மம்தா தர்னா வாபஸ்  

மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தா மாநகர காவல் ஆணையர் ராஜீவ் குமாரிடம் சிபிஐ விசாரணை நடத்த முயன்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து,
மம்தா தர்னா வாபஸ்  


மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தா மாநகர காவல் ஆணையர் ராஜீவ் குமாரிடம் சிபிஐ விசாரணை நடத்த முயன்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த 3 நாள்களாக மேற்கொண்டு வந்த தர்னா போராட்டத்தை அந்த மாநில முதல்வர் மம்தா பானர்ஜி செவ்வாய்க்கிழமை வாபஸ் பெற்றார்.
இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், உச்சநீதிமன்றத்தில் எங்களுக்கு சாதகமான உத்தரவு கிடைத்திருக்கிறது. இதையடுத்து, எதிர்க்கட்சித் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி, போராட்டத்தை வாபஸ் பெற முடிவு செய்தேன்' என்றார்.
முன்னதாக, நிதி நிறுவன மோசடி வழக்குகள் தொடர்பான ஆதாரத்தை அழிக்க முயற்சிப்பதாக, கொல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ் குமார் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து விசாரிக்க அவரது இல்லத்துக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை சிபிஐ அதிகாரிகள் சென்றனர். ஆனால், முறையான ஆவணங்களின்றி விசாரணை நடத்த வந்துள்ளதாக கூறி, அவர்களை காவல்துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். மேலும், வலுக்கட்டாயமாக வாகனத்தில் ஏற்றி, காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து, காவல் ஆணையருக்கு ஆதரவாக முதல்வர் மம்தா பானர்ஜி கொல்கத்தாவில் ஞாயிற்றுக்கிழமை இரவு தர்னா போராட்டத்தை தொடங்கினார். அரசமைப்புச் சட்டம், கூட்டாட்சி முறையை காப்போம்' என்ற பெயரில் கடந்த 3 நாள்களாக இப்போராட்டம் நடைபெற்றது.
தர்னா வாபஸ்: இந்நிலையில், நிதி நிறுவன மோசடி வழக்கு தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் முன் ராஜீவ் குமார் ஆஜராக வேண்டும். அதேசமயம், அவரை கைது செய்தல் உள்ளிட்ட அடுத்தகட்ட நடவடிக்கைகளை சிபிஐ மேற்கொள்ளக் கூடாது' என்று உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவு பிறப்பித்தது. இது, தங்களுக்கு கிடைத்த தார்மீக வெற்றி என்று கூறிய மம்தா பானர்ஜி, போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்தார். 
பாஜக மீது சாடல்: இதனிடையே, செய்தியாளர்களிடம்  மம்தா பானர்ஜி, கூறியதாவது: பிற கட்சியினரை மிரட்டி தங்களது கட்சியில் இணையச் செய்வதற்காக சிபிஐ போன்ற அமைப்புகளை மத்திய அரசு பயன்படுத்துகிறது. அவ்வாறு, பாஜகவில் இணைவோர் மீது சிபிஐ, அமலாக்கத் துறை, வருமான வரித் துறை என எந்த விசாரணையும் நடத்தப்படாது. 
சிபிஐ அமைப்பின் மீது பெரும் மரியாதை வைத்துள்ளேன். பிரதமர் மோடி, பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவின் கட்டளைகளை நிறைவேற்றுவதில் காட்டும் வேகத்தை, பிற வழக்குகளிலும் சிபிஐ காட்ட வேண்டும். என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com