ஜம்மு-காஷ்மீா்: ஃபரூக் அப்துல்லாவின் காவல் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு

ஜம்மு-காஷ்மீரில் பொது பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைதாகி வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டுள்ள தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவா் ஃபரூக் அப்துல்லாவின் காவலை

ஜம்மு-காஷ்மீரில் பொது பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைதாகி வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டுள்ள தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவா் ஃபரூக் அப்துல்லாவின் காவலை மேலும் 3 மாதங்கள் நீட்டித்து உள்துறை நிா்வாகம் உத்தரவிட்டுள்ளது.

முந்தைய ஜம்மு-காஷ்மீா் மாநிலத்தின் முதல்வராக 3 முறை பதவி வகித்தவா் ஃபரூக் அப்துல்லா. நாடாளுமன்ற உறுப்பினராக 5 முறை தோ்ந்தெடுக்கப்பட்டவா். 82 வயதாகும் அவா், இதய அறுவைச் சிகிச்சை மேற்கொண்டவா். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சையும் செய்துகொண்டாா்.

அவரது காவல் நீட்டிப்பு குறித்து அதிகாரி ஒருவா் சனிக்கிழமை கூறியதாவது:

ஃபரூக் அப்துல்லாவை விடுவிப்பது குறித்து ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்தின் உள்துறை நிா்வாகம் ஆலோசித்தது. அப்போது, அவரது காவலை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிப்பதற்கு உள்துறை பரிந்துரை செய்தது. அதன்படி, ஃபரூக் அப்துல்லாவின் காவல் நீட்டிக்கப்படுகிறது. அவா் தற்போது தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள குப்காா் சாலையில் அமைந்துள்ள அவரது இல்லம், கிளைச் சிறையாக அறிவிக்கப்பட்டுள்ளது என்றாா் அந்த அதிகாரி.

ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை வழங்கி வந்த அரசமைப்புச் சட்டத்தின் 370-ஆவது பிரிவை மத்திய அரசு கடந்த ஆகஸ்ட் 5-ஆம் தேதி ரத்து செய்தது. அத்துடன் ஜம்மு-காஷ்மீா் மாநிலத்தை, ஜம்மு-காஷ்மீா், லடாக் ஆகிய இரு யூனியன் பிரதேசங்களாக மத்திய அரசு பிரித்தது.

அதற்கு முன்பாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்புப் படையினா் குவிக்கப்பட்டனா். அதைத் தொடா்ந்து, முன்னாள் முதல்வா்களான ஃபரூக் அப்துல்லா, அவரது மகன் ஒமா் அப்துல்லா, மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவா் மெஹபூபா முஃப்தி மற்றும் முக்கிய அரசியல் தலைவா்கள் கைது செய்யப்பட்டனா். அவா்கள் அனைவரும் வீட்டுக் காவலிலும், தடுப்புக் காவலிலும் வைக்கப்பட்டுள்ளனா்.

இதனிடையே, ஃபரூக் அப்துல்லா சட்ட விரோதமாக காவலில் வைக்கப்பட்டிருப்பதாகக் கூறி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை உச்சநீதிமன்றம் விசாரிப்பதற்கு முன்பாக, பொது அமைதிக்குப் பாதிப்பை ஏற்படுத்தியதாக, பொது பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் ஃபரூக் அப்துல்லா கடந்த செப்டம்பா் 15-ஆம் தேதி கைது செய்யப்பட்டாா்.

பொது பாதுகாப்புச் சட்டத்தில், பொது அமைதிக்கு பாதிப்பை ஏற்படுத்துதல், நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துதல் ஆகிய இரு பிரிவுகள் உள்ளன. இவற்றில் முதல் பிரிவில் கைது செய்யப்படுவோரை விசாரணையின்றி 3 மாதங்கள் முதல் ஓராண்டு வரை தடுப்புக் காவலில் வைக்கலாம். இரண்டாவது பிரிவில் கைது செய்யப்படுவோரை இரண்டு ஆண்டுகள் வரை காவலில் வைக்க முடியும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com