நாட்டின் தற்போதைய சூழ்நிலைக்கு பாஜக - ஆர்.எஸ்.எஸ் தான் காரணம்: கேரள முதல்வர் குற்றச்சாட்டு

குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக கேரளாவில் நடைபெறும் வரும் போராட்டத்தில் பேசிய முதல்வர் பினராயி விஜயன், நாட்டின் தற்போதைய சூழ்நிலைக்கு பாஜக - ஆர்எஸ்எஸ் தான் காரணம் என்று குற்றஞ்சாட்டியுள்ளார்.
நாட்டின் தற்போதைய சூழ்நிலைக்கு பாஜக - ஆர்.எஸ்.எஸ் தான் காரணம்: கேரள முதல்வர் குற்றச்சாட்டு

குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக கேரளாவில் நடைபெறும் வரும் போராட்டத்தில் பேசிய முதல்வர் பினராயி விஜயன், நாட்டின் தற்போதைய சூழ்நிலைக்கு பாஜக - ஆர்.எஸ்.எஸ் தான் காரணம் என்று குற்றஞ்சாட்டியுள்ளார்.

எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் குடியுரிமை சட்ட திருத்த மசோதா நாடளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து பல்வேறு கட்சிகள் சார்பிலும், மாணவ இயக்கங்கள் சார்பிலும் நாடு முழுவதும் பல இடங்களில் குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக போராட்டம் நடைபெற்று வருகிறது. 

நேற்று தில்லியில் ஜாமியா மிலியா இஸ்லாமிய பல்கலைக்கழக மாணவா்கள் நடத்திய போராட்டம் வன்முறையாக வெடித்தது. ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் போலீஸாரால் தாக்கப்பட்டதை கண்டித்து இன்று லக்னோ, மும்பை, ஹைதராபாத் உள்ளிட்ட பகுதிகளிலும் மாணவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். அதேபோன்று, தமிழகத்திலும் சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட நகரங்களில் பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

தொடர்ந்து, குடியுரிமை சட்ட திருத்தத்தை எதிர்த்து கேரளாவில் முதல்வர் பினராயி விஜயன் போராட்டம் நடத்தி வருகிறார். இந்த போராட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலாவும் கலந்துகொண்டுள்ளார். முதல்வர் பினராயி விஜயனும், எதிர்க்கட்சி தலைவரும் ஒரே மேடையில் அருகருகே அமர்ந்துள்ளனர். 

பல்வேறு மத ரீதியான அமைப்புகள், சமூக நல அமைப்புகள், மாணவர்கள், பொதுமக்கள் என பலரும் இந்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். 

நிகழ்ச்சியில் பேசிய பினராயி விஜயன், 'பாஜக - ஆர்எஸ்எஸ் தங்கள் கொள்கைகளை நாடு முழுவதும் செயல்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளன. குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக கேரளாவில் அனைவரும் ஒன்றாக இணைந்துள்ளோம். தற்போதைய சூழ்நிலைக்கு பாஜக - ஆர்எஸ்எஸ் தான் காரணம். நாட்டின் நிலைமை நிலையற்றதாக மாறியுள்ளது. நாட்டின் பல்வேறு சிக்கல்களில் இருந்து கவனத்தை திசை திருப்பும் முயற்சி நடக்கிறது.

இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு. பல்வேறு மதங்களைச் சேர்ந்தவர்கள் இணைந்து வாழக்கூடிய இடமாகும். சமீபத்தில் குடியுரிமை திருத்த மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா நிறைவேற்றப்பட்டதற்கு நாடு முழுவதும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.

இந்த மசோதாவுக்கு எதிராக கேரளா ஒன்றுபட்டுள்ளது. இந்த கூட்டம் நமது ஒற்றுமையின் அடையாளம் ஆகும். குடியுரிமை சட்ட திருத்த மசோதா அரசியலமைப்பிற்கு விரோதமானது. மத அடிப்படையில் இந்தியாவைப் பிரிக்க மத்திய அரசு முயற்சிக்கிறது. இது சமத்துவத்தையும் மதச்சார்பின்மையையும் நாசப்படுத்தும் நடவடிக்கையாகும்' என்று பேசியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com