Enable Javscript for better performance
விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாக்கப்படும்: குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்- Dinamani

சுடச்சுட

    

    விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாக்கப்படும்: குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்

    By DIN  |   Published on : 01st February 2019 04:59 AM  |   அ+அ அ-   |    |  

    ramnathgovind

    "விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கவும், பொருளாதாரத்தின் அடித்தளமாக விளங்கும் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளுக்கு நிரந்தரத் தீர்வு காணவும் அரசு முயற்சி செய்து வருகிறது' என்று நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றிய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்தார்.மேலும், சமூக நீதிக்கான அரசின் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் குறித்தும் அவர் பட்டியலிட்டார். 
    நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் வியாழக்கிழமை தொடங்கியது. இதையொட்டி, நாடாளுமன்ற மைய அரங்கில் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் சுமார் ஒரு மணி நேரம் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்:
    2019-ஆம் ஆண்டு ஜனநாயகத்திற்கான ஒரு முக்கிய மைல்கல்லாகும். இந்தியக் குடிமக்களாகிய நாம், மகாத்மா காந்தியின் 150-ஆவது பிறந்த ஆண்டைக் கொண்டாடி வருகிறோம். 
    நிரந்தரத் தீர்வு: விவசாயிகளின் வருமானத்தை 2022-க்குள் இரட்டிப்பாக்க அரசு உறுதிபூண்டுள்ளது. விவசாயிகளின் தேவைகளை அறிந்து அவர்களின் பிரச்னைகளுக்கு நிரந்தரத் தீர்வு காணப்படும். நவீன உபகரணங்களை வாங்குவதற்காகவும், விளை பொருள்களை விற்பனை செய்வதற்காகவும் விவசாயிகளுக்கு பல்வேறு உதவிகளை அரசு அளித்து வருகிறது. உற்பத்திச் செலவைக் குறைக்கவும், பயிர்களுக்கு ஆதார விலையை அளிக்கவும் புதிய அணுகுமுறையுடன் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
    22 பயிர் வகைகளுக்காகும் உற்பத்தி செலவை விட, ஒன்றரை மடங்கு அதிகமாக குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயித்து மத்திய அரசு வரலாற்று முடிவு எடுத்துள்ளது.  நிலுவையில் உள்ள 99 பாசன வசதி திட்டங்களில் 71 திட்டங்கள் அடுத்த சில மாதங்களில் முடிக்கப்படும். குறைந்த விலையில் விவசாய காப்பீட்டு திட்டம் அளிக்கப்படுகிறது. இதுபோன்ற நடவடிக்கைகளால் நம் நாட்டின் 70 ஆண்டுகால வேளாண் முறையில் மாற்றம் ஏற்பட்டு, விவசாயிகளை பிரச்னையில் இருந்து மீட்கும். 
    நீலப் புரட்சி திட்டத்தின் மூலம் மீனவர்களுக்கு ஆழ்கடல் மீன்பிடிப்பு பயிற்சியும், நவீன உபகரணங்கள் வாங்கவும் நிதி உதவி அளிக்கப்படுகிறது. 
    புதிய இந்தியா: 2014-ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கு முன்பு நாடு கணிக்க முடியாத நிலைமையைக் கடந்து கொண்டிருந்தது. தேர்தலுக்குப் பிறகு, எனது அரசு பதவியேற்று, ஒரு புதிய இந்தியாவை உருவாக்க உறுதிபூண்டது. ஒழுக்கமின்மை, ஊழல், செயல்பாடுகள் இல்லாத அமைப்புகள் ஆகியவற்றுக்கு இடமில்லாதது தான் அந்த "புதிய இந்தியா'. கடந்த நான்கரை ஆண்டுகளில் எனது அரசு நாட்டு மக்களிடம் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது.
    ஆயுள் காப்பீட்டுத் திட்டம்: அரசின் சேவைகளின் பயன்கள் சமூகத்தின் கீழ்த்தட்டுமக்கள் வரை சென்றடைவதிலும் அரசு உறுதியாக இருந்தது. இதற்காக கல்வி, விவசாயம், சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் எண்ணற்ற திட்டங்களைத் தீட்டி செயல்படுத்தியது. பிரதமரின் ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 21 கோடி மக்கள் கொண்டு வரப்பட்டுள்ளனர். சௌபாக்யா திட்டத்தின் கீழ் 2 கோடி வீடுகளுக்கு மின்சார இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. 
    நாடு முழுவதும் கிராமங்களிலும், நகரங்களிலும் புதிய எய்ம்ஸ் மருத்துவமனைகள், நல மையங்களை உருவாக்குவதன் மூலம் சுகாதாரக் கவனிப்பு உள்கட்டமைப்பை அரசு வலுப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது. "இஸ்லாமிய மகள்கள்' பயம், கவலை தோய்ந்த வாழ்க்கையில் இருந்து விடுபடும் வகையில் சம உரிமையை அவர்களுக்கு வழங்க முத்தலாக் சட்டத்தை நிறைவேற்ற அரசு கடும் முயற்சி செய்து வருகிறது.
    வருமான வரித் தாக்கல் 2 மடங்கு உயர்வு: வருமான வரிக் கணக்குகள் தாக்கல் செய்வோர் எண்ணிக்கை 2014-ஆம் ஆண்டை ஒப்பிடும்போது 6.8 கோடி எனும் அளவில் இரு மடங்காக உயர்ந்துள்ளது. முத்ரா கடன் திட்டத்தில் 15 கோடி பேருக்கு கடன் வழங்கப்பட்டுள்ளது. அதில் 73 சதவீதம் பேர் பெண்கள் ஆவர். 
    பொருளாதார வளர்ச்சி: நாட்டின் பொருளாதார வளர்ச்சி (ஜிடிபி) சராசரியாக 7.3 சதவீதம் என்ற அளவில் வளர்ந்து வருகிறது. இதன் மூலம் உலகில் ஆறாவது மிகப்பெரிய பொருளாதாரமாக இந்தியா திகழ்கிறது. சர்வதேச வர்த்தகத்தில் இந்தியா முக்கியப் பங்களிப்பை அளித்து வருகிறது. 
    டிஜிட்டல் இந்தியா திட்டம்: குறைவான டேட்டா கட்டணங்கள் டிஜிட்டல் இந்தியா திட்டத்தை முன்னெடுத்துச் செல்ல உதவியாக உள்ளது. 2014-இல் ரூ.250 ஆக இருந்த ஒரு ஜிபி டேட்டா கட்டணம்,  தற்போது ரூ.10-ரூ.12 ஆக குறைந்துள்ளது.
    இந்தியாவில் அடைக்கலம் தேடும் நிலைக்குத் தள்ளப்பட்டவர்களுக்கு இந்தியக் குடியுரிமை அளிப்பதற்கு குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதா உதவும் என்றார் ராம்நாத் கோவிந்த்.

    ரஃபேலால் தாக்கும் திறன் மேலும் அதிகரிக்கும்

    பல ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு இந்திய விமானப் படை அதன் புதிய அல்ட்ரா நவீன போர் விமானம் ரஃபேலை இன்னும் சில மாதங்களில் வரவேற்கத் தயாராகி வருகிறது. இதன் மூலம் விமானப் படையின் தாக்கும் திறன் மேலும் அதிகரிக்கும். ராணுவத்துக்கு நவீன தளவாடங்கள் வாங்க கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தினாலும், "மேக் இன் இந்தியா' திட்டத்தின் மூலம் உள்நாட்டு ஆயுத உற்பத்தியாலும் இந்திய ராணுவத்தின் பலம் அதிகரித்துள்ளது. எல்லைகளில் தீவிரவாதிகள் முகாம்கள் மீது துல்லியத் தாக்குதல் நடத்தியதன் மூலம் இந்தியா அதன் புதிய கொள்கையை வெளிப்படுத்தியுள்ளது என்றார் ராம்நாத் கோவிந்த். ரஃபேல், துல்லியத் தாக்குதல் ஆகியவற்றை குடியரசுத் தலைவர் குறிப்பிடும்போது மத்திய அமைச்சர்கள், ஆளும் கட்சி எம்பிக்கள் தொடர்ந்து மேஜையைத் தட்டி ஆதரவை வெளிப்படுத்தினர்.

    ஊழலுக்கு எதிரான போர்தான் பண மதிப்பிழப்பு 

    அரசு கொண்டு வந்த பண மதிப்பிழப்பு நடவடிக்கையானது ஊழல், கருப்புப் பணம் மீது அரசு தொடுத்த போரின் தருணமாகும். இந்த நடவடிக்கையால் முறையான அமைப்புக்கு வெளியே இருந்த பணம், தேசத்தின் பொருளாதார வரம்புக்குள் கொண்டுவரப்பட்டது. பினாமி சொத்து சட்டம், பணப் பரிவர்த்தனை தடுப்புச் சட்டம், தலைமறைவு பொருளாதாரக் குற்றவாளிகளுக்கு எதிரான சட்டம் ஆகியவை மூலம் ரூ.50 ஆயிரம் கோடிக்கும் மேலான சொத்துகள் பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார் ராம்நாத் கோவிந்த்.

    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    flipboard facebook twitter whatsapp