
நீண்ட கால விசா திட்டத்தின் கீழ், கடந்த 7 ஆண்டுகளில் பாகிஸ்தானைச் சேர்ந்த 36, 000-க்கும் மேற்பட்டோருக்கும், 236 வங்கதேசத்தினருக்கும் விசா அளிக்கப்பட்டுள்ளதாக மக்களவையில் செவ்வாய்க்கிழமை தெரிவிக்கப்பட்டது.
இதுதொடர்பாக மக்களவையில் எழுத்துப்பூர்வமாக கேட்கப்பட்ட கேள்விக்கு, மத்திய உள்துறை இணையமைச்சர் கிரண் ரிஜிஜு கூறியதாவது:
கடந்த 2011-18 ஆம் ஆண்டு வரை பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த 36, 610 பேருக்கு நீண்ட கால விசா வழங்கப்பட்டுள்ளது. இதே காலகட்டத்தில் வங்கதேசத்தை சேர்ந்த 236 பேருக்கு நீண்ட கால விசா அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 2017-ஆம் ஆண்டு வரை மியான்மர் நாட்டைச் சேர்ந்த 884 பேருக்கு நீண்ட கால விசா திட்டத்தின் கீழ் விசா வழங்கப்பட்டது. ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்தவர்களுக்கு நீண்ட கால விசா வழங்கும் நடைமுறை கடந்த 2017-ஆம் ஆண்டு ஜூலை 17-ஆம் தேதி முதல் அமலில் உள்ளது. எனினும் இதுவரை ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு நீண்ட கால விசா வழங்கப்படவில்லை. கடந்த 7 ஆண்டுகளில் நீண்ட கால விசா பெறும் விண்ணப்பங்கள் இணைய வழியிலும், நேரடியாகவும் சமர்ப்பிக்கப்பட்டன. எனினும், மாநில வாரியாக நீண்ட கால விசாவுக்கு விண்ணப்பித்தவர்கள் குறித்த தகவல்கள் மத்திய அரசிடம் இல்லை என்று அவர் கூறினார்.
வெளிநாடுகளைச் சேர்ந்த ஆராய்ச்சி மாணவர்கள், பணி நிமித்தமாக இந்தியாவுக்கு வருபவர்கள் உள்ளிட்டோர் இந்தியாவில் 180 நாள்களுக்கு அதிகமாக தங்க விரும்பினால் அவர்களுக்கு சிறப்பு சலுகைகளின் கீழ் நீண்ட கால விசா வழங்கப்பட்டு வருகிறது.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...