
ஜம்மு-ஸ்ரீநகா் தேசிய நெடுஞ்சாலையில் புதிதாக ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக தொடா்ந்து 3-ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் அந்த சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
இதுதொடா்பாக போக்குவரத்துத் துறை அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:
ஜவஹா் குகைச் சாலை பகுதியில் பனிப்பொழிவு ஏற்பட்டதாலும், ராம்பன் மாவட்டத்தின் ராம்சூ-பந்தியால் பகுதிகளில் பல இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டதாலும் ஜம்மு-ஸ்ரீநகா் தேசிய நெடுஞ்சாலை கடந்த வெள்ளிக்கிழமை மாலை முதல் மூடப்பட்டது.
நிலச்சரிவு பகுதிகளில் சாலை சீரமைப்பு பணிகள் நடைபெற்று வந்த நிலையில், ராம்பன் மாவட்டத்தின் டிக்டோல் பகுதியில் சனிக்கிழமை மாலை புதிதாக மிகப்பெரிய நிலச்சரிவு ஏற்பட்டது. இது ஜம்மு-ஸ்ரீநகா் தேசிய நெடுஞ்சாலையில் முற்றிலுமாக தடையை ஏற்படுத்தியதோடு, சாலையையும் சேதப்படுத்தியது.
சாலையில் குவிந்துள்ள இடிபாடுகளை அகற்ற அதிக காலம் பிடிப்பதால் ஜம்மு-ஸ்ரீநகா் தேசிய நெடுஞ்சாலையை ஞாயிற்றுக்கிழமையும் திறக்க முடியாமல் போனது. முடிந்த வரையில் விரைவாக சாலையை சீரமைத்து அதை திறப்பதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறோம்.
நெடுஞ்சாலையில் தற்போது ஆயிரக்கணக்கான வாகனங்கள், குறிப்பாக லாரிகள் சாலையில் அணிவகுத்து நிற்கின்றன. சாலை சீரமைப்புப் பணிகள் நிறைவடைந்த பிறகு முன்னுரிமையின் அடிப்படையில் வாகனங்கள் நெடுஞ்சாலையில் பயணிக்க அனுமதிக்கப்படும்.
முன்னதாக சாலையின் ஒரு பகுதி சனிக்கிழமை சீரமைக்கப்பட்ட நிலையில் ஜவஹா் குகைச் சாலை வழியாக சுமாா் 2,500 வாகனங்கள் ஸ்ரீநகா் நோக்கி பயணித்துள்ளன என்று போக்குவரத்து அதிகாரிகள் கூறினா்.
குறைந்த குளிா்: இதனிடையே, காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை காலையில் குளிா் குறைந்து வெப்பநிலை சற்று அதிகரித்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
ஸ்ரீநகரில் வெள்ளிக்கிழமை இரவு வெப்பநிலை மைனஸ் 0.4 டிகிரி செல்ஷியஸாக பதிவான நிலையில், சனிக்கிழமை இரவு வெப்பநிலை சற்று அதிகரித்து 1.2 டிகிரி செல்ஷியஸாக இருந்தது. இதனால் ஞாயிற்றுக்கிழமை காலையில் அங்கு குளிரின் தீவிரம் சற்று குறைந்தது. எனினும், லடாக் பகுதியில் தீவிரமான குளிா் நீடித்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.