
சமையல் எரிவாயு பயன்பாட்டில் உலக அளவில் இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது என்று மத்திய எண்ணெய் வளத்துறை செயலாளர் எம்.எம்.குட்டி தெரிவித்தார்.
தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆசிய சமையல் எரிவாயு மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றியபோது அவர் இதைக் கூறினார். கடந்த 2014-15 நிதியாண்டில் 14.8 கோடியாக இருந்த சமையல் எரிவாயு நுகர்வோரின் எண்ணிக்கை, 2017-18 காலகட்டத்தில் 22.4 கோடியாக அதிகரித்தது என்றும் அவர் தெரிவித்தார். மாநாட்டில் எம்.எம்.குட்டி மேலும் பேசியதாவது:
கிராமப்புற மக்களிடம் சமையல் எரிவாயு பயன்பாட்டை கணிசமாக அதிகரித்ததன் மூலமாக, சமையல் எரிவாயு கொள்முதல் 8.4 சதவீதம் அதிகரித்துள்ளது. ஆண்டொன்றுக்கு சுமார் 2.25 கோடி டன் சமையல் எரிவாயுவை பயன்படுத்துவதன் மூலமாக, சமையல் எரிவாயு பயன்பாட்டில் உலக அளவில் இரண்டாம் இடத்தில் இந்தியா உள்ளது.
பெட்ரோலிய அமைச்சகத்தின் இலக்கு மற்றும் கணிப்புகளின்படி, வரும் 2025ம் ஆண்டில் இந்தியாவின் சமையல் எரிவாயு பயன்பாடு 3.03 கோடி டன்னாக இருக்கும்; 2040ம் ஆண்டில் அது 4.06 கோடி டன்னாக இருக்கும்.
நாடெங்கிலும் சமையல் எரிவாயு பயன்பாட்டை ஊக்குவிப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு முன்னெடுத்தது. குறிப்பாக, கிராமப்புறங்களில் ஊக்குவிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அங்கெல்லாம், உடலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய, இயற்கையை மாசுபடுத்தக் கூடிய பாரம்பரிய எரிபொருள்களைத்தான் சார்ந்திருந்தனர். பிரதமரின் இலவச எரிவாயு இணைப்பு வழங்கும் திட்டம், கடந்த 2016 மே 1ம் தேதி தொடங்கப்பட்டதில் இருந்து 6.31 கோடி எரிவாயு இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. அடுத்த ஆண்டு மார்ச் 31ம் தேதிக்குள் அந்த எண்ணிக்கையை 8 கோடியாக உயர்த்துவோம் என்றார் அவர்.
திட்டம் வெற்றி: இந்த நிகழ்ச்சியில் பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசும்போது, ஏழை குடும்பங்களுக்கு இலவச எரிவாயு இணைப்பு வழங்கும் திட்டத்தை தொடங்கியபோது முதலில் 5 கோடி இணைப்புகளை வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது என்றும், அந்தத் திட்டம் வெற்றியடைந்ததைத் தொடர்ந்து, இலக்கு 8 கோடியாக மாற்றியமைக்கப்பட்டது என்றும் தெரிவித்தார்.
கடந்த 2014-இல், மொத்த குடும்பங்களில் 55 சதவீதம் பேர் சமையல் எரிவாயு உருளையை பயன்படுத்தியதாகவும், தற்போது அது 90 சதவீதமாக அதிகரித்துள்ளது என்றும் அவர் கூறினார்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...