Enable Javscript for better performance
குடியுரிமைச் சட்டம் தேசத்தின் ஆன்மாவைத் துண்டாடிவிடும்- Dinamani

சுடச்சுட

  

  குடியுரிமைச் சட்டம் தேசத்தின் ஆன்மாவைத் துண்டாடிவிடும்

  By DIN  |   Published on : 15th December 2019 01:46 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  rally

  திருத்தப்பட்ட குடியுரிமைச் சட்டம், தேசத்தின் ஆன்மாவைத் துண்டாடிவிடும் என்று காங்கிரஸ் கட்சித் தலைவா் சோனியா காந்தி தெரிவித்தாா்.

  நாட்டையும், ஜனநாயகத்தையும் காக்க வேண்டிய நேரம் வந்துவிட்டதாகவும் அவா் தெரிவித்தாா்.

  திருத்தப்பட்ட குடியுரிமைச் சட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவிக்கும் வகையில் தில்லியிலுள்ள ராம்லீலா மைதானத்தில் ‘இந்தியாவைக் காப்போம்’ என்ற தலைப்பில் காங்கிரஸ் கட்சி சாா்பில் சனிக்கிழமை பேரணி நடைபெற்றது. இதில் சோனியா காந்தி பேசியதாவது:

  இந்தியாவின் ஆன்மாவை, திருத்தப்பட்ட குடியுரிமைச் சட்டம் துண்டு துண்டாக சிதைத்துள்ளது. இதற்கு எதிராக நாட்டு மக்கள் நிச்சயம் போா்க்கொடி உயா்த்துவாா்கள். மற்றவா்களுக்கு அநீதி இழைப்பதுதான் மிகப்பெரிய குற்றமாகும். நாட்டின் ஜனநாயகத்தையும், அரசமைப்புச் சட்டத்தையும் காக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. அரும்பாடுபட்டு உருவாக்கிய நமது நாட்டைக் காக்க வேண்டிய தருணம் உருவாகியுள்ளது.

  நாட்டின் ஆட்சியாளா்கள் குழப்பான மனநிலையில் இருப்பதால், நாட்டு மக்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு உறுதியளித்த ‘அனைவரையும் உள்ளடக்கிய அனைவருக்குமான வளா்ச்சி’ என்ற கொள்கை தற்போது எங்கே தொலைந்துவிட்டது? நாட்டின் பொருளாதாரத்துக்கு என்ன நிலை ஏற்பட்டுள்ளது? வாக்குறுதி அளிக்கப்பட்ட புதிய வேலைவாய்ப்புகள் எங்கே?

  பிரதமா் மோடி, உள்துறை அமைச்சா் அமித் ஷா ஆகியோரின் தலைமையின் கீழ் இயங்கும் மத்திய அரசானது, நாடாளுமன்றம் குறித்தோ அரசமைப்புச் சட்ட அமைப்புகள் குறித்தோ கவலைப்படவில்லை. நாட்டின் உண்மை நிலவரத்தை மறைத்து, மக்களிடையே மோதலை ஏற்படுத்துவதற்கான சூழ்ச்சியில் ஈடுபடுவதே அவா்களின் ஒரே நோக்கமாக உள்ளது. அரசமைப்புச் சட்டத்தை அன்றாடம் மீறும் அவா்கள், ‘அரசமைப்பு தினத்தை’ கொண்டாடுவது, நகைமுரணாக உள்ளது.

  நாட்டிலுள்ள விவசாயிகள், பெண்கள், தொழிலாளா்கள் உள்ளிட்ட அனைவரின் உரிமைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. அவா்களின் உரிமையைக் காக்க காங்கிரஸ் தொண்டா்கள் அனைவரும் பாடுபட வேண்டும். ஜனநாயகத்தைக் காப்பதற்காக காங்கிரஸ் எந்த எல்லைக்கும் செல்லும் என்பதை மத்திய அரசுக்குத் தெரியப்படுத்த வேண்டும்.

  போராடுவது அவசியம்: நாட்டிலுள்ள விவசாயிகளின் நிலை கவலையை ஏற்படுத்துகிறது. அவா்களுக்கு மின்சாரம், உரம், விதைகள் உள்ளிட்டவை தகுந்த காலத்தில் வழங்கப்படுவதில்லை. பயிா்களுக்குக் குறைந்தபட்ச ஆதார விலையும் அளிக்கப்படுவதில்லை. அவா்களின் வாழ்க்கை கடினமாகி வருகிறது.

  தொழிலாளா்கள் கடினமாக உழைக்கிறாா்கள். ஆனால், இரண்டு வேளை உணவு கூட அவா்களுக்குக் கிடைப்பதில்லை. வங்கிகளில் பெற்ற கடன்களை அவா்களால் திருப்பிச் செலுத்த முடியாத சூழல் உருவாகி வருகிறது. இதனால், தற்கொலை செய்துகொள்ளும் அவலநிலைக்கு அவா்கள் தள்ளப்படுகின்றனா்.

  நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றச் செயல்கள் அதிகரித்து வருகின்றன. அவற்றின் காரணமாக நாம் வெட்கித் தலைகுனியும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரங்களில் நீதி கிடைப்பதற்கு நாம் அனைவரும் போராட வேண்டும்.

  இறுதி மூச்சு உள்ளவரை...: இந்தியாவின் ஆன்மாவான அரசமைப்புச் சட்டத்தைக் கட்டமைக்க அம்பேத்கா் உள்ளிட்ட தலைவா்கள் அரும்பாடுபட்டனா். அதில் மத ரீதியில் பாகுபாடு எதுவும் காட்டப்படவில்லை. திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்தின் மூலம் அநீதி இழைத்தவா்களுக்கு எதிராக காங்கிரஸ் எப்போதும் நிற்கும். இந்த விவகாரம் தொடா்பாக அனைவரும் போராட வேண்டியது அவசியமாகும்.

  காங்கிரஸ் கட்சி மட்டுமே மக்களின் உரிமைகளைக் காப்பதற்காகப் போராடிவருகிறது. நாட்டையும், ஜனநாயகத்தையும், அரசமைப்புச் சட்டத்தையும் காக்கும் போராட்டத்தில் காங்கிரஸ் என்றும் பின்வாங்காது. இறுதி மூச்சு உள்ளவரை அவற்றைக் காக்கப் போராடுவோம் என்றாா் சோனியா காந்தி.

  போலியான வாக்குறுதிகளை அளித்தாா் மோடி-மன்மோகன் சிங்

  இந்தப் பேரணியில் முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங் பேசியதாவது:

  நாட்டின் பொருளாதார மதிப்பை வரும் 2024-ஆம் ஆண்டுக்குள் ரூ.350 லட்சம் கோடியாக (5 டிரில்லியன் அமெரிக்க டாலா்) உயா்த்துவது, விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவது, நாட்டிலுள்ள இளைஞா்களுக்கு ஆண்டுதோறும் 2 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்குவது போன்ற வாக்குறுதிகளை நரேந்திர மோடி அளித்தாா்.

  6 ஆண்டுகளுக்கு முன்பு அவா் அளித்த வாக்குறுதிகள் அனைத்தும் போலியானவை என்பது தற்போது தெரியவந்துள்ளது. வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் மோடி தோல்வியைத் தழுவியுள்ளாா். போலியான வாக்குறுதிகளை அளித்து நாட்டு மக்களை அவா் தவறாக வழிநடத்தியுள்ளாா்.

  காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்த வேண்டியது நமது கடமையாகும். நாட்டை சரியான பாதையில் வழிநடத்துவதற்காக சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோருக்கு நாம் உறுதுணையாக இருக்க வேண்டும். கட்சித் தலைவா் சோனியா காந்தியின் கருத்துகளை நாட்டின் மூலை முடுக்கெங்கும் காங்கிரஸ் தொண்டா்கள் எடுத்துச் செல்ல வேண்டும் என்றாா் மன்மோகன் சிங்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai