
தலைமறைவு நிதி மோசடியாளராக அறிவிக்கப்பட்ட விஜய் மல்லையாவின் சொத்துகளை, வங்கிகளிடம் திருப்பி ஒப்படைக்க ஆட்சேபம் இல்லை என்று அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.
அதேவேளையில், தாங்கள் கோரும் தொகைக்கான உத்தரவாதத்தை, நீதிமன்றத்திடம் வங்கிகள் அளிக்க வேண்டும் என்று அமலாக்கத் துறை வலியுறுத்தியுள்ளது. இந்திய பொதுத் துறை வங்கிகளில் ரூ.9,000 கோடி அளவுக்கு கடன் பெற்று, அதனை திருப்பிச் செலுத்தாத தொழிலதிபர் விஜய் மல்லையா, கடந்த 2016-இல் பிரிட்டனுக்கு தப்பிவிட்டார். அவரை இந்தியாவுக்கு நாடு கடத்த, லண்டன் நீதிமன்றம் கடந்த ஆண்டு டிசம்பரில் உத்தரவிட்டது. இதையடுத்து, மல்லையாவை நாடு கடத்த பிரிட்டன் உள்துறை அமைச்சர் கடந்த திங்கள்கிழமை ஒப்புதல் வழங்கினார். இது, இந்தியாவின் முயற்சிகளுக்கு கிடைத்த வெற்றியாக கருதப்படுகிறது.
முன்னதாக, தலைமறைவு நிதி மோசடியாளர் சட்டத்தின்கீழ், தலைமறைவு நிதி மோசடியாளராக மல்லையா கடந்த ஆண்டு ஆகஸ்டில் அறிவிக்கப்பட்டார். அதன்படி முடக்கப்பட்ட மல்லையாவின் சொத்துகளை தங்களிடம் திருப்பி ஒப்படைக்கக் கோரி, வங்கிகள் கூட்டமைப்பின் சார்பில் மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு மீது அமலாக்கத் துறை செவ்வாய்க்கிழமை பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தது. அதில், மல்லையாவின் சொத்துகளை வங்கிகளிடம் திருப்பி ஒப்படைப்பதில் எங்களுக்கு ஆட்சேபம் இல்லை. அதை நீதிமன்றத்தின் முடிவுக்கு விட்டு விடுகிறோம். மனுதாரர்களில் ஒருவரை தவிர மற்ற அனைவரும் பொதுத்துறை வங்கிகள். எனவே, மீட்கப்பட வேண்டிய பணம் பொதுமக்களின் பணமாகும். எனவே, தாங்கள் கோரும் தொகைக்கான உத்தரவாதத்தை, நீதிமன்றத்திடம் வங்கிகள் அளிக்க வேண்டும்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...