கொல்கத்தா காவல்துறை ஆணையர் ராஜீவ் குமாருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை: மத்திய அரசு உத்தரவு 

கொல்கத்தா காவல்துறை ஆணையர் ராஜீவ் குமாருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
கொல்கத்தா காவல்துறை ஆணையர் ராஜீவ் குமாருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை: மத்திய அரசு உத்தரவு 

கொல்கத்தா: கொல்கத்தா காவல்துறை ஆணையர் ராஜீவ் குமாருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேற்கு வங்கத்தில் "சாரதா சிட்பண்ட்ஸ்', "ரோஸ் வேலி' ஆகிய இரு நிதி நிறுவனங்களில் முதலீட்டாளர்களின் கோடிக்கணக்கான ரூபாய் பணம் மோசடி செய்யப்பட்டது தொடர்பான வழக்குகளை, சிபிஐ விசாரித்து வருகிறது. மேற்கண்ட நிறுவனங்களுடன் தொடர்புடையதாக திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் ஏற்கெனவே கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பான மின்னணு ஆதாரங்களை அழிக்க முயற்சிப்பதாக, கொல்கத்தா மாநகர காவல்துறை ஆணையர் ராஜீவ் குமார் மீது குற்றச்சாட்டு எழுந்தது.

இதுதொடர்பாக விசாரணை நடத்த கொல்கத்தாவிலுள்ள அவரது இல்லத்துக்கு சிபிஐ அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை சென்றனர். ஆனால், உரிய ஆவணங்களின்றி விசாரணை நடத்த வந்துள்ளதாக கூறி, அவர்களை காவல்துறை உயரதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.

பின்னர், அவர்களை வலுக்கட்டாயமாக  காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். சிறிது நேரத்துக்கு பிறகு, சிபிஐ அதிகாரிகள் விடுவிக்கப்பட்டனர். மேற்கு வங்க காவல்துறையினரின் இந்த நடவடிக்கை பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனிடையே மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிராக மம்தா பானர்ஜி, "அரசமைப்புச் சட்டத்தைப் பாதுகாப்போம்' என்ற பெயரில் கொல்கத்தாவின் மெட்ரோ சேனல் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவில் தர்னாவை தொடங்கினார்.   அரசு அதிகாரியான கமிஷனர் ராஜீவ் குமாரும் அதில் கலந்து கொண்டது சர்ச்சையாகியது. சில போலீஸ் அதிகாரிகளும் இதில் கலந்து கொண்டதாக பின்னர் தகவல்கள் தெரிவித்தன.

இந்நிலையில் ராஜீவ் குமாருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. 

ராஜீவ் குமாருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க மேற்கு வங்காள அரசிடம் மத்திய உள்துறை அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது.

இதுதொடர்பான மேற்கு வங்காள அரசுக்கு உள்துறை அமைச்சகம் எழுதியுள்ள கடிதத்தில் ராஜீவ் குமார் தனது பணி விதிமுறைகளை மீறியதாகவும்,  எனவே அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com