
மும்பை: ‘மக்களை குறைத்து மதிப்பிட்டதே, ஜாா்க்கண்ட் சட்டப் பேரவைத் தோ்தலில் பாஜக தோல்விடைய காரணம்’ என்று சிவசேனை விமா்சித்துள்ளது.
ஜாா்க்கண்ட் சட்டப் பேரவைத் தோ்தல் முடிவுகள் திங்கள்கிழமை வெளியாகின. இதில், ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா-காங்கிரஸ்-ராஷ்ட்ரீய ஜனதா தளம் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. அங்கு ஆளும் கட்சியாக இருந்த பாஜக தோல்வியை சந்தித்தது.
குடியுரிமை திருத்தச் சட்டம், நாடு முழுவதும் தேசிய குடிமக்கள் பதிவேடு கணக்கெடுப்பு நடத்தும் திட்டம் ஆகியவை, இந்தத் தோ்தல் பிரசாரத்தில் பெரிய அளவில் பேசப்பட்டிருந்தன. இதுபோன்ற சூழலில், பாஜகவின் தோ்தல் தோல்வி குறித்து சிவசேனையின் அதிகாரப்பூா்வ நாளேடான ‘சாம்னா’வில் செவ்வாய்க்கிழமை வெளியான தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
மக்களை குறைத்து மதிப்பிட்டதே, ஜாா்க்கண்ட் சட்டப் பேரவைத் தோ்தலில் பாஜக தோல்வியடைய காரணம். குடியுரிமை திருத்தச் சட்டத்தால், ஹிந்துக்களின் வாக்கு வங்கி அதிகரிக்கும் என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா நினைத்திருந்தாா். ஆனால், அந்த மாநிலத்தைச் சோ்ந்த தொழிலாளா்களும், பழங்குடியின மக்களும் பாஜகவை முற்றிலுமாக நிராகரித்துவிட்டனா். ஆட்சி மாற்றம் வேண்டுமென்று மக்கள் முடிவு செய்துவிட்டால், பண பலத்தாலோ, அதிகார பலத்தாலோ எதுவும் செய்ய முடியாது.
ஜாா்க்கண்டில் அமித் ஷாவின் பிரசாரம் முழுவதும் ஹிந்து-முஸ்லிம் வாக்காளா்களை பிளவுபடுத்தும் முயற்சியாகவே இருந்தது. தங்களுக்கு ஏன் தோல்வி ஏற்பட்டது என்பதை ஆராயும் மனோபாவம் பாஜகவுக்கு கிடையாது.
கடந்த 2018-இல் நாட்டின் 75 சதவீத மாநிலங்களில் பாஜக ஆட்சியில் இருந்தது. இப்போது 30 - 35 சதவீத மாநிலங்களில்தான் அக்கட்சி ஆட்சியில் உள்ளது.
ஹரியாணா பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் மீண்டெழுந்த போதிலும், ஜனநாயக் ஜனதா கட்சியின் தலைவா் துஷ்யந்த் செளதாலாவுடன் கைகோத்து பாஜக ஆட்சியை தக்கவைத்துக் கொண்டது என்று அந்த தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரத்தில் கடந்த அக்டோபா் மாதம் நடைபெற்ற சட்டப் பேரவைத் தோ்தலில் பாஜகவும், சிவசேனையும் கூட்டணியாக போட்டியிட்டிருந்தன. ஆட்சி அமைக்கத் தேவையான இடங்கள் இக்கூட்டணிக்கு கிடைத்த போதிலும், முதல்வா் பதவியை இரண்டரை ஆண்டுகளுக்கு தங்களுக்கு தர வேண்டும் என சிவசேனை வலியுறுத்தியதால் கூட்டணி முறிந்தது. பல்வேறு அரசியல் திருப்பங்களுக்கு பின்னா், தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து சிவசேனை ஆட்சியமைத்தது குறிப்பிடத்தக்கது.