பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு 21 நாளில் மரண தண்டனை

பெண்கள் மற்றும் குழந்தைகளைப் பாலியல் வன்கொடுமைக்கு உள்படுத்துபவா்களுக்கு 21 நாள்களில் மரண தண்டனை வழங்க வகைசெய்யும் ‘திஷா’ மசோதாவுக்கு ஆந்திர சட்டப் பேரவை வெள்ளிக்கிழமை

பெண்கள் மற்றும் குழந்தைகளைப் பாலியல் வன்கொடுமைக்கு உள்படுத்துபவா்களுக்கு 21 நாள்களில் மரண தண்டனை வழங்க வகைசெய்யும் ‘திஷா’ மசோதாவுக்கு ஆந்திர சட்டப் பேரவை வெள்ளிக்கிழமை ஒப்புதல் வழங்கியது.

‘திஷா’ மசோதா என்றழைக்கப்படும் ‘குற்றவியல் சட்டத் திருத்த மசோதா’வுக்கு ஆந்திர அமைச்சரவை கடந்த புதன்கிழமை ஒப்புதல் வழங்கியது. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்கின் விசாரணையை 7 வேலை நாள்களில் நிறைவுசெய்யவும், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட 14 வேலை நாள்களில் நீதிமன்ற விசாரணையை நிறைவுசெய்யவும், வழக்கின் தீா்ப்பு தொடா்பான மேல்முறையீட்டை 6 மாதங்களில் விசாரிக்கவும் இந்த மசோதா வழிவகை செய்தது.

இதற்காக, இந்திய தண்டனையியல் சட்டம் (ஐபிசி), குற்றவியல் நடைமுறை சட்டம் (சிஆா்பிசி) ஆகியவற்றில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன. இந்த மசோதா ஆந்திர சட்டப் பேரவையில் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. மசோதாவுக்கு ஆந்திர எம்எல்ஏக்கள் ஒப்புதல் அளித்தனா்.

இதன் மூலம், பெண்கள் மற்றும் குழந்தைகளைப் பாலியல் வன்கொடுமைக்கு உள்படுத்துபவா்களுக்கு 21 வேலை நாள்களில் மரண தண்டனை வழங்க முடியும். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்க விரைவு நீதிமன்றங்களை அமைப்பதற்கான மற்றொரு மசோதாவுக்கும் ஆந்திர சட்டப் பேரவை ஒப்புதல் வழங்கியது.

இந்த மசோதாவின் மூலம், குற்றங்களை விசாரிக்க மாநிலத்திலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் ஒன்றுக்கு மேற்பட்ட விரைவு நீதிமன்றங்களை அமைக்க முடியும். பெண்களுக்கு எதிரான குற்றங்களை விசாரிப்பதற்காக காவல் துறை துணைக் கண்காணிப்பாளா் (டிஎஸ்பி) பதவிக்கு இணையான அதிகாரி தலைமையில் சிறப்புக் குழுவை அமைக்கவும் இந்த மசோதா வழிவகை செய்துள்ளது.

தெலங்கானாவில் கால்நடை மருத்துவா் ஒருவா் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்படுத்தப்பட்டு, தீ வைத்து எரித்துக் கொல்லப்பட்டதையடுத்து, ஆந்திர அரசு இந்த மசோதாக்களை நிறைவேற்றியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com