும் உள்ளது’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com