Enable Javscript for better performance
ஸ்டெர்லைட் வளாகத்தில் பசுமைப் பகுதியை அதிகரிக்கும் உத்தரவு அமல்படுத்தப்படவில்லை: தமிழக அரசு வாதம்- Dinamani

சுடச்சுட

    

    ஸ்டெர்லைட் வளாகத்தில் பசுமைப் பகுதியை அதிகரிக்கும் உத்தரவு அமல்படுத்தப்படவில்லை: தமிழக அரசு வாதம்

    By DIN  |   Published on : 01st February 2019 03:10 AM  |   அ+அ அ-   |    |  

    supreme-court3

    ஸ்டெர்லைட் ஆலை வளாகத்தில் பசுமைப் பகுதியை அதிகரிக்க வேண்டும் என்ற உத்தரவு முழுமையாக அமல்படுத்தப்படவில்லை என்று தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்தது.
    ஸ்டெர்லைட் ஆலை மூடல் விவகாரம் தொடர்பாக வேதாந்தா குழுமம், தமிழக அரசு, வைகோ உள்ளிட்டோர் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மேல்முறையீட்டு மனுக்கள் உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஆர்.எஃப். நாரிமன், நவீன் சின்ஹா ஆகியோர் அடங்கிய அமர்வில் வியாழக்கிழமை விசாரணை நடைபெற்றது. அப்போது தமிழக அரசின் சார்பில் மூத்த வழக்குரைஞர் குரு கிருஷ்ண குமார் முன்வைத்த வாதம்: 
    ஸ்டெர்லைட் ஆலை வளாகத்தில் பசுமைப் பகுதியை அதிகரிக்க வேண்டும் என்ற உத்தரவு முழுமையாக அமல்படுத்தப்படவில்லை. இந்த உத்தரவு கடந்த 12 ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது. 
    தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அமைத்த தருண் அகர்வால் குழுவும் ஆலை வளாகத்தில் பசுமைப் பகுதியை ஏற்படுத்த வேண்டும் எனப் பரிந்துரைத்துள்ளது. ஸ்டெர்லைட் ஆலை செயல்பாடுகளை தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தொடர்ந்து கண்காணித்து வருகிறது. 
    அதே வேளையில் சுற்றுச்சுழல், மாசுக் கட்டுப்பாட்டு விதிகளை ஸ்டெர்லைட் ஆலை மீறி வருவதும் வாடிக்கையாக உள்ளது. மாசுக் கட்டுப்பாட்டு விதிகளை கடைப்பிடிக்குமாறு ஸ்டெர்லைட் ஆலைக்கு அவ்வப்போது தொடர்ந்து உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு வருகின்றன. இதுபோன்ற சூழலில், மாசுக் கட்டுப்பாட்டு விதிகளை நடைமுறைப்படுத்தாமல், ஆலையை இயங்க அனுமதிக்குமாறு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் கூற முடியுமா? என்றார்.
    வேதாந்தா குழுமம் சார்பில் மூத்த வழக்குரைஞர் அரிமா சுந்தரம் வாதிடுகையில் கூறியதாவது: 
    தமிழகம் முழுவதும் நிலத்தடி நீரில் கரைந்துள்ள திடப்பொருள்களின் (டிடிஎஸ்) அளவு சராசரியை விட அதிகமாக உள்ளது. தருண் அகர்வால் குழு ஒரே நாளில் விசாரணையை நடத்தி அறிக்கை சமர்பிப்பது போன்ற தோற்றம் உருவாக்கப்படுகிறது. குறிப்பிட்ட விதிகளையும், பரிந்துரைகளையும் ஸ்டெர்லைட் ஆலை மீறுவதில்லை. ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக, குறிப்பாக தேர்தல் நடைபெறும் போது, அரசியல் ரீதியான போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக ஸ்டெர்லைட் ஆலைக்கு தொல்லைக் கொடுக்கப்பட்டுள்ளது. 
    சிப்காட்டில் 67 தொழிற்சாலைகள் இயங்கி வரும் போது, ஸ்டெர்லைட் ஆலை மட்டும் சீல் வைக்கப்படுவது எப்படி முன்னெச்சரிக்கை கொள்கையாக இருக்க முடியும்? மாசு ஏற்படுத்தியற்காக கடந்த காலங்களில் ஸ்டெர்லைட் ஆலை மூடப்படவில்லை. 
    ஆலைக்கு சீல் வைக்கப்படுவதற்கு முன்பு, ஸ்டெர்லைட் ஆலை விளக்கம் அளிக்க வாய்ப்பு அளிக்கப்படவில்லை. சுற்றுச்சூழல்சார் அனைத்து விவகாரங்களையும் விசாரிக்க தேசிய பசுமைத் தீர்ப்பாயத்துக்கு அனைத்து அதிகாரங்களும் உள்ளன என்றார் அவர். இதையடுத்து, இந்த வழக்கு விசாரணையை பிப்ரவரி 5-ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    kattana sevai
    flipboard facebook twitter whatsapp