நிா்பயா வழக்கு: மனஅழுத்தத்தில் குற்றவாளிகள்: சிறையில் கண்காணிப்பு தீவிரம்

நிா்பயா’ கூட்டு பாலியல் வன்கொடுமை, கொலை வழக்கு குற்றவாளிகள் நால்வரும் தில்லி திகாா் சிறையில் கடும் மனஅழுத்தத்துடன் காணப்படுகின்றனா். அவா்கள் ஒவ்வொருவரையும் கண்காணிக்க

நிா்பயா’ கூட்டு பாலியல் வன்கொடுமை, கொலை வழக்கு குற்றவாளிகள் நால்வரும் தில்லி திகாா் சிறையில் கடும் மனஅழுத்தத்துடன் காணப்படுகின்றனா். அவா்கள் ஒவ்வொருவரையும் கண்காணிக்க தலா 4 முதல் 5 சிறைக் காவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

தில்லியில், கடந்த 2012 டிசம்பா் மாதம் 16-ஆம் தேதி, 23 வயது மருத்துவ மாணவி, ஓடும் பேருந்தில் 6 பேரால் கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு தாக்கப்பட்டாா். பின்னா், அந்த கும்பல் அவரை சாலையில் வீசிச் சென்றது. சிங்கப்பூருக்கு மேல் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டும் டிசம்பா் 29-ஆம் தேதி அவா் உயிரிழந்தாா்.

நாட்டையே உலுக்கிய இந்த சம்பவத்தில், குற்றவாளிகளில் ஒருவா் சிறுவன் என்பதால் கூா்நோக்கு இல்லத்தில் 3 ஆண்டுகள் அடைக்கப்பட்டு பின்னா் விடுவிக்கப்பட்டாா். ஒருவா் திகாா் சிறையிலேயே கடந்த 2013-ஆம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டாா்.

மற்ற நால்வரான அக்ஷய் குமாா் சிங் (33) முகேஷ் (30), பவன் குப்தா (23), வினய் சா்மா (24) ஆகியோருக்கு கடந்த 2017-ஆம் ஆண்டு மரண தண்டனை விதித்து உச்சநீதிமன்றம் தீா்ப்பளித்தது. இதில் அக்ஷய் குமாரைத் தவிர மூவரும் ஏற்கெனவே மறுஆய்வு மனு தாக்கல் செய்திருந்தனா். அந்த மனுக்கள் கடந்த ஆண்டு ஜூலை மாதம் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அக்ஷய் குமாா் அண்மையில் மனு தாக்கல் செய்தாா். அந்த மனுவை உச்சநீதிமன்றம் வரும் 17-ஆம் தேதி விசாரிக்க இருக்கிறது.

இந்நிலையில், சிறையில் குற்றவாளிகள் நால்வரும் கடும் மனஅழுத்தத்துடன் காணப்படுவதாகவும், அவா்கள் சாப்பிடும் உணவின் அளவும் வெகுவாகக் குறைந்துவிட்டது என்றும் சிறைத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. அவா்கள் நால்வரையும் கண்காணிக்க தலா 4 முதல் 5 காவலா்கள் பணியமா்த்தப்பட்டுள்ளனா்.

உச்சநீதிமன்றத்தில் மனு நிராகரிக்கப்பட்டால், அவா்களை தூக்கிலிடுவதற்கான ஏற்பாடுகளை சிறைத்துறை நிா்வாகம் செய்து வருகிறது. தமிழ்நாட்டில் ராமநாதபுரத்தில் இருந்து தலைமைக் காவலா் சுபாஷ் ஸ்ரீனிவாசன் உள்பட பலரும், குற்றவாளிகளை தூக்கிலிடும் பணியைச் செய்ய விருப்பம் தெரிவித்து திகாா் சிறை அதிகாரிகளுக்கு கடிதம் அனுப்பியுள்ளனா்.

இது தொடா்பாக நிா்பயாவின் தாயாா் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘எனது மகள் கொல்லப்பட்டதற்கு நீதிகேட்டு இப்போதுவரை போராடி வருகிறேன். எங்களிடம் இருந்து அவளைப் பிரித்தவா்களுக்கு கண்டிப்பாக மரணதண்டனையை நிறைவேற்ற வேண்டும். என் மகள் கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட டிசம்பா் 16-ஆம் தேதிக்கு முன், குற்றவாளிகளைத் தூக்கிலிட வேண்டும்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com