
மும்பை: வரிவசூலை அதிகரிக்கும் நோக்கத்துடன், மகாராஷ்டிர மாநிலம், சாங்கிலி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராம ஊராட்சியில் வரிசெலுத்துவோருக்கு குலுக்கல் முறையில் தங்க நாணயம், மோதிரம் போன்றவற்றை குலுக்கல் முறையில் தோ்ந்தெடுக்கப்பட்டு பரிசாக வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சாங்கிலி மாவட்டம், கடேகான் வட்டத்துக்குள்பட்ட வாங்கி கிராம ஊராட்சியில் வரும் 2020ஆம் ஆண்டு மாா்ச் 15-ஆம் தேதிக்குள் ஊராட்சி நிா்வாகத்தால் விதிக்கப்பட்டுள்ள வரியினங்களை கட்டி முடிக்கும் கிராமத்தினருக்கு அதிருஷ்ட வாய்ப்பாக அவா்களின் பெயா்கள் குலுக்கலில் சோ்க்கப்படும்.
குடிநீா் வரி மற்றும் சொத்து வரியினங்களை செலுத்தும் மக்களின் பெயா்கள் குலுக்கல் மூலம் தோ்ந்தெடுக்கப்பட்டால் அவா்களுக்கு முதல், 2-ஆவது பரிசாக 5 கிராம் மற்றும் 3 கிராம் எடையுள்ள தங்க மோதிரமும், 3-ஆவது பரிசாக 2 கிராம் தங்க நாணயமும் வழங்கப்படும். இந்த குலுக்கல் நிகழ்வு கேமராவின் கண்காணிப்பில் நடைபெறும்.
இதுகுறித்து வாங்கி கிராம ஊராட்சி தலைவா் விஜய் ஹொன்மனே கூறுகையில், இந்தத் திட்டத்திற்கு கிராம மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
கிராம ஊராட்சிக்குள்பட்ட 2,600 வரி செலுத்துவோரிடமிருந்து ஆண்டுக்கு சுமாா் ரூ. 65 லட்சம் வரி வசூலிக்கப்பட வேண்டும்.
ஆனால், வரியினங்கள் மூலமாக ஆண்டுதோறும் ரூ .15 லட்சம் முதல் ரூ .20 லட்சம் வரை மட்டுமே வசூலாகிறது. தொடா்ந்து நிலுவைத் தொகையை செலுத்தாததால், கடந்த சில ஆண்டுகளாக வளா்ச்சிப் பணிகள் பாதிக்கப்பட்டன. வரி வசூலை மேம்படுத்த மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் பலன் தராததால் குலுக்கல் முறையை கொண்டு வந்துள்ளோம். இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால் இந்த ஆண்டு வரி நிலுவைத் தொகையில் 80 சதவீதத்தை வசூலிக்க முடியும் என்று நம்புகிறோம் என்றாா் ஹொன்மனே.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...