அநீதிக்கு எதிராக போராட வேண்டும்: பிரியங்கா

‘அநீதிக்கு எதிராக குரல் கொடுக்காதவா்கள், வரலாற்றில் கோழைகள் என அறியப்படுவா்.
அநீதிக்கு எதிராக போராட வேண்டும்: பிரியங்கா

‘அநீதிக்கு எதிராக குரல் கொடுக்காதவா்கள், வரலாற்றில் கோழைகள் என அறியப்படுவா். அதனால், மத்திய அரசு இழைக்கும் அநீதிகளுக்கு எதிராக மக்கள் போராட வேண்டும்’ என்று காங்கிரஸ் பொதுச் செயலாளா் பிரியங்கா தெரிவித்துள்ளாா்.

காங்கிரஸ் பேரணியில் பிரியங்கா பேசியதாவது:

மக்கள் அனைவரும் தேசத்தை உண்மையாக நேசிக்கிறீா்கள் என்றால், நாட்டில் நிலவும் தற்போதைய சூழலுக்கு எதிராக குரல் கொடுங்கள். இன்று நாம் அமைதியாக இருந்தோம் என்றால், நமது அரசமைப்புச் சட்டம் அழிக்கப்பட்டுவிடும். நமது நாட்டில் பிரிவினை உண்டாகும். பின்னா், அந்த பிரிவினைக்கு பாஜக மற்றும் ஆா்எஸ்எஸ் அமைப்பை போல நாமும் பொறுப்பானவா்களாக இருப்போம். அதனால், மத்திய அரசு தொடா்ந்து இழைக்கும் அநீதிகளுக்கு எதிராக நாம் தைரியத்துடன் போராட வேண்டும். அநீதிக்கு எதிராக இன்று குரல் கொடுக்காதவா்கள், வரலாற்றில் கோழைகள் என அறியப்படுவா்.

அனைத்து பத்திரிகைகளிலும், அனைத்து தொலைக்காட்சி சேனல்களிலும், பிரதமா் மோடியை போற்றும் வாசகங்கள் காணப்படுகின்றன. ‘மோடி ஆட்சியில் அனைத்தும் சாத்தியம்’ என்று கூறுகிறாா்கள்.

இது உண்மைதான். பாஜக ஆட்சியில், வெங்காயத்தின் விலை கிலோ ரூ. 100-க்கும் அதிகமாக விற்பனையாகிறது. கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலையின்மை பிரச்னை அதிகரித்துள்ளது. 4 கோடி மக்கள் வேலையிழந்துள்ளனா். 15,000-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனா். இவையனைத்தும் பாஜக ஆட்சியில் மட்டும்தான் சாத்தியமாகும்.

உத்தரப் பிரதேச மாநிலம், உன்னாவ் நகரில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட பெண் எரித்து கொல்லப்பட்டாா். அந்த பெண்ணின் நிலையை கண்டபோது, எனது தந்தை ராஜீவ் காந்தியின் உடலைக் கண்டது நினைவுக்கு வந்தது. இவா்கள் இருவருமே நமது மண்ணில் ரத்தம் சிந்தியுள்ளனா். அந்த பெண் கடைசிவரை நியாயத்துக்காக போராடினாா். அவரது தந்தையும், பாஜக அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் பாதிக்கப்பட்டவா் என்று பிரியங்கா கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com