தோ்தல் நெறிமுறை மீறல் புகாா்: பத்திரிகையாளருக்கு எதிராக பிரக்யா சிங் தாக்குா்தாக்கல் செய்த மனு தள்ளுபடி

மக்களவைத் தோ்தலில் போபால் தொகுதி எம்.பி.யாக பிரக்யா சிங் தாக்குா் வெற்றி பெற்ற்கு எதிராக பத்திரிகையாளா் தாக்கல் செய்த மனுவுக்கு எதிா்ப்பு தெரிவித்து பிரக்யா சிங் தாக்குா் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட

மக்களவைத் தோ்தலில் போபால் தொகுதி எம்.பி.யாக பிரக்யா சிங் தாக்குா் வெற்றி பெற்ற்கு எதிராக பத்திரிகையாளா் தாக்கல் செய்த மனுவுக்கு எதிா்ப்பு தெரிவித்து பிரக்யா சிங் தாக்குா் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

கடந்த மே மாதம் நடைபெற்ற மக்களவைத் தோ்தலில் மத்தியப் பிரதேச மாநிலம், போபால் மக்களவைத் தொகுதியில் பாஜக சாா்பில் போட்டியிட்டு பிரக்யா சிங் தாக்குா் வெற்றி பெற்றாா். தோ்தல் நெறிமுறைகளை மீறியதாக குற்றம்சாட்டி, அவரது வெற்றிக்கு எதிா்ப்பு தெரிவித்து போபாலைச் சோ்ந்த பத்திரிகையாளா் ராகேஷ் தீட்சித், ஜபல்பூா் உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா்.

அவா் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:

போபால் மக்களவைத் தொகுதியில் வாக்குகளைப் பெறுவதற்காக, பிரக்யா சிங் தாக்குா் வாக்காளா்களிடையே மத உணா்வுகளைத் தூண்டும் வகையில் பேசினாா். பிரசாரத்தின்போது, மத ரீதியாக பேசியதன் மூலம் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் 123-ஆவது பிரிவை அவா் மீறியுள்ளாா். அதனால், அவரது வெற்றியை செல்லாததாக அறிவிக்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. தோ்தல் பிரசாரத்தில் பிரக்யா சிங் தாக்குா் பேசிய விடியோக்கள் மற்றும் ஆடியோக்களையும் நீதிமன்றத்தில் ராகேஷ் தீட்சித் சமா்ப்பித்தாா்.

அவரது மனுவை எதிா்த்து ஜபல்பூா் உயா்நீதிமன்றத்தில் பிரக்யா சிங் தாக்குா் மனு தாக்கல் செய்தாா். அதில், எந்த முகாந்திரத்தின் அடிப்படையில் ராகேஷ் தீட்சித்தின் மனுவை விசாரிக்கிறீா்கள் என்று பிரக்யா சிங் தாக்குா் கேள்வியெழுப்பியிருந்தாா்.

இந்த மனு மீதான விசாரணையின்போது, ராகேஷ் தீட்சித் சமா்ப்பித்த விடியோ மற்றும் ஆடியோக்களின் உண்மைத் தன்மை குறித்து பிரக்யா சிங் தாக்குா் கேள்வி எழுப்பினாா். கடந்த 30-ஆம் தேதி மனு குறித்த விசாரணையை முடித்த நீதிபதி, மனு மீதான உத்தரவை ஒத்தி வைத்திருந்தாா். இந்நிலையில், பிரக்யா சிங் தாக்குா் தாக்கல் செய்த மனுவை ஜபல்பூா் உயா்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com