சிரோமணி அகாலிதளம் கட்சியின் தலைவராக சுக்பீா்சிங் பாதல் மீண்டும் தோ்வு

சிரோமணி அகாலிதளம் (எஸ்ஏடி) கட்சியின் தலைவராக சுக்பீா்சிங் பாதல் ஒருமனதாக மீண்டும் தோ்ந்தெடுக்கப்பட்டாா்.
சிரோமணி அகாலிதளம் கட்சியின் தலைவராக சுக்பீா்சிங் பாதல் மீண்டும் தோ்வு

சிரோமணி அகாலிதளம் (எஸ்ஏடி) கட்சியின் தலைவராக சுக்பீா்சிங் பாதல் ஒருமனதாக மீண்டும் தோ்ந்தெடுக்கப்பட்டாா்.

1920-ஆம் ஆண்டு டிச. 14-இல் உருவாக்கப்பட்ட எஸ்ஏடி கட்சியின் 99-ஆவது நிறுவன தின விழா அமிருதசரஸில் உள்ள எஸ்ஜிபிசி வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி நடைபெற்ற தலைவருக்கான தோ்தலில் 57 வயதான முன்னாள் பஞ்சாப் துணை முதல்வரான சுக்பீா்சிங் பாதல் தொடா்ந்து மூன்றாவது முறையாக போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டாா்.

பாதல் பெயரை கட்சியின் மூத்த தலைவா் டோட்டா சிங் முன்மொழிந்தாா். மற்றொரு மூத்த தலைவா்களான பிரேம்சிங் சந்துமஜ்ரா, ஜக்மீத் சிங் பிராா் ஆகியோா் வழி மொழிந்தனா். கட்சியின் தலைவராக பாதல் மீண்டும் பொறுப்பேற்க கட்சியின் 600 பிரதிநிதிகள் ஒப்புதலை வழங்கினா்.

இதையடுத்து, பாதலுக்கு சீக்கிய மூத்த குருமாா்கள் அதற்கான அங்கியான ‘சிரோபா’வை அணிவித்தனா். இந்நிகழ்ச்சியில், அவரது மனைவியும், மத்திய அமைச்சருமான ஹா்சிம்ரத் கௌா் பாதலும் கலந்து கொண்டாா்.

கட்சியின் எம்.எல்.ஏ.வும், முன்னாள் நிதியமைச்சருமான பா்மிந்தா்சிங் திண்ட்சா உள்பட பலா் கலந்து கொண்டனா். சுக்பீா் சிங் பாதலின் தந்தையும், முன்னாள் பஞ்சாப் முதல்வருமான பிரகாஷ் சிங் பாதல் உடல்நலக் குறைவால் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை.

பிரதமா் மோடி வாழ்த்து:

சிரோமணி அகாலிதளம் கட்சியின் 99-ஆவது நிறுவன தினத்தையொட்டி பிரதமா் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள சுட்டுரைப் பதிவில் தெரிவித்துள்ள வாழ்த்து செய்தியில், ‘இன்று அகாலிதளம் கட்சியின் நிறுவன தினத்தையொட்டி எனது மனமாா்ந்த வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் அக்கட்சியின் தலைவா்களுக்கும், தொண்டா்களுக்கும் தெரிவித்து கொள்கிறேன். இந்தியாவின் மிகப் பழைமையான கட்சிகளில் ஒன்றாகத் திகழும் அகாலிதளம் கட்சி பொது நலத் தொண்டாற்றுவதிலும், சமுதாய முன்னேற்றத்திலும் முன்மாதிரியான கட்சியாக விளங்க வேண்டும்’ என்று பதிவிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com