அம்பானிக்கு 30 ஆயிரம் கோடி; விவசாயிகளுக்கு சில்லரை காசுகளா? மோடி அரசுக்கு ராகுல் கேள்வி 

தொழிலதிபர் அனில் அம்பானிக்கு ரூ.30 ஆயிரம் கோடி கொடுக்கும் மோடி அரசு, நாட்டில் உள்ள விவசாயிகளுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.17 மட்டுமே
அம்பானிக்கு 30 ஆயிரம் கோடி; விவசாயிகளுக்கு சில்லரை காசுகளா? மோடி அரசுக்கு ராகுல் கேள்வி 


பாட்னா: தொழிலதிபர் அனில் அம்பானிக்கு ரூ.30 ஆயிரம் கோடி கொடுக்கும் மோடி அரசு, நாட்டில் உள்ள விவசாயிகளுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.17 மட்டுமே கொடுப்பதா என, விவசாயிகளுக்கு நிதி வழங்கும் மத்திய அரசு திட்டத்தை விமர்சனம் செய்துள்ளார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி. 

பிகாரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கலந்துகொண்டு பேசுகையில், “மத்தியில் ஆளும் மோடி தலைமையிலான பாஜக அரசு தொழிலதிபர்களின் கடன்களை தள்ளுபடி செய்யலாம், ஆனால் விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்யாது. அதாவது அனில் அம்பானிக்கு ரூ.30 ஆயிரம் கோடி கொடுக்கும் மோடி அரசு, நாட்டில் உள்ள விவசாயிகளுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.17 மட்டுமே அளிப்பதா? என்றும் ஊழலுக்கு கோடிகளில் வழங்கப்படுகிறது, விவசாயிகளுக்கு சில்லரையாக வழங்கப்படுகிறது என மோடி அரசின் இடைக்கால நிதிநிலை அறிக்கையை விமர்சித்தார். 

பாஜகவின் வாக்குறுதிகளைதான் வழங்குகிறது. ஆனால் கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவது காங்கிரஸ்தான். பிரதமர் மோடி வங்கி கணக்கில் ரூ. 15 லட்சம் போடப்படும் என கூறினார், ஆனால் யாராவது பெற்றீர்களா? இப்போது இடைக்கால நிதிநிலை அறிக்கையில் ‘பிரதம அமைச்சரின் கிசான் சம்மான் நிதி யோஜனா’ என்ற திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.17 வீதம் ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் 3 தவணையாக வழங்கப்படும் என விவசாயிகளை மிகவும் மோசமாக இழிவுபடுத்தி உள்ளனர். இதற்கு அவர்கள் சரியான பதிலடி கொடுப்பார்கள். விவசாயிகள் தங்களுக்கு பாஜக வேண்டாம் என்றும் காங்கிரஸ் தான் என்று கூறி வருகின்றனர்.

கடந்த மக்களவைத் தேர்தலின் போது, ஆண்டுதோறும் 2 லட்சம் வேலைவாய்ப்பு வழங்குவதாக பாஜக வாக்குறுதி அளித்தது. ஆனால் தேர்தலில் தந்த வாக்குறுதியை மோடி அரசு நிறைவேற்றவில்லை. 

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் விவசாய கடன் தள்ளுபடி செய்யப்படும் என வாக்குறுதி அளித்தோம். அதன்படி, ஆட்சிக்கு வந்த சில நாட்களிலே, மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கரில் விவசாய கடன்களை தள்ளுபடி செய்துள்ளோம்.

பிரதமர் மோடி திடீரென்று ஒருநாள் இரவு 8 மணியளவில் கருப்பு பணத்தை ஒழிக்கப் போவதாக கூறி, ரூ.500,1000 நோட்டுகள் செல்லாது என அறிவித்தார். இதனால் ஏழை எளிய மக்கள்தான் வங்கி முன் பல நாட்கள் வரிசையில் நின்றார்களே தவிர, கருப்பு பணமோ, ஊழலோ நாட்டில் ஒழிய வில்லை. ரூபாய் நோட்டு மதிப்பிழப்பு நடவடிக்கை என்பது பெரிய மோசடி. 

காங்கிரஸ் கட்சி நாட்டுக்கு விவசாயப் புரட்சி, வெண்மை புரட்சி, தொழிநுட்ப புரட்சி ஆகியவற்றை தந்தது. ஆனால் மோடியின் 5 ஆண்டு கால ஆட்சியில் பொதுமக்களின் பணத்தை அம்பானி, மல்லையா, நீரவ் மோடி போன்ற கோடீஸ்வரர்களுக்கு கோடிக்கணக்கில் வாரி வழங்கி அவர்களுக்கு நல்ல காலத்தை வரவழைத்துள்ளார்.  

ஆனால், பாஜகவை போல் நாங்கள் பொய் வாக்குறுதிகளை அளிக்கவில்லை. யாரின் வங்கிக் கணக்கிலும் ரூ.15 லட்சம் செலுத்துவோம் என்று சொல்லவில்லை. காங்கிரஸ் மத்தியில் ஆட்சி அதிகாரத்திற்கு வந்தவுடன் நாட்டின் ஏழை எளியவர்களுக்கு குறைந்தபட்ச வருமானத்தை உறுதி செய்வோம். நாடு முழுவதும் விவசாயிகளின் விவசாய கடன்கள் ரத்து செய்வோம் என்று கூறினார்.

பிகார் இப்போது வேலைவாய்ப்பின் மையமாகக் கருதப்படுவதாகவும், மத்தியில் காங்கிரல் ஆட்சி அதிகாரத்திற்கு வந்தால், பாட்னா பல்கலைக்கழகத்திற்கு மத்திய பல்கலைக்கழக தகுதி வழங்கப்படும். 

உ.பி.யில் பின்வாசல் வழியாக ஆட்சியை பிடித்தது பாஜக. நாங்கள் அப்படி அல்ல. பிகாரில் லாலு கூட்டணியுடன் முன்வாசல் வழியே காங்கிரஸ் அடியெடுத்து வைத்து சிக்ஸர் அடிக்கும்.

மோடிஜி, நீங்கள் எவ்வளவு முடியுமோ அவ்வளவு கூச்சலிடுங்கள், கடந்த நான்கு ஆண்டுகளில் நீங்கள் நாட்டிற்கு ஒன்றும் செய்யவில்லை என கடுமையாக விமர்சித்து பேசினார் ராகுல். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com