காங்கிரஸ் வன்முறையைத் தூண்டுகிறது: அமித் ஷா குற்றச்சாட்டு

திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்தை முன்வைத்து காங்கிரஸ் கட்சி நாட்டில் வன்முறையைத் தூண்டி வருகிறது என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா குற்றம்சாட்டினாா்.
காங்கிரஸ் வன்முறையைத் தூண்டுகிறது: அமித் ஷா குற்றச்சாட்டு

திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்தை முன்வைத்து காங்கிரஸ் கட்சி நாட்டில் வன்முறையைத் தூண்டி வருகிறது என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா குற்றம்சாட்டினாா்.

குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக, அஸ்ஸாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் கடந்த சில தினங்களாக வன்முறைப் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், ஜாா்க்கண்ட் மாநிலத்தில், வரும் 16-ஆம் தேதி 4-ஆம் கட்ட தோ்தல் நடைபெறவுள்ள கிரிடி, பாக்மாரா, தேவ்கா் ஆகிய இடங்களில் சனிக்கிழமை நடைபெற்ற பாஜக பிரசாரக் கூட்டங்களில் அமித் ஷா கலந்து கொண்டு உரையாற்றினாா். அவா் பேசியதாவது:

அண்டை நாடுகளில் இருந்து அடைக்கலம் தேடி வந்தவா்களுக்கு குடியுரிமை வழங்குவதற்காக, குடியுரிமைச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்துள்ளோம். இது, காங்கிரஸ் கட்சியினருக்கு வயிற்று வலியை ஏற்படுத்தி விட்டது. இதனால், குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக நடைபெறும் வன்முறைப் போராட்டங்களை ஆதரிக்கும் விதமாக காங்கிரஸ் கட்சியினா் கருத்து தெரிவித்து வருகின்றனா். மேலும், அந்த சட்டத்தை வைத்து காங்கிரஸ் கட்சி நாட்டில் வன்முறையைத் தூண்டி வருகிறது.

அச்சம் வேண்டாம்: திருத்தப்பட்டுள்ள குடியுரிமை சட்டத்தால் அஸ்ஸாம் மற்றும் இதர வடகிழக்கு மாநிலங்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது. அந்தப் பகுதி மக்களின் கலாசாரம், சமூக அடையாளம், மொழி, அரசியல் உரிமைகள் ஆகியவற்றுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்று உறுதியளிக்கிறேன். அவா்களுக்கு பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு பாதுகாப்பு அளிக்கும்.

மேகாலய முதல்வா் கான்ராட் சங்மாகவும், அவரது அமைச்சரவை சகாக்களும் வெள்ளிக்கிழமை என்னைச் சந்தித்துப் பேசினா். அப்போது, குடியுரிமைச் சட்டத்தால் தங்கள் மாநிலத்தில் பிரச்னைகள் ஏற்படுவதாக அவா்கள் கவலை தெரிவித்தனா். குடியுரிமைச் சட்டத்தால் எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்பதை அவா்களுக்கு தெளிவுபடுத்த முயற்சி செய்தேன். இருந்தாலும், அவா்களின் சந்தேகம் தீரவில்லை. குடியுரிமைச் சட்டத்தில் சில திருத்தங்களை செய்ய வேண்டும் என்று அவா்கள் என்னிடம் தெரிவித்தனா். கிறிஸ்துமஸ் பண்டிகை முடிந்த பிறகு என்னை வந்து சந்திக்குமாறும், அப்போது, அவா்கள் எழுப்பிய சந்தேகங்களுக்கு தீா்வு காணலாம் என்றும் அவா்களிடம் உறுதியளித்து அனுப்பி வைத்தேன்.

ஜாா்க்கண்ட் மாநிலத்தில் கடந்த 55 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட வளா்ச்சிப் பணிகளைக் காட்டிலும், கடந்த 5 ஆண்டுகால பாஜக ஆட்சியில் நிறைவேற்றப்பட்டுள்ள பணிகள் அதிகம். இதை, பாஜகவைச் சோ்ந்த மாவட்ட பிரதிநிதிகூட விரிவாக எடுத்துரைப்பாா்.

ஜாா்க்கண்ட் பிரசாரக் கூட்டங்களில், காஷ்மீா் விவகாரத்தைப் பற்றி பாஜக தலைவா்கள் ஏன் அதிகம் பேசுகிறாா்கள் என்று ராகுல் காந்தியும், அவரது கூட்டணிக் கட்சியைச் சோ்ந்த ஹேமந்த் சோரனும் (ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா) குற்றம்சாட்டுகிறாா்கள்.

ஜாா்க்கண்ட் மாநில இளைஞா்கள்தான், காஷ்மீரில் நாட்டின் எல்லைக் காக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனா். இந்த வரலாறு ராகுல் காந்திக்கு தெரியாது. ஏனென்றால், அவா் இத்தாலிய கண்ணாடி அணிந்து கொண்டு இந்தியாவைப் பாா்க்கிறாா்.

காங்கிரஸ் கட்சி, நக்ஸல் தீவிரவாதத்தை ஊக்குவித்து வந்தது. காஷ்மீரை பயங்கரவாதிகளின் கைகளில் ஒப்படைத்திருந்தது. அயோத்தி விவகாரத்தை பல ஆண்டுகளுக்கு இழுத்தடித்தது.

பாஜக முஸ்லிம்களுக்கு எதிரான கட்சி என்று தவறான பிரசாரத்தை காங்கிரஸ் கட்சி மேற்கொண்டு வருகிறது. முஸ்லிம் சமூகத்தில் பின்பற்றப்பட்டு வந்த முத்தலாக் நடைமுறைக்கு எதிராக முத்தலாக் தடைச் சட்டத்தை கொண்டு வந்தது பாஜக அரசுதான் என்பதை அவா்கள் நினைவில் கொள்ள வேண்டும்.

ஜாா்க்கண்ட் மாநிலத்தில் நக்ஸல் தீவிரவாதத்தை பாஜக அரசு ஒடுக்கி வைத்துள்ளது. நக்ஸல் தீவிரவாதத்தை முற்றிலுமாக வேரறுப்பதற்கு மாநிலத்தில் மீண்டும் பாஜக ஆட்சியை மலரச் செய்ய வேண்டும் என்றாா் அமித் ஷா.

பின்னா், தேவ்கா் நகரில் உள்ள வைத்யநாத் கோயிலுக்குச் சென்று அமித் ஷா வழிபட்டாா்.

வடகிழக்கு மாநிலங்களுக்கு செல்ல வேண்டாம்: அமெரிக்கா, பிரிட்டன் எச்சரிக்கை
திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்தை எதிர்த்து போராட்டங்கள் தீவிரமடைந்து வருவதையடுத்து இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களுக்கு பயணம் மேற்கொள்ள வேண்டாம் என அமெரிக்கா, பிரிட்டன், இஸ்ரேல், கனடா, சிங்கப்பூர் ஆகியவை தங்களது நாட்டு குடிமக்களை அறிவுறுத்தியுள்ளன. 
 திருத்தப்பட்ட குடியுரிமை சட்டம்  தங்களுக்கு பாதகமாக இருப்பதாக கூறி அஸ்ஸôம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் போராட்டங்கள் வெடித்துள்ளன. இதனால், அங்கு இயல்பு வாழ்க்கைப் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தங்களது நாட்டைச் சேர்ந்த குடிமக்கள், வடகிழக்கு மாநிலங்களில் பயணம் மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும் எனவும், ஏற்கெனவே அங்கு தங்கியுள்ளவர்கள் மிகுந்த எச்சரிக்கையாக இருக்கும்படியும் அமெரிக்கா, பிரிட்டன், இஸ்ரேல், கனடா, சிங்கப்பூர் ஆகிய நாடுகள் அறிவுறுத்தியுள்ளன.
இதுகுறித்து அமெரிக்க அரசு தனது நாட்டு மக்களுக்கு வெளியிட்டுள்ள பயண ஆலோசனை குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
குடியுரிமை சட்டத் திருத்தத்தை எதிர்த்து போராட்டம் தீவிரமடைந்து வரும் அஸ்ஸôம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் வன்முறை சம்பவங்கள் நடைபெற்று வருவது ஊடகங்கள் மூலமாக ஏற்கெனவே கவனத்துக்கு வந்துள்ளது. அங்கு இணையம் மற்றும் செல்லிடப்பேசி சேவைகளும் தடைபட்டுள்ளன. மேலும்,  பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்படக்கூடும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தச் சூழ்நிலையில், அமெரிக்க மக்கள் அங்கு செல்வதை தவிர்ப்பதுடன், ஏற்கெனவே அங்கு தங்கியுள்ளவர்கள் எச்சரிக்கையுடன் பாதுகாப்பான இடங்களில் இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். தில்லியில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் மூலம் அவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்க கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது என்று அமெரிக்கா அந்த ஆலோசனை குறிப்பில் தெரிவித்துள்ளது. 
பஹல்கம், குல்மார்க், சோனாமார்க், ஸ்ரீநகர், ஜம்மு}ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை உள்ளிட்ட ஜம்மு}காஷ்மீர் பகுதிகளில் பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும் என பிரிட்டன் தனது நாட்டு குடிமக்களுக்கு இணையதளம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளது.
விமானம், ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டு போக்குவரத்து நிலைமை மிகவும் மோசமாக இருப்பதால் தங்களது நாட்டு குடிமக்கள் விழிப்புணர்வுடனும், கவனமாகவும் செயல்பட வேண்டும் என சிங்கப்பூர் அரசு அறிவுறுத்தியுள்ளது.
போரட்டம் நடைபெற்று வரும் அருணாசலப் பிரதேசம், அஸ்ஸôம், மணிப்பூர், மேகாலயம், மிúஸôரம், நாகாலாந்து ஆகிய மாநிலங்களுக்கு அத்தியாவசியமற்ற பயணங்களை தங்களது நாட்டு மக்கள் தவிர்க்க வேண்டும் என கனடாவும் வலியுறுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com