
மகாராஷ்டிர மாநிலம், பீமா-கோரேகானில் ஏற்பட்ட வன்முறை தொடர்பான வழக்கில், சமூக ஆர்வலர் ஆனந்த் தெல்தும்டே வரும் 12-ஆம் தேதி வரை கைது செய்யப்பட மாட்டார் என புணே காவல் துறையினர் மும்பை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
பீமா-கோரேகான் பகுதியில் கடந்த 2017-ஆம் ஆண்டு டிசம்பர் 31-ஆம் தேதி நடந்த எல்கார் பரிஷத்' நிகழ்ச்சியில் வன்முறை வெடித்தது. அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற சமூக ஆர்வலர்கள் பலர், வன்முறையைத் தூண்டும் விதமாகவும், வெறுப்புணர்வை வளர்க்கும் வகையிலும் பேசியதாலேயே வன்முறை ஏற்பட்டதாகக் காவல் துறையினர் தெரிவித்தனர்.
இந்த விவகாரத்தில், ஆனந்த் தெல்தும்டே உள்ளிட்ட சமூக ஆர்வலர்கள் மீது சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் புணே காவல் துறையினர் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தனர். இதைத் தொடர்ந்து கடந்த 2-ஆம் தேதி தெல்தும்டேவை காவல் துறையினர் கைது செய்தனர். ஆனால், நீதிமன்றத் தலையீட்டின் காரணமாக அன்றே அவர் விடுவிக்கப்பட்டார்.
இந்நிலையில், தன்னைக் கைது செய்வதற்குத் தடை விதிக்கக் கோரியும், முன்ஜாமீன் கோரியும் மும்பை உயர்நீதிமன்றத்தில் தெல்தும்டே மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை நீதிபதி என்.டபிள்யூ. சாம்ப்ரே முன் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
அப்போது புணே காவல் துறை சார்பில் ஆஜரான அரசு வழக்குரைஞர் அருணா பாய், சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ள நபருக்கு முன்ஜாமீன் வழங்க சட்டத்தில் அனுமதியில்லை.
மேலும், தன் மீதான முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்யக் கோரி அவர் ஏற்கெனவே தாக்கல் செய்த மனுவைத் தீர விசாரித்து, அதனை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. எனவே, முன்ஜாமீன் கோரும் அவரது மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டும்'' என்று வாதிட்டார்.
தெல்தும்டே தரப்பு வழக்குரைஞர் மிகிர் தேசாய் வாதிடுகையில், சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளவருக்கு முன்ஜாமீன் அளிக்க சட்டத்தில் விதிவிலக்குகள் உள்ளன'' என்றார். இதைத் தொடர்ந்து, தெல்தும்டேவை கைது செய்ய உச்சநீதிமன்றம் விதித்திருந்த தடை வரும் 11-ஆம் தேதியுடன் முடிவடைகிறது.
எனவே, வரும் 12-ஆம் தேதி நள்ளிரவு வரை அவரை நாங்கள் கைது செய்ய மாட்டோம். எங்கள் தரப்பு வாதங்களைப் பிரமாணப் பத்திரமாகத் தாக்கல் செய்ய கால அவகாசம் தேவைப்படுகிறது'' என்று அருணா பாய் தெரிவித்தார். இவற்றைக் கேட்ட நீதிபதிகள், பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய புணே காவல் துறையினருக்கு பிப்ரவரி 9-ஆம் தேதி வரை கால அவகாசம் அளித்து உத்தரவிட்டார்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...