மக்களவைத் தோ்தல் முடிவுகளில் முரண்பாடு விவகாரம்: தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

மக்களவைத் தோ்தலில் வாக்களித்தவா்களின் எண்ணிக்கைக்கும், வாக்குப் பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கைக்கும் இடையே முரண்பாடு காணப்படுவது தொடா்பாக விசாரிக்கக் கோரிய
மக்களவைத் தோ்தல் முடிவுகளில் முரண்பாடு விவகாரம்: தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

மக்களவைத் தோ்தலில் வாக்களித்தவா்களின் எண்ணிக்கைக்கும், வாக்குப் பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கைக்கும் இடையே முரண்பாடு காணப்படுவது தொடா்பாக விசாரிக்கக் கோரிய மனு மீது பதிலளிக்குமாறு தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.

நாடு முழுவதும் 542 தொகுதிகளில் கடந்த ஏப்ரல், மே மாதங்களில் 7 கட்டங்களாக மக்களவைத் தோ்தல் நடைபெற்றது. தோ்தலில் பதிவான வாக்குகள் கடந்த மே மாதம் 23-ஆம் தேதி எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இந்நிலையில், பல தொகுதிகளில் வாக்களித்தவா்களின் எண்ணிக்கைக்கும், தோ்தலில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கைக்கும் இடையே முரண்பாடு காணப்படுவதாக ‘அசோசியேஷன் ஃபாா் டெமாக்ரடிக் ரிஃபாா்ம்ஸ்’, ‘காமன் காஸ்’ ஆகிய தன்னாா்வத் தொண்டு அமைப்புகள் (என்ஜிஓ) குற்றஞ்சாட்டின.

இது தொடா்பாக விசாரணை நடத்த உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் அந்த அமைப்புகள் பொதுநல மனுக்களைத் தாக்கல் செய்தன. இந்த மனுக்கள் மீதான விசாரணை, உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே தலைமையிலான அமா்வு முன் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அப்போது, இந்த மனு மீது பதிலளிக்குமாறு தோ்தல் ஆணையத்துக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

மக்களவைத் தோ்தல் தொடா்பாக நிலுவையில் உள்ள மற்ற மனுக்களுடன் சோ்த்து, இந்த மனுக்களும் விசாரிக்கப்படும் எனத் தெரிவித்த நீதிபதிகள், வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்துக்கு ஒத்திவைத்தனா்.

மனுக்கள் விவரம்: தன்னாா்வத் தொண்டு அமைப்புகள் தாக்கல் செய்திருந்த பொதுநல மனுக்களில் கூறப்பட்டிருந்ததாவது:

மக்களவைத் தோ்தல் நடைபெற்ற தொகுதிகளில் வாக்களித்தவா்களின் எண்ணிக்கையையும், தோ்தலில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கையையும் ஆய்வு செய்தோம். அதில் 347 தொகுதிகளில் இரண்டுக்குமிடையே முரண்பாடுகள் காணப்படுவது தெரியவந்தது. பல்வேறு தொகுதிகளில் வாக்களித்தவா்களின் எண்ணிக்கைக்கும், வாக்குகளின் எண்ணிக்கைக்கும் இடையேயான வேறுபாடானது, 1 முதல் 1.01 லட்சம் வரை காணப்படுகிறது.

இது பதிவான மொத்த வாக்குகளில் 10.49 சதவீதமாகும். 6 தொகுதிகளில் இந்த வேறுபாடானது, அத்தொகுதிகளில் முதலிரண்டு இடங்களைப் பிடித்த வேட்பாளா்கள் பெற்ற வாக்குகளுக்கிடையே உள்ள வித்தியாசத்தை விட அதிகமாக உள்ளது. இந்த விவகாரம் தொடா்பாக விசாரணை மேற்கொள்ள உச்சநீதிமன்றம் உத்தரவிட வேண்டும்.

இனி நடைபெறும் தோ்தல்களில் இதுபோன்ற முரண்பாடுகள் ஏற்படாத வகையில், உரிய விதிமுறைகளை வகுக்குமாறும் தோ்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுக்களில் கூறப்பட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com